சென்னை ஆல்பர்ட் திரையரங்கில் காலாவதியான உணவுப் பொருட்கள் விற்பனை தொடர்பாக, உணவுப் பாதுகாப்புத்துறையினர் சோதனை நடத்தி, கேண்டீனின் உரிமத்தை ஓராண்டுக்கு ரத்து செய்துள்ளனர். சென்னை எழும்பூரில் உள்ள ஆல்பர்ட் திரையரங்கில் நேற்று படம் பார்க்க வந்தவர்கள் சிலர் கேண்டீனில் குளிர்பானம் வாங்கி குடித்துள்ளனர். அப்போது குளிர்பானத்தில் சாராயம் துர்நாற்றம் வீசுவதாகும், தூசிகள் இருந்ததாகவும் குற்றச்சாட்டு முன்வைத்து கேண்டீன் உரிமையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், சென்னை உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் சதீஷ்குமார் தலைமையில், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அங்கு ஆய்வினை மேற்கொண்டனர்.
ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் சதீஷ்குமார்,
“தியேட்டரில் உள்ள கேண்டீனில் விற்கப்பட்ட குளிர்பானத்தில் பூஞ்சைகள்
இருந்ததாகவும், சாராயம் துர்நாற்றம் வீசுவதாகவும் பொதுமக்கள் குற்றச்சாட்டு முன்வைத்த நிலையில் சோதனை செய்தோம். ஆய்வின்போது குளிர்பான பாட்டில்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.
காலாவதியான பாப்கார்ன் அதிகமாக வைக்கப்பட்டிருக்கிறது. இதனை எதற்காக வைத்திருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. பாப்கார்ன் போடும் அட்டைப்பெட்டி முழுவதும் பூஞ்சைகளாக இருக்கின்றது. பாப்கார்ன் போடும் அட்டைப்பெட்டிகள் நிறைய மூட்டைகளாக உள்ளது. அனைத்தையும் பறிமுதல் செய்து இருக்கிறோம்.
கேண்டீன் உரிமத்தை ரத்து செய்து இருக்கிறோம். கேண்டீன் உரிமையாளர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். காலாவதியான பிரெஞ்ச் ப்ரைஸ், நட்ஸ் இதுபோன்ற பொருள்கள் வைத்திருந்தனர். இதையும் பறிமுதல் செய்து இருக்கிறோம்.
சென்னை முழுக்க உணவுத்துறை பாதுகாப்பு குழுக்களை ஒருங்கிணைத்து அனைத்து திரையரங்குகளிலும் பழைய பொருட்கள் ஏதேனும் உள்ளதா என்பது குறித்து சோதனை செய்ய உள்ளோம். விசாரணை நடத்தி அபராதம் விதிக்கப்படும்” என்றார்.