ஐ.பி.எல். சீசன் இன்று தொடக்கம்..!

10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். சீசன் இன்று தொடங்குகிறது.

இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல். தொடரின் 18-வது சீசன் இன்று தொடங்குகிறது. கடந்த 2008-ம் ஆண்டு பி.சி.சி.ஐ. சார்பில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த தொடர் 18-வது ஆண்டாக வீறுநடை போடுகிறது. இதுவரை நடந்துள்ள 17 தொடர்களில் அதிகபட்சமாக சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் தலா 5 முறை கோப்பையை கைப்பற்றியுள்ளன.

இந்த நிலையில் 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இன்று (சனிக்கிழமை) தொடங்கி மே 25-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது.

இதில் பங்கேற்கும் 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் சென்னை சூப்பர் கிங்ஸ், நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகளும் ‘பி’ பிரிவில் மும்பை இந்தியன்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ், குஜராத் டைட்டன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா 2 முறையும், எதிர்பிரிவில் ஒரு அணியுடன் மட்டும் 2 முறை, மற்ற 4 அணிகளுடன் தலா ஒரு முறையும் லீக்கில் விளையாடும் வகையில் போட்டி அட்டவணை அமைக்கப்பட்டுள்ளது.

லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும். இதில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் மோதி அவற்றில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்குள் நுழையும். தோற்கும் அணிக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கப்படும்.

இதைத் தொடர்ந்து 3-வது, 4-வது இடங்களை பெறும் அணிகள் வெளியேற்றுதல் (எலிமினேட்டர்) சுற்றில் மோதும். இதில் தோற்கும் அணி வெளியேற்றப்படும். வெற்றி காணும் அணி இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றில், முதல் தகுதி சுற்றில் தோற்ற அணியுடன் மல்லுக்கட்டும். இதில் வெற்றியை வசப்படுத்தும் அணி 2-வது அணியாக இறுதிப்போட்டியை எட்டும்.

முதல் நாளான இன்றிரவு கொல்கத்தா ஈடன்கார்டனில் அரங்கேறும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை சந்திக்கிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியுடன் ஆயத்தமாகியுள்ளனர்.

இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. ஜியோ ஹாட் ஸ்டார் செயலியிலும் பார்க்கலாம். முன்னதாக மாலை 6 மணிக்கு கண்கவர் கலை நிகழ்ச்சியுடன் கோலாகல தொடக்க விழா நடைபெறுகிறது. இதில் இந்தி பிரபலங்களின் ஆட்டம் பாட்டம் ரசிகர்களை குதூகலப்படுத்த காத்திருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!