“டிராகன்” படம் வெளியாகி 9 நாட்களில் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
‘லவ் டுடே’ படத்தில் கதாநாயகனாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ‘டிராகன்’ படத்தில் நடித்துள்ளார். கடந்த 21-ந் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் விஜே சித்து, ஹர்ஷத், சினேகா மற்றும் பிரபல இயக்குனர்களான மிஷ்கின் , கவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கதாநாயகிகளாக அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோகர் ஆகிய இருவரும் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு ரசிகர்களின் ஆதரவு பெருகி வருவதால் கூடுதல் திரையரங்குகளும் ஒதுக்கப்பட்டுள்ளதால், இந்த படத்தைக் காண ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக திரண்டு வருகின்றனர். இப்படம் முதல் நாளில் இருந்தே வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. முதல் வாரத்தில் உலக அளவில் ரூ. 50 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டது. படம் வெளியாகி 9 நாட்களில் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
“டிராகன் திரைப்படத்திற்கு நீங்கள் அளித்த அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி. இந்த படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பு சிலர் எனது நம்பிக்கையை உடைக்க நினைத்தனர். நாங்க இருக்கோம் பாத்துக்கலாம் எனக்கூறிய உங்கள் அனைவருக்கும் நன்றி! இந்த படத்தில் சில தவறுகள் செய்திருந்தால் அதை திருத்திக் கொள்கிறேன். எனது அடுத்த படத்தை நிச்சயமாக இன்னும் சிறப்பாக கொடுப்பேன்” என்று இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.