ரமலான் நோன்பினை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமியர்களின் புனித மாதமாக கருதப்படுவது நோன்பு மாதமான ரமலான் மாதமாகும். முஸ்லிம்களின் புனித நூலான குர்ஆன் இந்த மாதத்தில் தான் அருளப்பட்டது என்பதால், இஸ்லாமியர்கள் இந்த மாதத்தை புனித மாதமாக கருதி, மாதம் முழுக்க நோன்பினை கடைபிடிப்பார்கள். இஸ்லாமிய வழக்கத்தில் சந்திரனின் பிறை பார்க்கப்பட்டு மாதம் கணக்கிடப்படுகிறது. அதன்படி மாத்ததின் முடிவில் பிறை தென்பட்டால் ஒரு மாதத்தின் நாட்களை 29-தோடு நிறுத்திக் கொள்வர். பிறை தென்படவில்லை என்றால் 1 நாளை சேர்த்து 30-ஆக பூர்த்தி செய்வர்.
8வது மாதமான மாதமான ஷஃபான் மாதம் பிப்.28ம் தேதி நிறைவு பெற்றது. இதனையடுத்து ரமலானுக்காக தமிழ்நாடு முழுவதும் பிறை பார்க்கப்பட்டது. ஆனால் பிறை தென்படாததால் ஷஃபான் மாதத்தை 30 நாளாக் பூர்த்தி செய்வதாக தமிழ்நாடு அரசின் தலைமை ஹாஜி சுல்தான் சலாஹுதீன் அய்யூப் அறிவித்தார்.
இதனையடுத்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்று பிறை தெரிந்ததை தொடர்ந்து நேற்று (மார்ச். 1) முதல் ரமலான் நோன்பு கடை பிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழ்நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் ரமலான் நோன்பு நேற்று தொடங்கியது. இதனையொட்டி அதிகாலையிலேய இஸ்லாமியர்கள் உணவை உட்கொண்டு நோன்பை தொடங்கினர். மேலும், பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகையிலும் ஈடுபட்டனர்.
உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களால் கடைபிடிக்கப்படும் ஒரு மத நடைமுறையாகும். ரமலான் நோன்பு என்பது இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் ஒன்றாக உள்ளது. கலிமா, தொழுகை, ஜகாத் மற்றும் ஹஜ் ஆகியவையே மீதமுள்ள 4 கடமைகளாகும். பொதுவாக 30 நாட்களுக்கு கடைபிடிக்கப்படும் இந்த நோன்புகளில், விடியற்காலை (ஸஹர்) முதல் சூரிய அஸ்தமனம் (இஃப்தார்) வரை முஸ்லிம்கள் சாப்பிடவோ, எதையும் குடிக்கவோ மாட்டார்கள். . மாலை சூரியன் மறைந்ததும் நோன்பு திறக்கும் நேரத்தில் பேரீச்சம் பழத்தை முதல் உணவாக எடுத்துக் கொண்டு நோன்பினை முடித்துக் கொள்வார்கள்.
இந்த நிலையில் ரமலான் நோன்பினை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தவெக பொதுச்செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது..
“ ஈகைப் பண்பையும் நல்லிணக்கத்தையும் போற்றும் புனித ரமலான் நோன்பு இஸ்லாமியப் பெருமக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி, வரும் 7ஆம் தேதி (07.03.2025) மாலை. சென்னை ராயப்பேட்டை ஓய்.எம்.சி.ஏ. அரங்கில் நடைபெற உள்ளது. இதில் தவெக தலைவர் விஜய் இஸ்லாமியப் பெருமக்களோடு கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்.
இடம்:ஓய்.எம்.சி.ஏ.அரங்கம். ராயப்பேட்டை சென்னை
தேதி: 07.03.2025 வெள்ளிக்கிழமை
நோன்பு திறக்கும் நேரம்: மாலை, சரியாக மணி 6.24
மக்ஃரிப் பாங்கு: மாலை, மணி 6.28
மக்ஃரிப் தொழுகை: மாலை. மணி 6.35 ஒய்.எம்.சி.ஏ. அரங்கிற்குள்)
மக்ஃரிப் தொழுகை முடிந்ததும் தவெக சார்பில் இஃப்தார் விருந்து நடைபெறும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.