எருக்கூர் நீலகண்ட பிரம்மச்சாரி நினைவு நாளின்று

எருக்கூர் நீலகண்ட பிரம்மச்சாரி நினைவு நாளின்று😢

1889ம் வருடம், சீர்காழியினை அடுத்த எருக்கஞ்சேரியில், பெரிய பிராமண குடும்பத்தின் மூத்த மகனாய் பிறந்தார். அந்த பெரும் குடும்பத்தின், மூத்த மகனான நீலகண்டன், திருவனந்தபுரம் முதல் எங்கெல்லாமோ வேலை செய்து, சென்னையினை அடையும் பொழுது, வயது 16. அப்பொழுது தான், ‘கர்சன்’ என்னும் வெள்ளையர், வங்கத்தை துண்டாக்கினார். அதை, மதரீதியாக பிளந்து போட்ட கர்சன், பாகிஸ்தான் பிரிவினைக்கு, அதுதான் முதல் திட்டம்.

நாடு பொங்கிற்று. ஒரு காலமும், தேசம் மதரீதியாக பிரியாது என பொங்கிய பொழுது, பலர் போராட வந்தனர், அந்த 16 வயது நீலகண்டனும் வந்தார். அந்த 16 வயதிலே, நாடு சுதந்திரம் அடையும் வரை, திருமணம் செய்ய மாட்டேன் என, வைராக்கியமாய் ‘பிரம்மச்சரியம்’ ஏற்று, நீலகண்ட பிரம்மச்சாரி என்றானார். பிராமண அடையாளமான குடுமியினை எடுத்து, ராணுவ வீரனாய் மாறினார். வெள்ளையனை அடித்து விரட்டுவதே, தன் பிறப்பின் நோக்கம் என்றார். “சூர்யோதயம்” என்னும் பத்திரிகையை தொடங்கி, மக்களிடம் செய்தியினை கொண்டு செல்ல, அது தேவை என கருதினார்.

வ. உ. சிதம்பரம் பிள்ளை, பிபின் சந்திரபால், பாரதியார், வ.வே.சு அய்யர், வாஞ்சிநாதன் போன்றவர்களுடன். ஒரே அணியில் இயங்கினாலும். தனியாக ஒரு காரியம் செய்தார். ‘முதல் இந்திய ராணுவம்’ அல்லது ‘புரட்சி இயக்கம்’ என சொல்லப்படும், “அபிநவ் பாரத்” போராளி இயக்கம் நடத்தினார். வெளிபார்வைக்கு ஏதோ இயக்கம் என அறியப்படும் அந்த குழு, ஆயுத பயிற்சியும் பெற்றிருந்தது.

தமிழகத்தில் மட்டும், 20 ஆயிரம் பேர் இருந்தார்கள், இதை நாடு முழுக்க பரப்பி மக்களை திரட்டி, பெரும் போராய் தொடுத்து, வெள்ளையனை விரட்ட, திட்டம் வைத்திருந்தார், நீலகண்டன்.

20 வயதை நெருங்கிய பொழுது தான், வ.உ.சி. கப்பல் விட்டார்,அதற்கு தன்னால் ஆன உதவி எல்லாம் செய்த நீலகண்டன், அந்த கப்பலுக்கான பங்குகளை திரட்டி கொடுத்தார். அந்த நேரம் ஆஷ்துரை வந்து, மாபெரும் கொடுமைகளை செய்து, வ.உ.சி.யினை வீழ்த்தியதும், வாஞ்சிநாதன் ஆஷ் துரையினை கொன்றார். வாய்ப்புக்காக காத்திருந்த வெள்ளை அரசு, 14 பேரை கைது செய்தது. அந்த 14 பேரும், 21 வயதுக்கு கீழ் பட்டவர்கள். வாஞ்சிநாதனை அடுத்த முதல் குற்றவாளி, நீலகண்ட பிரம்மச்சாரி. அவருக்கு கொலையில் நேரடி தொடர்பு இல்லை, கொலை நடந்த பொழுது, அவர் கல்கத்தாவில் இருந்தாலும், பிடித்து நெல்லைக்கு கொண்டு வந்தார்கள்.

நெல்லையில், டோமர் எனும் நீதிபதி இருந்தார், வெள்ளையரில் அவர் கருணை மிக்கவர், ஆஷ் துரையின் அட்டகாசமும், அக்கொலையில் வாஞ்சிநாதனை தவிர, யாரும் தொடர்பில்லை என்பதையும், உணர்ந்திருந்தார். நீலகண்டனை கண்டதும், அந்த ஒளி வீசும் முகத்தையும், அவனின் தெய்வீக கோலத்தையும் கண்டு, அமர சொல்லி, விசாரணை செய்தார், நிச்சயம் தூக்கு தண்டனை வழக்கு, அது. ஆனால், 7 ஆண்டு சிறை என தீர்ப்பளித்தார், டோமர். நீலகண்டன் தன் தண்டனையினை சென்னையிலும், கோவையிலும் மாறி மாறி கழித்த பொழுது, சிறையில் கடும் தண்டனை கொடுக்கப் பட்டது, விறகு வெட்டுதல் முதல் பல கட்டாய தண்டனையில் இருந்த அவர், போராடி புத்தகம் வாசிக்கும் உரிமையினை பெற்றார்.

கடும் சிறை வாழ்வில், அவர் பாளையங்கோட்டை, மைசூர் என்றெல்லாம் மாற்றப் பட்டார், அந்நேரம் முதலாம் உலகப்போர் காலம் என்பதால், தப்பி செல்ல முயன்றார், ஆனால் அவரை பிடித்த அரசு, அவர் தற்கொலை செய்ததாகவும், தாங்கள் காப்பாற்றியதாகவும் சொல்லியது. 7 வருடம் தண்டனை முடிந்து, அவர் பாரதியாரை பார்க்க வந்த பொழுது தான், பாரதி மரணித்தார், பாரதிக்கு கொள்ளி வைக்கும் உரிமை, நீலகண்டனுக்கு வழங்கப் பட்டது.

1928ல், இரண்டாம் சுதந்திர போராட்டத்தை, தன் 28ம் வயதில் தொடங்கினார், நீலகண்டன். அப்பொழுது கம்யூனிச இயக்கத்துடன் தொடர்பில் இருந்ததாக, கைது செய்த ஆங்கிலேய அரசு, அப்போதைய இந்தியாவும் இன்றைய பாகிஸ்தானுமான முல்தான் மற்றும் பர்மாவில் வைத்தது.
மிக இளம் வயதிலே, மொத்தம் 12 ஆண்டுகள், சிறையில் கழித்து விட்டு, 1933ல் வெளிவந்த அவருக்கு, கள சூழல் முழுக்க மாறி இருந்ததை உணர முடிந்தது.

வ.வே.சு அய்யர், சேரன்மகாதேவி பக்கம் ஆசிரமம் அமைத்தது போல், நீலகண்ட பிரம்மச்சாரி, மைசூர் அருகே சென்னகிரியில், ஒரு ஆசிரமம் அமைத்து தங்கினார். முழு துறவி கோலத்தில் மாறி, தியானம், தவம் என முழுக்க, இந்து துறவியாய் மாறினார், அவரை சந்திக்க காந்தியும் வந்தார்.
மலைமேல் இருந்து இறங்கி வந்த நீலகண்டர், இந்து எழுச்சி ஏற்படாமல் இங்கு எதுவும் மாறாது, மாறினாலும் நிலைக்காது என சொல்லி, காந்தியினை ஆசீர்வதித்து விட்டு சென்றார். நீலகண்ட பிரம்மச்சாரியின் பேச்சும், அவரின் செயல்பாடும் காந்திக்கு பிடித்திருந்தது, அவர் நீலகண்டரை அழைத்தார். ஸ்ரீ ஓம்காரானந்த சுவாமி என, அவர் பெயர் மாறிற்று. தியானம், வழிபாடு என யோகியாக மாறிக் கொண்டிருந்தார்.

20 வயதில் ஆயுதம் ஏந்தி நின்ற அவர், காலத்தினால் பல உண்மைகளை புரிந்து, ஆன்மீக எழுச்சியே இந்த தேசத்தை மாற்றும் என, அதில் இறங்கி சன்னியாசியாய், பிரபஞ்சத்திடம் இந்தியாவின் எதிர்காலம் பற்றி தியானித்தே, செத்த பொழுது, வயது 88.

தேசத்தில் ஆன்மீக எழுச்சி ஏற்பட வேண்டும் என, யோகியாய் அவர் வாழ்ந்து, 1978 ம் வருடம் மறைந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!