திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கடந்த 18-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகுவிமரிசையாக நடந்து வருகிறது. விழா நாட்களில் தினமும் காலையிலும் இரவிலும் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண வெங்கடேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
வாகன சேவைகளுக்கு முன்னால் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. பஜனை கோஷ்டிகள் பக்தி சங்கீர்த்தனங்களை பாடினர். ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவின் நிறைவு நாள் நிகழ்வுகள் நேற்று நடைபெற்றன. காலையில் உற்சவ மூர்த்திகளான ஸ்ரீ கல்யாண வெங்கடேஸ்வரர், ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் ஸ்ரீ சுதர்சன சக்கரத்தாழ்வாருக்கு ஸ்னபன திருமஞ்சனம் உள்ளிட்ட சடங்குகள் நடைபெற்றன. பின்னர், காலை 10 மணிக்கு, கோவிலுக்கு எதிரே உள்ள புஷ்கரணியில் சக்கர ஸ்நானம் எனப்படும் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற்றது.
மாலையில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடியிறக்கப்பட்டது. இத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவு பெற்றது. விழாவில் சிறப்பு நிலை துணை அதிகாரி வரலட்சுமி மற்றும் கோவில் பிற துறை அதிகாரிகள், ஊழியர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.