‘கவிஞர் நந்தலாலா’ மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்..!

பல்லாண்டுகள் தமிழ்ச் சமூகத்துக்கு அருந்தொண்டாற்றவிருந்த நந்தலாலா மறைந்துவிட்டார் என்பது வேதனையளிப்பதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர் சங்கத்தின் துணைத் தலைவரும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் பொதுக்குழு உறுப்பினருமான கவிஞர் நந்தலாலா அவர்கள் மறைந்த செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.

தமிழ்நாட்டின் புத்தகத் திருவிழாக்கள், முற்போக்கு மேடைகள், தொலைக்காட்சி விவாதங்கள், பட்டிமன்றங்கள் என கவிஞர் நந்தலாலா அவர்களின் குரல் ஒலிக்காத மேடையே இல்லை எனும் அளவுக்கு அனைத்து உணர்ச்சிகளையும், அரிய தகவல்களையும் தமது பேச்சில் வெளிப்படுத்தும் திறம் பெற்றவர் அவர்.

காவிரிக்கரையின் மைந்தனான கவிஞர் நந்தலாலா அவர்கள் தமது ஊரான திருச்சியின் மீது கொண்ட தீராக்காதலுக்கு, “திருச்சிராப்பள்ளி: ஊறும் வரலாறு” நூலே சான்றாகும்.

அவரது ஆற்றல் தமிழ்ச் சமூகத்துக்கு மேலும் பயனளிக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் பொதுக்குழு உறுப்பினராகவும் அவரை நியமித்திருந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது.

தந்தை பெரியார் மீது பெரும் பற்றும், பேரறிஞர் அண்ணா மீது பெருமதிப்பும், தலைவர் கலைஞர் மீது மிகுந்த அன்பும் கொண்டிருந்தவர் கவிஞர் நந்தலாலா அவர்கள். தலைவர் கலைஞர் அவர்கள் குறித்து, “தாம் வாழ்ந்த காலம் முழுதும், மானமும் அறிவும்; துணிச்சலும் செயலுமாக வாழ்ந்தவர் கலைஞர். உரிமை மீட்புப் போரில் அவரே நமக்கு என்றும் போர்வாள்” என்று உண்மை இதழில் அவர் எழுதிய சொற்களை மறக்க முடியாது. என் மீதும் மிகுந்த மரியாதையும் பாசமும் கொண்டிருந்தார். எனது பிறந்தநாள் விழாப் பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு பரந்த மனத்தோடும் அன்போடும் வாழ்த்திப் பேசியதையும் இவ்வேளையில் நினைவுகூர்கிறேன்.

மேலும் பல்லாண்டுகள் தமிழ்ச் சமூகத்துக்கு அருந்தொண்டாற்றவிருந்த அவர் மறைந்துவிட்டார் என்பது வேதனையளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர் சங்கத்தின் தோழர்களுக்கும், தமிழன்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!