நடிகர் சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் ஜப்தி உத்தரவை எதிர்த்து நடிகர் பிரபு வழக்கு தொடர்ந்திருந்தார், இதன் பிறகு பிரபு குடும்பத்திற்குள் பல்வேறு பிரச்னைகள் எழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்திருக்கிறது. இதுதொடர்பான முழு விவரங்களை இதில் காணலாம்.

நடிகர் சிவாஜி கணேசனின் பேரன் துஷ்யந்த் மற்றும் அவரது மனைவி அபிராமி ஆகியோர் ஈசன் புரொடக்ஷன் என்ற நிறுவனத்தில் பங்குதாரராக உள்ளனர். இந்நிறுவனம் சார்பில் விஷ்ணு விஷால், நிவேதா பெத்துராஜ் நடிப்பில் ஜெகஜால கில்லாடி என்ற படம் தயாரிக்கப்பட்டது. இப்படத்தின் தயாரிப்பு பணிக்காக ஈசன் புரொடக்ஷன் ரூ.3.74 கோடி தனபாக்கியம் என்டர்பிரைசஸ் நிறுவனத்திடம் கடனாக பெற்றுள்ளனர். இந்த கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையில் வட்டி அதிகரித்து ரூ.3.74 கோடி கடன் 9 கோடியாக உயர்ந்திருக்கிறது. இந்த கடன் ஒப்பந்தத்தில் ஆண்டுக்கு 30% வட்டியுடன் திருப்பி அளிப்பதாக உறுதி அளித்துள்ளனர்.
இந்நிலையில், கடன் தொகையை திருப்பித் தராததால் தனபாக்கியம் என்டர்பிரைசஸ் நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. அப்போது இந்த பிரச்சனை தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ரவீந்திரன் மத்தியஸ்தராக நியமிக்கப்பட்டார். மத்தியஸ்தர் கடன் தொகையை வட்டியுடன் 9.39 கோடி ரூபாய் வசூலிக்க ஏதுவாக ஜெகஜால கில்லாடி படத்தின் அனைத்து உரிமைகளையும் தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு ஒப்படைக்கும்படி உத்தரவிட்டார். மேலும், இந்த உரிமைகளை பெற்றுக் கொண்டு கடன் தொகையை ஈடு செய்ய வேண்டும் என்றும் மீதி தொகையை ஈசன் புரொடக்சன் நிறுவனத்திடமே வழங்க வேண்டும் எனவும் மத்தியஸ்தர் உத்தரவிட்டிருக்கிறார். இந்த வழக்கில் மத்தியஸ்தர் உத்தரவை அமல்படுத்தும் வகையில், சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய வேண்டும் என தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனம் சார்பில் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையில், சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.

இதனைத்தொடர்ந்து இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி நடிகர் பிரபு சென்னை உயர்நீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்தார். பின்னர், எனது பெயரில் அன்னை இல்லம் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், சகோதரர் ராம்குமாருக்கு எந்த உரிமையும் இல்லாததால், வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை நீக்க வேண்டும் என கோரியிருந்தார். மேலும், சிவாஜி அன்னை இல்லத்திற்கும் ராம்குமாருக்கும் எந்த தொடர்பும் இல்லை. பங்கு கோர கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. எதிர்கால்த்தில் அன்னை இல்லம் சொத்தில் உரிமையும் கோரமாட்டேன் என பிராமண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
மேலும், இந்த வழக்கு தொடர்பாக பிரபு கூறியதாவது, இதுவரை யாரிடமும் கடன் வாங்கவில்லை. எனது அண்ணன் ராம்குமார் நிறைய பேரிடம் கடன் வாங்கியுள்ளார். அவர் வாங்கிய கடனை என்னால் அடைக்க முடியாது. அன்னை இல்லம் சொத்து 150 கோடி மதிப்பில் இருக்கிறது. இந்த சொத்து என் பெயரில் இருப்பதாகவும் பிரபு தெரிவித்திருந்தார். இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதில், சிவாஜியின் அன்னை இல்லம் வீட்டின் உரிமையாளர் பிரபு தான் என நீதிமன்றம் அறிவித்து வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது. இந்த உத்தரவின் மூலம் பிரபுவிற்கு அன்னை இல்லம் வீடு சொந்தமானது குறிப்பிடத்தக்கது.
