தேசிய பாதுகாப்பு தினம் (National Safety Day, March 4 )
தேசிய அளவிலான பாதுகாப்புக் குழு அமைப்பு 1966-ல் தொழிலாளர் நல அமைச்சகத்தால் நிறுவப்பட்டதை அடுத்து, நம் நாட்டில் 1971 ஆம் ஆண்டு மார்ச் 4 ஆம் தேதி தேசிய பாதுகாப்பு கவுன்சில் உருவாக்கப்பட்டது. அடுத்து, 1972-ல் தேசிய பாதுகாப்பு தினம் அறிவிக்கப்பட்டது மும்பையை தலைமையகமாக கொண்டு, ஒவ்வொரு மாநிலத்திலும் இதன் பிரிவுகள் செயல்படுகின்றன. அரசியல்சாரா தொண்டு நிறுவனமாக தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயல்படுகிறது. தேசிய பாதுகாப்பு கவுன்சில் அமைப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகளை முறையாக செயல்படுத்திய தொழிற்சாலைகளுக்கு விருதுகள் வழங்குகிறது. மேலும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு மேம்பாட்டு விருதுகளையும் ஒவ்வொரு வருடமும் வழங்குகிறது.தொழிலாளர்கள் விபத்துகள் இன்றி பணிபுரிந்திடவும், பாதுகாப்பு உணர்வுடனும், உடல் நலன் உடனும், சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் பணி செய்திட விழிப்புணர்வு ஏற்படுத்தவே அனைத்து தொழிற்சாலைகளிலும் இந்தத் தினம் கொண்டாடப்படுகிறது. இந்தத் தினத்தில் , தொழில் நிறுவனங்களில் தொழிலாளர்களிடையே பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சிறப்பு பாதுகாப்பு பயிற்சி வகுப்புகள், கட்டுரை, பேச்சு, சுலோகன் போட்டிகள்,கருத்தரங்குகள், விநாடி-வினா, மாதிரி ஒத்திகைகள், பாதுகாப்பு குறித்த கலை நிகழ்ச்சிகளை நடத்தவேண்டும்.நடத்தி, வெற்றி பெறும் தொழிலாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட வேண்டும்.
உலக உடல் பருமன் நாளின்று.
உடம்பால் அழிவின் உயிரால் அழிவர் என்பது திருமூலரின் வாக்கு. அந்த வகையில் நோய்களுக்கு பல்வேறு காரணம் இருப்பினும் உடல் பருமன் சமீப காலமாக அதிகமாகிக்கொண்டு இருக்கிறது.
உடல் பருமன் என்பது அதிக உடல் எடையை குறிக்கும். இதனை பிஎம்ஐ (உடல் பருமனை குறிக்கக்கூடிய குறியீடு) எனும் அளவீட்டால் கணிக்கலாம். சராசரியாக ஆண்கள் 21 முதல் 25 பிஎம்ஐ, பெண்கள் 18 முதல் 23 பிஎம்ஐ கொண்டவர்களாக இருக்கலாம். இந்த அளவை தாண்டினால் அதிக உடல் எடையாக கருதப்படும். பிஎம்ஐ 30 தாண்டினால் உடல் பருமனாக கருதப்படும். இப்போதெல்லாம் உலக அளவில் உடல் பருமன் நாளுக்கு நாள் அதிகமாகிறது. உலக மக்கள் தொகையில் 350 மில்லியன் மக்கள் உடல் பருமனாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது. உடல் பருமன் அதிகம் உள்ள நாடுகளின் தர வரிசை பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. 30 மில்லியன் மக்கள் இந்தியாவில் மட்டும் உடல் பருமனாக உள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த உடல் பருமன் மிக முக்கிய தொற்றா நோய்களான சர்க்கரை நோய், அதிக ரத்த அழுத்தம், இருதய நோய்கள், பக்கவாதம், மூட்டு நோய்கள், பித்தப்பை கல், சிலவகை புற்று நோய்கள் இவற்றிற்கு ஆதாரமாக உள்ளது. உடல் பருமனுக்கு காரணங்கள் என்ன? உடல் பருமனை கணிப்பது எப்படி? உடல் பருமனை குறைப்பது எப்படி? என்பதை யோசித்து அதைக் கட்டுபடுத்த தூண்டு நாளிது.
எருக்கூர் நீலகண்ட பிரம்மச்சாரி நினைவு நாளின்று
1889ம் வருடம், சீர்காழியினை அடுத்த எருக்கஞ்சேரியில், பெரிய பிராமண குடும்பத்தின் மூத்த மகனாய் பிறந்தார். அந்த பெரும் குடும்பத்தின், மூத்த மகனான நீலகண்டன், திருவனந்தபுரம் முதல் எங்கெல்லாமோ வேலை செய்து, சென்னையினை அடையும் பொழுது, வயது 16. அப்பொழுது தான், ‘கர்சன்’ என்னும் வெள்ளையர், வங்கத்தை துண்டாக்கினார். அதை, மதரீதியாக பிளந்து போட்ட கர்சன், பாகிஸ்தான் பிரிவினைக்கு, அதுதான் முதல் திட்டம்.
நாடு பொங்கிற்று. ஒரு காலமும், தேசம் மதரீதியாக பிரியாது என பொங்கிய பொழுது, பலர் போராட வந்தனர், அந்த 16 வயது நீலகண்டனும் வந்தார். அந்த 16 வயதிலே, நாடு சுதந்திரம் அடையும் வரை, திருமணம் செய்ய மாட்டேன் என, வைராக்கியமாய் ‘பிரம்மச்சரியம்’ ஏற்று, நீலகண்ட பிரம்மச்சாரி என்றானார். பிராமண அடையாளமான குடுமியினை எடுத்து, ராணுவ வீரனாய் மாறினார். வெள்ளையனை அடித்து விரட்டுவதே, தன் பிறப்பின் நோக்கம் என்றார். “சூர்யோதயம்” என்னும் பத்திரிகையை தொடங்கி, மக்களிடம் செய்தியினை கொண்டு செல்ல, அது தேவை என கருதினார். வ. உ. சிதம்பரம் பிள்ளை, பிபின் சந்திரபால், பாரதியார், வ.வே.சு அய்யர், வாஞ்சிநாதன் போன்றவர்களுடன். ஒரே அணியில் இயங்கினாலும். தனியாக ஒரு காரியம் செய்தார். ‘முதல் இந்திய ராணுவம்’ அல்லது ‘புரட்சி இயக்கம்’ என சொல்லப்படும், “அபிநவ் பாரத்” போராளி இயக்கம் நடத்தினார். வெளிபார்வைக்கு ஏதோ இயக்கம் என அறியப்படும் அந்த குழு, ஆயுத பயிற்சியும் பெற்றிருந்தது. தமிழகத்தில் மட்டும், 20 ஆயிரம் பேர் இருந்தார்கள், இதை நாடு முழுக்க பரப்பி மக்களை திரட்டி, பெரும் போராய் தொடுத்து, வெள்ளையனை விரட்ட, திட்டம் வைத்திருந்தார், நீலகண்டன். 20 வயதை நெருங்கிய பொழுது தான், வ.உ.சி. கப்பல் விட்டார்,அதற்கு தன்னால் ஆன உதவி எல்லாம் செய்த நீலகண்டன், அந்த கப்பலுக்கான பங்குகளை திரட்டி கொடுத்தார். அந்த நேரம் ஆஷ்துரை வந்து, மாபெரும் கொடுமைகளை செய்து, வ.உ.சி.யினை வீழ்த்தியதும், வாஞ்சிநாதன் ஆஷ் துரையினை கொன்றார். வாய்ப்புக்காக காத்திருந்த வெள்ளை அரசு, 14 பேரை கைது செய்தது. அந்த 14 பேரும், 21 வயதுக்கு கீழ் பட்டவர்கள். வாஞ்சிநாதனை அடுத்த முதல் குற்றவாளி, நீலகண்ட பிரம்மச்சாரி. அவருக்கு கொலையில் நேரடி தொடர்பு இல்லை, கொலை நடந்த பொழுது, அவர் கல்கத்தாவில் இருந்தாலும், பிடித்து நெல்லைக்கு கொண்டு வந்தார்கள். நெல்லையில், டோமர் எனும் நீதிபதி இருந்தார், வெள்ளையரில் அவர் கருணை மிக்கவர், ஆஷ் துரையின் அட்டகாசமும், அக்கொலையில் வாஞ்சிநாதனை தவிர, யாரும் தொடர்பில்லை என்பதையும், உணர்ந்திருந்தார். நீலகண்டனை கண்டதும், அந்த ஒளி வீசும் முகத்தையும், அவனின் தெய்வீக கோலத்தையும் கண்டு, அமர சொல்லி, விசாரணை செய்தார், நிச்சயம் தூக்கு தண்டனை வழக்கு, அது. ஆனால், 7 ஆண்டு சிறை என தீர்ப்பளித்தார், டோமர். நீலகண்டன் தன் தண்டனையினை சென்னையிலும், கோவையிலும் மாறி மாறி கழித்த பொழுது, சிறையில் கடும் தண்டனை கொடுக்கப் பட்டது, விறகு வெட்டுதல் முதல் பல கட்டாய தண்டனையில் இருந்த அவர், போராடி புத்தகம் வாசிக்கும் உரிமையினை பெற்றார். கடும் சிறை வாழ்வில், அவர் பாளையங்கோட்டை, மைசூர் என்றெல்லாம் மாற்றப் பட்டார், அந்நேரம் முதலாம் உலகப்போர் காலம் என்பதால், தப்பி செல்ல முயன்றார், ஆனால் அவரை பிடித்த அரசு, அவர் தற்கொலை செய்ததாகவும், தாங்கள் காப்பாற்றியதாகவும் சொல்லியது. 7 வருடம் தண்டனை முடிந்து, அவர் பாரதியாரை பார்க்க வந்த பொழுது தான், பாரதி மரணித்தார், பாரதிக்கு கொள்ளி வைக்கும் உரிமை, நீலகண்டனுக்கு வழங்கப் பட்டது. 1928ல், இரண்டாம் சுதந்திர போராட்டத்தை, தன் 28ம் வயதில் தொடங்கினார், நீலகண்டன். அப்பொழுது கம்யூனிச இயக்கத்துடன் தொடர்பில் இருந்ததாக, கைது செய்த ஆங்கிலேய அரசு, அப்போதைய இந்தியாவும் இன்றைய பாகிஸ்தானுமான முல்தான் மற்றும் பர்மாவில் வைத்தது. மிக இளம் வயதிலே, மொத்தம் 12 ஆண்டுகள், சிறையில் கழித்து விட்டு, 1933ல் வெளிவந்த அவருக்கு, கள சூழல் முழுக்க மாறி இருந்ததை உணர முடிந்தது. வ.வே.சு அய்யர், சேரன்மகாதேவி பக்கம் ஆசிரமம் அமைத்தது போல், நீலகண்ட பிரம்மச்சாரி, மைசூர் அருகே சென்னகிரியில், ஒரு ஆசிரமம் அமைத்து தங்கினார். முழு துறவி கோலத்தில் மாறி, தியானம், தவம் என முழுக்க, இந்து துறவியாய் மாறினார், அவரை சந்திக்க காந்தியும் வந்தார். மலைமேல் இருந்து இறங்கி வந்த நீலகண்டர், இந்து எழுச்சி ஏற்படாமல் இங்கு எதுவும் மாறாது, மாறினாலும் நிலைக்காது என சொல்லி, காந்தியினை ஆசீர்வதித்து விட்டு சென்றார். நீலகண்ட பிரம்மச்சாரியின் பேச்சும், அவரின் செயல்பாடும் காந்திக்கு பிடித்திருந்தது, அவர் நீலகண்டரை அழைத்தார். ஸ்ரீ ஓம்காரானந்த சுவாமி என, அவர் பெயர் மாறிற்று. தியானம், வழிபாடு என யோகியாக மாறிக் கொண்டிருந்தார். 20 வயதில் ஆயுதம் ஏந்தி நின்ற அவர், காலத்தினால் பல உண்மைகளை புரிந்து, ஆன்மீக எழுச்சியே இந்த தேசத்தை மாற்றும் என, அதில் இறங்கி சன்னியாசியாய், பிரபஞ்சத்திடம் இந்தியாவின் எதிர்காலம் பற்றி தியானித்தே, செத்த பொழுது, வயது 88. தேசத்தில் ஆன்மீக எழுச்சி ஏற்பட வேண்டும் என, யோகியாய் அவர் வாழ்ந்து, 1978 ம் வருடம் மறைந்தார்.
அமெரிக்காவில் சிகாகோ நகரம் அமைக்கப்பட்ட தினம் .
சிகாகோ என்பது ஐக்கிய அமெரிக்காவின் இலினொய் மாநிலத்திலுள்ள ஒரு மாநகராகும். மத்திய-மேற்கு அமெரிக்க நிலப்பகுதியில் அமைந்திருக்கும் இந்நகர், வணிகம், தொழில், கலாச்சாரம் போன்ற அனைத்து துறைகளிலும் சிறப்புடன் விளங்குகிறது. இந்நகரில், இதன் வரலாற்று சிறப்பினால் அமெரிக்காவின் இரண்டாம் நகர் என்று வர்ணிக்கப்படுகிறது.
மக்கள்தொகையில், நியூயார்க், லாஸ் ஏஞ்சலஸ் ஆகிய நகரங்களை அடுத்து, சுமார் 3 மில்லியன் மக்கள்தொகையுடன் அமெரிக்காவின் மூன்றாவது பெரிய நகராக விளங்குகிறது. சிகாகோ மாநகரை ஒட்டியுள்ள பெரும் புறநகர் பகுதி சிகாகோ நிலப்பரப்பு என்றே அழைக்கப்படுகிறது. இப்புறநகர் பகுதியில் சுமார் 9.7 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். இந்நகரம் அமெரிக்காவின் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றான மிச்சிகன் ஏரியின் கரையில் அமைந்துள்ளது. உலகின் பெரிய 25 மாநகர்களில் ஒன்றான, இந்நகர், 1833 ஆம் ஆண்டு நிறுவப்பட்டு, 1837 இல் நகராக உயர்த்தபட்டது. அக்காலகட்டத்தில், அமெரிக்க உள்நாட்டுக் கப்பல் போக்குவரத்திற்கு பெரிதும் உபயோகப் படுத்தப்பட்ட அமெரிக்கப் பேரேரிகளுக்கும், மிசிசிப்பி ஆற்றிக்கும் இடையே அமைந்த, போக்குவரத்து மையமாக வளர்ந்தது. இதன்பிறகு, மிகக்குறுகிய காலகட்டத்திலேயே நாட்டின் மிகச்சிறந்த வணிக மையமாகவும், தொழில் நகராகவும், சுற்றுலாத்தலமாகவும் வளர்ச்சி கண்டது. இன்றைய காலத்தில், ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 44.2 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் இம்மாநகருக்கு வருகை தருகின்றனர்.
பிரிட்டனில் மின்சார டிராம் வண்டி ஓடிய நாள்: பிரிட்டனில் மின்சாரத்தால் இயங்கும் முதல் டிராம் வண்டி 1882-ம் ஆண்டு மார்ச் மாதம் இதே தேதியில் ஓடவிடப்பட்டது. இந்த டிராம் வண்டி கிழக்கு லண்டனில் தனது முதல் பயணத்தை தொடங்கியது.
அமெரிக்காவின் 16-வது அதிபராக ஆபிரஹாம் லிங்கன் பொறுப்பேற்ற நாள்
மார்ச் 4 அடிமைத்தனத்தை எதிர்த்து ஆரம்ப காலத்திலிருந்து முழங்கி வந்த லிங்கன் அமெரிக்காவின் குடியரசுத் தலைவர் ஆனதும் உள்நாட்டுக் களவரங்கள் ஏற்பட்டன. ‘அடிமைத்தனம் தொடர வேண்டும் அது ஆண்டவனால் தீர்மானிக்கப்பட்டது. அதை அகற்ற ஆபிரகாம் லிங்கன் யார்?’ என்று அடிமைத்தனத்தால் பயன் பெறுபவர்கள் தூண்டிவிட்டனர். அமெரிக்காவின் தெற்கில் உள்ள சில சில மாநிலங்கள் தனியே பிரிந்து செல்ல வேண்டும் என விரும்பின. அடிமைத்தனத்தை கைவிடுவதைவிட, பிரிந்து செல்வதே பெருமை சேர்க்கும் என்று சில மாநிலங்களைச் சேர்ந்த பிற்போக்கு தலைவர்கள் முடிவெடுத்தனர். அதற்கு ஆதரவான பிரச்சாரங்களைப் பரப்பி மக்களிடையே கலவரங்களை மூட்டினர். உள்நாட்டு போர்மூண்டது.ஆனால் லிங்கன் உள்நாட்டுப் போரை முறியடித்து அதில் வெற்றி கண்டார். நாட்டின் ஒற்றுமயைக் காப்பாற்றினார். அடிமைத்தனத்தையும ஒழித்தார். ‘மக்களால், மக்களுக்காக நடத்தப்படுவதே மக்களாட்சி, என்று மக்களாட்சிக்கு லிங்கன் விளக்கம் கொடுத்தார்.
சாமிதோப்பில் இன்று அய்யா வைகுண்டர் அவதார தினம்
அய்யா வைகுண்டர் அவதார தினத்திற்கு லட்சோப, லட்சம் பக்தர்கள் சுவாமிதோப்பு நோக்கிச் செல்லும் அளவுக்கு அய்யா வைகுண்டர் செய்த விஷயம்தான் என்ன? ஒவ்வொன்றாய் அடுக்குகின்றார்கள் அய்யா வழி பக்தர்கள்.
சமத்துவம் நிறைந்த சமுதாயத்தை அமைக்கப் பாடுபட்டவர் அய்யா வைகுண்டர். கொல்லம் ஆண்டு 1008 மாசி மாதம் 20-ம் நாள் திருச்செந்தூர் கடலில் இருந்து சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளும், ஒரு மூர்த்தியாக வைகுண்ட பரம்பொருளாக அவதரித்து வெளியே வந்தார் என்பது ஜதீகம்.அந்த நாளே அய்யா அவதார தினமாக கொண்டாடப்படுகின்றது. நடந்தது, நடப்பது, நடக்க இருப்பது என முக்காலத்தையும் சொன்ன அய்யா வைகுண்டரின் தலைமைபதி சுவாமிதோப்பில் ஆன்மீக நெறி பரப்பிக் கொண்டிருக்கின்றது. மக்கள் மனதில் குடி கொண்டிருக்கும் கலி என்னும் மாய அரக்கனை அழித்து அவர்களை தர்ம யுக வாழ்வுக்கு அழைத்து செல்ல வந்த நாராயணன் எடுத்த அவதாரமே வைகுண்ட அவதாரம் என்பது அய்யா வழி பக்தர்களின் நம்பிக்கை. வைகுண்ட சாமி அவதரித்தார் 1809-ல் சுவாமி தோப்பு கிராமத்தில் பொன்னு மாடன் மற்றும் வெயிலாள் தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு பெற்றோர் “முடி சூடும் பெருமாள்” என பெயரிட்டனர். இந்த பெயர் வைப்பதற்கே கடும் எதிர்ப்பு கிளம்ப பெற்றோர் “முத்துக்குட்டி” என மாற்றிப் பெயரிட்டனர்.முத்துக்குட்டிக்கு 22 வயதில் உடல் சுகவீனம் ஏற்பட்டது. நடக்கக்கூட முடியாத முத்துகுட்டியை அவரது தாய் வெயிலாளும், மனைவி திருமால்வடிவும் தொட்டில் கட்டி அதில் படுக்க வைத்து திருச்செந்தூர் கோவில் மாசித் திருவிழாவுக்குத் தூக்கிச் சென்றனர்.உணவு அருந்த வழியில் இறக்கியபோது படுத்த படுக்கையாய் இருந்த முத்துக்குட்டி எழுந்து, நடந்து திருச்செந்தூர் கடலுக்குள் சென்றார். அவரது தாய் கடற்கரையிலேயே ஏக்கத்துடன் காத்திருந்தார்.கடலுக்குள் சென்ற முத்துக்குட்டிக்கு திருமால் மூன்று நாள்கள் கலிகாலம் போதித்து வைகுண்டர் என்று நாமகரணம் சூட்டி அனுப்பி வைத்தார்.கடலில் இருந்து வெளியே வந்த வைகுண்ட சாமி அவரது தாய் வெயிலாளைப் பார்த்து, “அம்மா, நான் இப்போது வைகுண்டராக வந்திருக்கிறேன். நான் இந்த பூவுலகிற்கே சொந்தம்.”என்றார். புலியும் பூனையாகும் சாதிய, மதக் கொடுமைகளுக்கு எதிரான அவரது போதனைகள் திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்கு எரிச்சலூட்டின. பலநாள் பட்டினி போடப்பட்ட புலிக் கூண்டிற்குள் தூக்கி வீசப்பட்டார். அமைதியே சொரூபமான அய்யா வைகுண்டரின் காலடியில் அகோரப் பசி கொண்ட புலியும், பூனையைப் போல் வந்து சாந்தமாய் படுத்தது. அய்யா வைகுண்டர் தனது வாழ்நாளின் வெவ்வேறு நிலைகளைக் கடந்த இடங்கள் பதிகள் என்று அழைக்கப்படுகின்றன. அந்தப் பதிகளிலும், தினசரி ஐந்து வேளை அன்னதானமும் நடைபெறுகிறது. “பிச்சையெடுத்து மிச்சமில்லாமல் அறப்பணியாற்று”என்பதே அய்யா வைகுண்டரின் வாக்கு. மேல் நோக்கிய திருநீற்று நாமம்! அய்யா வழி பக்தர்கள் புருவ மத்தியில் இருந்து நெற்றியில் மேல் நோக்கித் திருநீரால் நாமம் இட்டுக் கொள்வார்கள். இந்தத் திருநீறு பூமிக்கு அடியில் உள்ள தூய்மையான வெள்ளை மண்ணில் இருந்து தயாரிக்கப்படுகிறது.அய்யா வழி பக்தர்களின் திருமண நிகழ்வுகளையும் சமூகப் பெரியவர் ஒருவரே தலைவராக நின்று நடத்தி வைக்கிறார். சமத்துவம் போற்றும் கிணறு சாதிப் பாகுபாடு தலை விரித்து ஆடிய காலகட்டத்தில் சுவாமிதோப்பில் அய்யா வைகுண்டர் சமத்துவ கிணறு ஏற்படுத்தினார். இந்தக் கிணறுக்கு முத்திரிக் கிணறு என்று பெயர். அய்யா வழி பக்தர்கள் சுவாமிதோப்பு தலைமை பதிக்கு செல்வதற்கு முன்பு இந்த முத்திரிக் கிணற்றில் நீர் இறைத்து நீராடி அந்தக் கிணற்றுக்கு மரியாதை செலுத்தி விட்டுத்தான் சுவாமிதோப்பு பதிக்குள் நுழைகின்றார். முத்திரி என்ற சொல்லுக்கு உத்தரவாதம் தருதல், நியமித்தல் என்று பொருள்படுகிறது. சுவாமி தோப்பு தலைமைப் பதி மட்டுமல்லாது இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் அனைத்து அய்யா பதிகளிலும் இதே போல் முத்திரிக் கிணறு அமைக்கப்பட்டிருக்கின்றது. அய்யா வைகுண்டரின் சிந்தாந்தம் “நீ தேடும் இறைவன் உனக்குள்ளேயே இருக்கின்றான்” என்பதுதான். அதைக் குறிப்பால் உணர்த்துவதுதான் இந்த வழிபாட்டு முறை.
புதுக்கோட்டை சமஸ்தானம் இந்தியாவில் இணைந்த நாள்
1947 ஆகஸ்ட் 15 ல் இந்தியா சுதந்திரம் பெற்றது.அதில் 1948, மார்ச் 4வரை புதுக்கோட்டை சமஸ்தானம் இடம் பெறவில்லை. இந்திய யூனியனுடன் சேரமருத்து தனி சமஸ்தானமாகவே இருப்பது என்கிற நிலைப்பாட்டை எடுத்தார் புதுக்கோட்டை மன்னர் ராஜகோபாலத்தொண்டைமான். சர்தார் வல்லபாய் படேல் எடுத்த நிர்பந்த நடவடிக்கைகளுக்குப் பின்னர் அவரும் பணிந்தார். அவற்றுக்குப் பின்னர்மார்ச் 4 (1948) ஆம் நாள். புதுக்கோட்டை சமஸ்தானம் இந்திய யூனியனில் இணைந்து திருச்சி மாவட்டத்தின் மூன்று வட்டங்களாக செயல் பட்டது. கட்டாயமாக இணைக்கப்பட்டாலும் அதற்குரிய சன்மானம் வழங்கப்பட்டதுடன், அரசியல் அதிகாரத்தை மன்னர் விரும்பாததால் அவர் குடும்பத்தினருக்கு பங்களிக்கப்பட்டு அது நிறுத்தப்படும்வரை அளிக்கப்பட்டது