ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது புண்ணியமாக கருதப்படுகிறது. இதன் காரணமாக மாதந்தோறும் அமாவாசை நாட்களில் ராமேஸ்வரத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
அதன்படி மாசி மாத அமாவாசையான இன்று அதிகாலை ஏராளமான மக்கள் அக்னி தீர்த்தக் கடற்கரையில் குவிந்து புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். பின்னர் ராமநாத சுவாமி கோவிலில் உள்ள தீர்த்த கிணறுகளில் நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
சிவராத்திரியை முன்னிட்டு ராமேஸ்வரம் கோவிலில் நேற்று மாலை முதல் விடிய விடிய சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ராமநாதசுவாமி-பர்வதவர்த்தினி அம்பாளுக்கும் பல்வேறு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றன. மகா சிவராத்திரி திருவிழாவில் இன்று காலை சுவாமி-அம்பாள் இந்திர வாகனத்தில் எழுந்தருளினர். மாலையில் தங்க ரிஷப வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள்.