“தவெக லட்சக்கணக்கான இளைஞர்களின் இயக்கம்” – பிரசாந்த் கிஷோர் பேச்சு..!

தவெக அரசியல் கட்சி இல்லை, இது லட்சக்கணக்கான இளைஞர்களின் இயக்கம் என்று பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் கடந்த ஆண்டு (2024) பிப்ரவரி மாதம் 2-ம் தேதி தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கினார். கடந்த அக்டோபர் மாதம் விக்கிரவாண்டியில் மாநாட்டை நடத்தினார். அந்த மாநாட்டில், அரசியல் மற்றும் கொள்கை எதிரிகள் குறித்து விஜய் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. தொடர்ந்து, 2026 சட்டப்பேரவைத் தேர்தலை இலக்காக கொண்டு கட்சி வேலைகளில் விஜய் தீவிரம் காட்டி வருகிறார்.

இதற்கிடையே, தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி கடந்த பிப்.2ம் தேதியுடன் ஓராண்டு நிறைவடைந்தது. இந்த நிலையில், தமிழக வெற்றிக்கழகத்தின் 2-ம் ஆண்டு தொடக்க விழா மாமல்லபுரம் பூஞ்சேரியில் உள்ள சொகுசு விடுதியில் இன்று (பிப்.26) பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் தவெக தலைவர் விஜய்யுடன் அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரும் கலந்து கொண்டார். அப்போது இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரசாந்த் கிஷோர்,

“தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றிக்கு பிரசாந்த் கிஷோர் காரணமாக இருக்க முடியாது. உங்களின் வெற்றிக்கு நீங்கள் செய்யும் பணியே காரணம். உங்கள் தலைவரும், தொண்டர்களும் செய்யும் பணிகளால் மட்டுமே வெற்றி கிடைக்கும்.

பிறகு நான் ஏன் வந்திருக்கிறேன் எனக் கேட்கலாம். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பே தேர்தல் வியூகப் பணியில் இருந்து ஓய்வுபெற்றுவிட்டேன். 2021 தேர்தலில் தமிழகம் மற்றும் மேற்குவங்கத்துக்கான வேலை செய்த பிறகு நான் ஓய்வு பெற்றுவிட்டேன். இங்கு தவெகவின் தேர்தல் வியூக வகுப்பாளராக நான் வரவில்லை. அவர்களுக்கு என் வியூகமும் தேவையில்லை. நான் எனது சகோதரர், நண்பருமான விஜய்க்கு ஆலோசனை கூற வரவில்லை. அவருக்கு அது தேவையும் இல்லை.

என்னைப் பொறுத்தவரை விஜய் ஒரு அரசியல் தலைவர் அல்ல, அவர் தமிழகத்தின் புதிய நம்பிக்கையாக இருக்கிறார். அதனால் தான் நான் இங்கு வந்துள்ளேன். தவெக அரசியல் கட்சி அல்ல, இது லட்சக்கணக்கான இளைஞர்களின் இயக்கம். 35 ஆண்டுகால அரசியலில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தவுள்ளார் விஜய், அதனால்தான் நான் இங்கு வந்துள்ளேன். என்னால் முடிந்த உதவிகளை செய்ய வந்துள்ளேன். எனக்கு தமிழ் பேச வராது, ஆனால் புரிந்துகொள்ள முடியும்.

அடுத்தாண்டு தவெக வென்றால், நான் மீண்டும் இங்கு வந்து தமிழில் நன்றி கூறி உரையாற்றுவேன். தமிழகத்தில் நடைபெறும் அரசியல் ஊழல் வேறெங்கும் கண்டதில்லை. இதனை சரிசெய்ய வேண்டும். தமிழகத்தில் தோனி மிகவும் பிரபலமானவர். அடுத்தாண்டு எனது பங்களிப்புடன் தவெக வெற்றி பெற்றால், அவரைவிட நான் பிரபலமாவேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!