மதுரை ‘சித்திரை திருவிழா’ கொடியேற்றத்துடன் தொடங்கியது..!

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி உள்ளது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் சித்திரை திருவிழா உலகப்புகழ் பெற்றது. பல லட்சம் பக்தர்கள் கூடும் விழா என்பதால் இன்று முதல் மதுரை விழாக்கோலம் காணத் தொடங்கி உள்ளது.

இதன்படி இன்று (செவ்வாய்க்கிழமை) காலை சுவாமி சன்னதி கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து இன்றில் இருந்து மீனாட்சி-சுந்தரேசுவரர், காலை, இரவு என இருவேளையும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வருவர்.

வரும் மே 6-ந் தேதி முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், இரவு 7.35 மணி முதல் 7.59 மணிக்குள் நடக்கிறது. 7-ந் தேதி திக்கு விஜயம் நடைபெறுகிறது.

சிகர நிகழ்ச்சியாக மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம் மே 8-ந் தேதி நடக்கிறது. அன்றைய தினம் காலை 8.35 மணிக்கு மேல் 8.59 மணிக்குள் திருக்கல்யாண நிகழ்வுகள் மேற்கு, வடக்கு ஆடி வீதி சந்திப்பில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெறும். இந்நிலையில் திருக்கல்யாணத்திற்கான ஆன்லைன் முன்பதிவு இன்று தொடங்குகிறது.

9-ந் தேதி மாசி வீதிகளில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெறுகிறது. 10-ந் தேதி தீர்த்தவாரியுடன் விழா நிறைவு பெறுகிறது. இதற்கிடையே கள்ளழகர் கோவில் திருவிழாவும் தொடங்கி நடைபெறும். 11-ந் தேதி கள்ளழகர் எதிர்சேவையும், முக்கிய நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளுதல் 12-ந் தேதியும் நடக்கிறது.

இந்நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சார்பில் சித்திரை விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் சித்திரை வீதிகளில் பிரமாண்டமான பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது. இது தவிர திருக்கல்யாணம் நடைபெறும் பகுதியான வடக்கு, மேற்கு ஆடி வீதியில் பந்தல் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

விழா நாட்களில் மீனாட்சி, சுந்தரேசுவரர் பஞ்சமூர்த்திகளுடன் காலை, இரவில் 4 மாசி வீதிகளிலும் வலம் வருவதால் விட்டவாசல், அம்மன் சன்னதி தெரு, மாசி வீதிகளிலும் போடப்படும் பந்தல்களை சுவாமி வாகனங்கள் தட்டாதவாறு 30 அடி உயரத்திற்கு மேல் அமைத்துக்கொள்ள வேண்டும். மேலும் வேப்பிலை தோரணங்களையும் சுவாமி வாகனங்கள் தட்டாமல் அமைக்கும்படி பொதுமக்கள், வியாபாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

சித்திரை திருவிழாவில் சுவாமி வீதி உலா வரும் நேரங்களில் பக்தர்களால் சுவாமிக்கு உகந்த மாலைகள் சாத்துப்படி செய்யலாம். ஆனால் கேந்திப்பூ, மருதை வேர்கள் வைத்து கட்டப்பட்ட மாலைகள் சாத்துப்படிக்கு ஏற்று கொள்ளப்படமாட்டாது.

திருக்கல்யாணத்தன்று மூலவர் அம்மன், சுவாமிக்கும், உற்சவர் அம்மன், சுவாமிக்கும் கோவில் நிர்வாகத்தின் சார்பில் மட்டுமே பட்டு பரிவட்டங்கள் சாத்தப்படும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!