அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமித்ஷா அறிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ள நிலையில், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் எவை? என்பதை முடிவு செய்ய மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா சென்னை வந்துள்ளார்.
இதற்கிடையில், தமிழக பா.ஜ.க. தலைவர் பதவிக்கான விருப்ப மனு தாக்கல் சென்னையிலுள்ள கமலாலயத்தில் இன்று தொடங்கியது. இதில் நயினார் நாகேந்திரனுக்கு மட்டுமே விருப்ப மனு தாக்கல் செய்ய கட்சி தலைமை அனுமதி வழங்கியிருந்த நிலையில், தமிழ்நாடு பா.ஜ.க. தலைவராக நயினார் நாகேந்திரன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
பா.ஜ.க. மாநில தலைவர் அறிவிப்பு நிகழ்ச்சியை நாளை(ஏப்.12) மாலை பிரமாண்டமாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சென்னை கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழா ஓட்டலில் அமித்ஷா செய்தியாளர்களை சந்தித்தார். இந்த செய்தியாளர் சந்திப்பில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அமித்ஷா, தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி உறுதியானது என்று அறிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அமித்ஷா பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-
“தேசிய அளவில் மோடி தலைமையிலும், மாநில அளவில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலும் தேசிய ஜனநாயக கூட்டணியாக தேர்தலை சந்திப்போம். அ.தி.மு.க.வின் உட்கட்சி விவகாரத்தில் நாங்கள் தலையிடப் போவதில்லை.
போக்குவரத்து, மின்சாரம், இலவச வேட்டி, சேலை உள்ளிட்ட ஊழல்கள் குறித்து தி.மு.க. பதில் சொல்ல வேண்டும். டாஸ்மாக், மணல் ஊழல்கள் குறித்து தேர்தலில் மக்களுக்கு தி.மு.க. பதில் சொல்ல வேண்டும்.
மும்மொழி, தொகுதி மறுவரையறை என தி.மு.க. பல பிரச்சினைகளை எழுப்பி வருகிறது. பிரச்சினைகளை திசைதிருப்ப தி.மு.க. முயற்சி செய்கிறது. மக்களின் கவனத்தை திசைதிருப்பவே நீட் விவகாரம் குறித்து தி.மு.க. பேசி வருகிறது.
1998-ல் இருந்து அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து வருகிறோம். இது இயல்பாக அமைந்த கூட்டணி. அ.தி.மு.க. எந்த கோரிக்கையும் வைக்கவில்லை. நீட் விவகாரத்தில் அ.தி.மு.க.வுடன் கலந்து பேசி முடிவெடுப்போம்.
2026 தேர்தலில் கூட்டணி ஆட்சிதான் இருக்கும். தமிழ்நாட்டில் இணைந்துதான் ஆட்சியமைக்கப் போகிறோம். எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூட்டணி அமைகிறது. தேர்தல் விஷயங்களில் இணைந்து செயல்படுவோம். வெற்றிக்குப் பிறகு மற்றவை குறித்து முடிவு செய்யப்படும்.
யார் யாருக்கு எத்தனை தொகுதிகள், வெற்றி பெற்ற பின் எப்படி ஆட்சியமைப்பது என்பது பற்றி பிறகுதான் பேச இருக்கிறோம். அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி, இருவருக்குமே பலனளிக்கக் கூடியது. வரப்போகும் தேர்தலில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என நம்பிக்கை உள்ளது.
தமிழ், தமிழ் என்று கூறும் தி.மு.க., தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக என்ன செய்தார்கள் என்பதை பட்டியலிட முடியுமா? தமிழ்நாடு, தமிழ் மக்கள் மற்றும் தமிழ் மொழியை நாங்கள் கவுரவமாக கருதுகிறோம்.
நாடாளுமன்றத்தில் செங்கோலை நிறுவினோம், காசி தமிழ் சங்கமத்தை நடத்தினோம். பொதுத்தேர்வுகளை எல்லாம் இப்போது தமிழ் மொழியில் எழுதுகிறார்கள். தமிழ் மொழியை வளர்க்க திருக்குறளை 63 மொழிகளில் மொழி பெயர்த்துள்ளோம். பாரதியாரின் ஒட்டுமொத்த படைப்புகளையும் நூல்களாக வெளியிட்டவர் பிரதமர் மோடி.
தமிழில் பாடநூல்களை மாற்ற 3 ஆண்டுகளாக வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் இல்லை. பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் மருத்துவம், பொறியியல் பாடநூல்களை பிராந்திய மொழிகளில் படிக்கிறார்கள்.
இன்றும் அண்ணாமலைதான் பா.ஜ.க. மாநில தலைவராக இருக்கிறார். அண்ணாமலைக்கு தேசிய பொறுப்பு வழங்கப்படுமா? என்பது குறித்து நாங்கள் முடிவு எடுப்போம்.”
இவ்வாறு அமித்ஷா தெரிவித்தார்.