தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது.
திரைத்துறையில் முன்னணி நடிகரான ஜொலித்துக் கொண்டிருக்கும் போதே நடிகர் விஜய் அரசியல் அவதாரம் எடுத்தார். தமிழக வெற்றிக் கழகம் என்று தனது கட்சிக்கு பெயர் சூட்டியுள்ள அவர், 2026 சட்டசபை தேர்தலில் போட்டியிடுவோம் என்று ஏற்கனவே அறிவித்துவிட்டார். விக்கிரவாண்டி மாநாட்டில் பேசிய அவர், கூட்டணிக்கு யார் வந்தாலும் இணைத்துக் கொள்வோம் என்று கூறியதுடன், ஆட்சியிலும் பங்குதருவதாக தெரிவித்தார்.
இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. கூட்டத்தில் பங்கேற்பதற்காக பனையூரில் இருந்து திருவான்மியூருக்கு காரில் வரும் விஜய்க்கு வழிநெடுக சிறப்பான வரவேற்பு அளிக்க தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.
சரியாக, காலை 9 மணிக்கு பொதுக்குழு கூட்டம் தொடங்குகிறது. மாநில பொதுச் செயலாளர் என்.ஆனந்த் வரவேற்புரை ஆற்றுகிறார். தொடர்ந்து, உறுதிமொழி ஏற்கப்படுகிறது. அடுத்ததாக, கட்சியின் கொள்கை தலைவர்கள் உருவப் படத்துக்கு விஜய் மலர்தூவி மரியாதை செலுத்துகிறார். தொடர்ந்து, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. முக்கியமாக, மத்திய – மாநில அரசுகளை கண்டித்து தீர்மானங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து, மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் சிலர் பேச இருக்கின்றனர். நிறைவாக கட்சியின் தலைவர் விஜய் பேசுகிறார்.
அப்போது, 2026 சட்டசபை தேர்தலில் தவெக வெற்றி பெறுவதற்காக நிர்வாகிகள், தொண்டர்களுக்கு ஆலோசனை வழங்க இருக்கிறார். மேலும், சில முக்கிய அறிவிப்புகளையும் அவர் வெளியிட உள்ளார் என்று கூறப்படுகிறது. கட்சி தொடங்கிய பிறகு நடைபெறும் முதல் பொதுக்குழு கூட்டம் என்பதால், தவெக நிர்வாகிகள் சென்னையில் குவிந்துள்ளனர்.
கூட்டத்தில், மாநில நிர்வாகிகள், மாவட்ட வாரியாக செயலாளர், பொருளாளர், இணைச் செயலாளர், 2 துணைச் செயலாளர்கள் என 5 பேரும், பொதுக்குழு உறுப்பினர்கள் 10 பேரும் என 15 பேர் பங்கேற்கின்றனர். மேலும், மாவட்டம் தோறும் ஒரு பெண் பிரதிநிதியும் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொள்கிறார். அந்த வகையில், மொத்தம் 2,500 பேர் கூட்டத்தில் பங்கேற்க இருக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் கியூ.ஆர். கோடுடன் கூடிய டிஜிட்டல் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆளுங்கட்சியும், ஆண்ட கட்சியும் தங்கள் கட்சிகளின் பொதுக்குழு கூட்டத்தை நடத்தும்போது, வாழை, தோரணங்கள், கட்சிக் கொடிகள், மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம் என்று ஆடம்பரம் காட்டும். அதுபோன்ற வரவேற்பு விஜய்க்கும் அளிக்கப்பட இருக்கிறது. 10 குதிரைகளில் வீரர்கள் தவெக கொடியுடன் அணிவகுத்து நின்று வரவேற்கின்றனர். மண்டபத்தில் நுழைவு வாயில் கோட்டை வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. வாயிலின் இருபுறமும் 2 செயற்கை யானைகள் தத்ரூபமாக நிறுத்தப்பட்டுள்ளன. கூட்டத்தில் பங்கேற்கும் அனைவருக்கும் காலை மற்றும் மதிய உணவு வழங்கப்பட இருக்கிறது.