சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘பராசக்தி’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளது.
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படம் ‘பராசக்தி’. இந்த படத்தில் ஜெயம் ரவி, ஸ்ரீலீலா மற்றும் அதர்வா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்க ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார்.
இந்த படமானது கடந்த 1965 ஆம் ஆண்டு நடந்த இந்தி திணிப்பை மையமாகக் கொண்டு உருவாக்கப்படுகிறது. இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவராக நடிக்கிறார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டது. சென்னை, சிதம்பரம், காரைக்குடி உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு பணிகள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து கடந்த சில நாட்களாக மதுரையில் படப்பிடிப்பு பணிகள் நடைபெற்றது. தற்போது முதற்கட்ட படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளதாக இயக்குனர் சுதா கொங்கரா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இயக்குனர் சுதா கொங்கரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “மீனாட்சி, மயில், மல்லி; முதல்கட்ட படப்பிடிப்பு இந்த பூமியில் என்னுடைய விருப்ப இடமான மதுரையில் முடிவடைந்தது” எனத் தெரிவித்துள்ளார்.