ராம நவமி 2025: ராம நாமம் உச்சரிக்க நற்காரியங்கள் கைகூடும்
இந்த ஆண்டு ராம நவமி ஏப்ரல் 6-ம் தேதி கொண்டாடப்படுகிறது.;
ராம நவமி 2025: ராம நாமம் உச்சரிக்க நற்காரியங்கள் கைகூடும்
காக்கும் கடவுள் மகா விஷ்ணுவின் முக்கிய அவதாரம் ராமாவதாரம். அசுரர்களை அழித்து நீதியை நிலைநாட்ட மகா விஷ்ணு, நவமி திதி நாளில் ராமராக அவதரித்தார்.
அவரது அவதார தினம் ராம நவமியாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் இந்துக்கள் விரதம் இருந்தும் பிரார்த்தனை செய்தும் ராமரை வழிபடுகிறார்கள். கோவில்களுக்குச் சென்று ராமாயணம் படிக்கிறார்கள்.
ராமாயண நிகழ்வுகளில் பங்கேற்கிறார்கள்.
நாடு முழுவதும் உள்ள வைணவ ஆலயங்களில் ராம நவமி உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. ராம நவமி நாளில் சிறப்பு ஊர்வலங்கள், பஜனைகள் மற்றும் ராம் லீலா நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் இடையிலான தொடர்ச்சியான மோதலை ராம நவமி நமக்கு நினைவூட்டுகிறது. மேலும் வாழ்க்கையில் சரியான பாதையை பின்பற்ற ராமகாவியம் நம்மை ஊக்குவிக்கிறது.
இந்த ஆண்டு ராம நவமி ஏப்ரல் 6-ம் தேதி கொண்டாடப்படுகிறது.
ஏப்ரல் 5-ம் தேதி நள்ளிரவு 1.03 முதல் ஏப்ரல் 6-ம் தேதி நள்ளிரவு 12.25 வரை நவமி திதி உள்ளது. இந்த நேரத்தில் ராமபிரானின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் நடைபெறும். ராம நவமி சிறப்பு பூஜைகள் நடைபெறும் நேரம் ஒவ்வொரு நகரங்களைப் பொருத்து மாறுபடும்.
நாடு முழுவதும் ராம நவமி கொண்டாட்டங்களுக்கு பக்தர்கள் தயாராகி வருகின்றனர்.
கோவில்களில் ராம நவமி உற்சவங்களுக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதுதொடர்பான அறிவிப்புகள், பூஜை குறித்த தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்படுகின்றன.
ராம நவமியில் மகிமைமிகு ராம நாமத்தை இடைவிடாது உச்சரிப்பதால் இல்லத்தில் நற்காரியங்களும், செல்வ வளமும் வளர்ந்தோங்கும், நாம் செய்த பாவங்கள் கரைந்து புண்ணியங்கள் கூடும் என்பது ஐதீகம்.
ராம நவமி தினத்திற்கு 9 நாட்கள் முன்பு கர்ப்போத்ஸவம்' என்று கோவில்களில் கொண்டாடுவார்கள். அப்போது ஆலயங்களில் விசேஷ பூஜைகளும் நடக்கும். ராவணன், கரன், தூஷணன், திரிசிரன், மாரீசன், சுபாகு, தாடகை, விரதன், கபந்தன் போன்ற ராட்சசர்களை அழிக்க ராமனாக, விஷ்ணு பகவான் அவதரிக்கப் போவதை அறிந்துகொண்ட முனிவர்கள், ராமர் பிறப்பதற்கு முன்பிருந்தே கர்ப்போத்ஸவத்தை கொண்டாடியதாகச் சொல்வார்கள். அதேபோல் ராமபிரான் பிறந்ததில் இருந்து வரக்கூடிய ஒன்பது நாட்களை
ஜனோத்ஸவம்’ என்று கொண்டாடுவார்கள்.
