இன்றைய முக்கிய நிகழ்வுகள் (பிப்ரவரி 14)

வேலண்டைன்ஸ் டே

இப்போ சர்வதேச அளவில் பாப்புலராகி விட்ட காதலர் தினம் பற்றியும் இதன் பின்னணி பற்றியும் வெவ்வேறான தகவல்கள் இருக்கின்றன. அது பத்திய இண்ட்ரஸ்டிங்கான தகவல்களில் சில இதோ: வேலண்டைன்ஸ் டே வேலண்டைன்ஸ் டே என்று உலகமெங்கும் கொண்டாடப்படும் காதலர் தினம் வேலண்டைன் பாதிரியாரின் நினைவாக கொண்டாடப்படுகிறது என்பது நம்பிக்கை. கி.பி 270 ம் ஆண்டு ரோம பேரரசரான இரண்டாம் கிளாடியுஸ் காலத்தில் ஆண்கள் திருமணம் செய்து கொள்ள தடை இருந்தது. திருமணம் செய்து கொண்டால் ஆண்களுடைய வீரம் குறைந்து விடும் என்பது அரசரின் நம்பிக்கை. இதனால் பெண்களை ஏறெடுத்தும் பார்க்கக் கூடாது என்ற தடை விதித்திருந்தார் ரோமப் பேரரசர். திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையை என்ஜாய் செய்யவேண்டும் என்று துடித்தவர்களுக்கு உதவி செய்து அவர்களுக்கு அரச கட்டளையை மீறி திருமணம் நடத்திவைத்தார் வேலண்டைன். இந்த உதவிக்கு மன்னன் மரணதண்டனையை பரிசளித்தார். இரண்டு மனங்களை திருமண பந்தத்தில் இணைத்து வைத்த பாதிரியார் வேலண்டைன் கொல்லப்பட்ட நாள் பிப்ரவரி 14. வேலண்டைன்ஸ் டே குறித்து உலவும் கதைகளில் பெரும்பாலானவர்கள் ஏற்றுக்கொண்டுள்ள கதை இது. சீனர்களின் காதலர் தினம் சீனர்களின் காதலர் தின கதை சுவாரஸ்யமானது. சுவர்க்கத்தின் சக்கரவர்த்திக்கு ஏழு மகள்கள். ஏழாவது மகளான ஸி நூ அழகிகளுக்கெல்லாம் அழகி ! பேரழகி. ஒரு நாள் ஏழு சகோதரிகளும் நதியில் குளித்துக் கொண்டிருந்தார்கள். நுவூ எனும் இளைஞன் அவர்களைப் பார்த்தான். குறும்புத் தனமாக எல்லாருடைய ஆடைகளையும் எடுத்துப் போய்விட்டான். ஆடைகள் இல்லாமல் வெளியே வரமுடியாமல் சகோதரிகள் தவித்தனர். கடைசியில் தங்கள் கடைசித் தங்கையான ஸி நூ வை அவனிடம் சென்று ஆடை வாங்கி வர அனுப்பினார்கள். ஈரம் சொட்டச் சொட்ட எழிலுடன் வந்து நின்ற அவளைப் பார்த்தவுடன், நுவூ காதல் கொண்டான். இந்த காதல் திருமணத்தில் முடிந்தது. விஷயம் தெரிந்த மன்னர் இருவரையும் பிரித்து வானத்தின் இரண்டு மூலைகளில் கொண்டு போய் விட்டார். அவர்கள் ஏழாவது மாதத்தின், ஏழாவது நாளில் மட்டும் தான் சந்தித்துக் கொள்ள முடியும். அந்த நாள் தான் சீனர்களின் காதலர் தினம். கிருஸ்துவ விழா பண்டைய காலத்தில் ரோமில் கொண்டாடப்பட்ட ஒரு விழா லூப்பர் கேலியா. இது பிப்ரவரி 13 முதல் பிப்ரவரி 15 வரை கொண்டாடப்படும். வாழ்க்கை வளமாக அமைய கடவுளை வேண்டும் விழா இது. ரோம் நகரில் ஆடல் பாடல் என அமர்க்களப்படும். இதனை கி.பி 490 களிலி போப் கெலேஷியஸ் தடை செய்தார். ஆனாலும் மக்கள் இதனை விடவில்லை. இந்த விழாவின் வீரியத்தைக் குறைக்கவும், ஒரு கிருஸ்தவ விழாவின் மூலம் செயலிழக்கச்செய்யவும் போப் தீர்மானித்தார். எனவேதான் பிப்ரவரி 14ம் தேதியை புனித வேலண்டைன்நாள் என அறிவித்தார் என்றும் பலரால் நம்பப்படுகிறது. பிரியமானவர்களுக்கு பரிசு கிழக்கு இங்கிலாந்தின் நார்போக் பகுதியில் வேலண்டைன்ஸ் தினத்தை சிறப்பாக கொண்டாடுகின்றனர். கிருஸ்துமஸ் காலத்தில் கிருஸ்துமஸ் தாத்தா வீடுகளில் பரிசு வழங்குவதைப் போல பிரியத்திற்குரியவர்களின் பின்வாசல் கதவைத் தட்டி இனிப்புகளை வைத்துச் செல்லும் வழக்கம் இருந்துள்ளது. இவ்வாறு இனிப்புகளை வைப்பவர்கள் ஜேக் என்று அழைக்கப்பட்டனர். பாய் ஃப்ரண்ட், கேர்ள் ஃப்ரண்ட் டே ஸ்வீடன் நாட்டில் இந்தநாளை “அனைத்து இதயங்களின் தினம்” என்று அழைக்கின்றனர். போர்ச்சுக்கல் நாட்டில் காதலர் தினத்தை “நமோரோடோஸ் டயாடாஸ்” என்று அழைக்கின்றனர். இதற்கு அர்த்தம் பாய்ஃபிரண்ட் மற்றும் கேர்ள்ஃப்ரண்ட் தினம் என்பதாகும். ஸ்பெயினில் இந்த நாளை செயின்ட் வேலண்டைன் என்று அழைக்கின்றனர். நட்புக்கு மரியாதை பின்லாந்து நாட்டில் வேலண்டைன்ஸ் டே சற்று வித்தியாசமானது. இது காதலர்களுக்கான தினம் அல்ல. இந்த நாளை அவர்கள் ‘ஸ்டேவான்பாபியா’ என்று அழைக்கின்றனர். அதாவது இதற்கு நண்பர்கள் தினம் என்று பொருள். நண்பர்களாய் இருப்பவர்கள் இந்த நாளை விமரிசையாக கொண்டாடுகின்றனர். நண்பர்களுக்கு வாழ்த்து அட்டைகள் அனுப்புவதும், பரிசுகள் கொடுப்பதும் என இந்த நாளை சிறப்பாக கொண்டாடுகின்றனர். எங்கெங்கோ இருக்கும் நண்பர்கள் எல்லாம் ஒன்றாக கூடி இந்த நாளை உற்சாகத்துடன் கொண்டாடுவது சிறப்பம்சம். ஹாலிடே ஆஃப் செக்ஸ் பிரேசில் நாட்டில் பிப்ரவரி 14 ம் தேதியை ஹாலிடே ஆஃப் செக்ஸ் என்று அழைக்கின்றனர். அந்த நாளை அமர்க்களப்படுத்துவார் பிரேசில் நாட்டினர். அபோல் அவர்களுக்கு காதலர் தினம் வேறு தனியாக ஒருநாள் உண்டு. அது ஜூன் 2 ம் தேதி அந்தநாளில் காதலர்கள் மற்றும் தம்பதியர் வாழ்த்து அட்டை, சாக்லேட், பரிசு, முத்தம் என சகலத்தையும் பரிமாறிக்கொள்றாங்க.

கோவையில் தொடர் வெடிகுண்டு சம்பவம் நிகழ்ந்த நாள் (பிப்.14- 1998) 1998-ம் ஆண்டு கோவையில் நடந்த இனக்கலவரம் குண்டுவெடிப்பாக மாறியது. பிப்ரவரி 14-ந்தேதி கோவையில் பல்வேறு இடங்களில் தொடர்குண்டு வெடித்தது. இதில் 58 -க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். 200-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

இதே பிப்ரவரி 14,( 1946)ல்தான் – ENIAC என்ற முதல் தலைமுறைக் கணினி அறிமுகமானது. எனியாக் (ENIAC – Electronic Numerical Indicator Analyzer Computer) என்பதே உலகின் முதலாவது முழுமையான மின்னணு கணினியாக (Electronic Computer) கருதப்பட்டது. இது 30 டன் எடையும் 100 அடி நீளமும் 8 அடி உயரமுமாகக் காணப்பட்டது. இதில் 17468 வெற்றிடக் குழாய்கள் (Vacuum Tube) பயன்படுத்தப்பட்டன. இவற்றை புரிந்து கொள்ள மிகக் கடினமான இயந்திர மொழியிலேயே (Machine Level Language) இயக்க முடியும் . இக்கணினியில்தான் முதன்முறையாக மையச் செயலகமும் (Central Processing Unit – CPU), நினைவகமும் (Memory) பயன்படுத்தப்பட்டன. நிரலையும், தரவுகளையும் (Data) நினைவகத்தில் சேமித்து வைத்துக் கொள்ள முடியும். இக்கணினியின் பாகங்கள் ஒரு பெரும் அறை முழுவதையும் நிரப்பியிருந்ததன

எழுத்தாளர் நாவலாசிரியர், கவிஞர், கட்டுரையாசிரியர் என பன்முகத் திறன் கொண்டவருமான பி.ஜி.வுட்ஹவுஸ் (பெல்ஹம் கிரென்வில் வுட்ஹவுஸ்) (P.G.Wodehouse) காலமான தினம் இன்று 1900-ம் ஆண்டில் ‘மென் ஹூ மிஸ்ட் தேர் வோன் வெட்டிங்ஸ்’ என்ற இவரது முதல் நாவல் வெளிவந்தது. தொடர்ந்து பல வெற்றிகரமான நாவல்களை எழுதினார். இவற்றில் பல விற்பனையில் சாதனை படைத்தன. தனது நாவல்களில் பெஸ்டி வூஸ்டர், ஜீவஸ் போன்ற மீண்டும் மீண்டும் இடம்பெறும் பல கதாபாத்திரங்களைப் படைத்தார். கே பால்டன், ஜேரொம் கென் ஆகியோருடன் இணைந்து பிராட்வே இசை நகைச்சுவை நாடகங்களை எழுதியுள்ளார். இவை அமெரிக்க இசை நாடக வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தன. இசை நாடகம், பாடல்கள் இயற்றியுள்ளார். இவரது படைப்புகள் முதல் உலகப் போருக்கு முன்னும் பின்னும் இருந்த ஆங்கிலேய மேல்தட்டு மக்களின் வாழ்க்கையை பிரதிபலித்தன. ஜெர்மன் படைகளால் கைது செய்யப்பட்ட இவர், அரசியல் ரீதியாகவும், சமுதாய ரீதியாகவும் பல கடுமையான நெருக்கடிகளை சந்தித்தார். ஆனால், எப்போதுமே எழுதுவதை மட்டும் இவர் நிறுத்தியதே இல்லை. இன்றும் உலகம் முழுவதும் வாசிக்கப்படும் படைப்பாளியாக புகழ் பெற்றுள்ளார். 70 ஆண்டுகள் தொடர்ந்து எழுதி வந்த, சாதனைப் படைப்பாளியான பி.ஜி. வுட்ஹவுஸ் இதே நாளில் 1975-ம் ஆண்டு மறைந்தார்.

பிப்ரவரி 14 2019 – புல்வாமா தாக்குதல் 2019 புல்வாமா தாக்குதல் என்பது இந்தியாவின், சம்மு காசுமீர், புல்வாமா மாவட்ட அவந்திபோரா பகுதியில் ஸ்ரீநகர் ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில், மத்திய சேமக் காவல் படையினர் சென்று கொண்டிருந்த வாகனங்கள் மீது 2019 பிப்ரவரி 14 ஆம் நாள் நடந்த தற்கொலைத் தாக்குதல் ஆகும். இத்தாக்குதலில் 40 பாதுகாப்புப் படையினரும், தற்கொலை தீவிரவாதி ஒருவரும் உயிரிழந்தனர். இத்தாக்குதலுக்கு ஜெய்சு-இ-முகமது என்ற தீவிரவாதக் குழு பொறுப்பேற்றது.

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு: தமிழக முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா, வி. கே. சசிகலா உட்பட நான்கு பேர் குற்றவாளிகள் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கிய தினமின்று. ஜெயலலிதா, 1992-ம் ஆண்டு முதல் முதலமைச்சராகப் பொறுப்பேற்றதிலிருந்து சசிகலா அவருடன் இருந்தார். ஜெயலலிதா செய்த ஒவ்வொரு செயலும் சசிகலாவுக்கு தெரிந்தேயிருந்தது. 1996-ம் ஆண்டு ஆட்சி மாறியபோது… ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீது சுப்பிரமணியன் சுவாமி சொத்துக் குவிப்பு வழக்குத் தொடுத்தார். அப்போது, தி.மு.க ஆட்சி நடந்து வந்த சமயம் என்பதால், வழக்கை அந்தக் கட்சியே கையிலெடுத்தது. ஜெயலலிதா மீதும் சொத்துக் குவிப்பு வழக்குப் பதிவானது. அவர், வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. 1997-ம் ஆண்டு அவர் ஜாமீனில் வெளியே வந்தார். வழக்கு, பெங்களூரு ஐகோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து வழக்கு நிலுவையில் இருந்துவந்த நிலையில், கடந்த 2014-ம் ஆண்டு ஜெயலலிதாவுக்கு தண்டனையை உறுதி செய்தது பெங்களூரு உயர் நீதிமன்றம். நால்வருக்கும் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ஜெயலலிதாவுக்கு 100 கோடி ரூபாய் அபராதத் தொகையும், மற்ற மூவருக்கு 10 கோடி ரூபாய் அபராதத் தொகையும் அளித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. அதை அடுத்து 21 நாட்கள் சிறைவாசம் அனுபவித்து, பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார் ஜெயலலிதா. இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதன் தீர்ப்பு இதே 14.02 நாளில் 2017ல் வழங்கப்பட்டது. சசிகலா அதிமுக பொதுச் செயலாளராகி, முதலமைச்சராகவும் பதவியேற்க இருந்த நிலையில், சொத்துக் குவிப்பு வழக்குத் தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட நான்கு பேரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. ”ஜெயலலிதாவும் குற்றவாளிதான். ஆனால், அவர் இறந்துவிட்டதால் அவரை இந்த வழக்கிலிருந்து விடுவிக்கிறோம்” என நீதிபதிகள் கூறினர். மற்ற மூவருக்கும் 4 ஆண்டு சிறைத் தண்டனையும் 10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டதும் அதனால் நான்காண்டு ஜெயில் வாசம் முடிந்து இப்போது அதே போயஸ் கார்டனில் ஜெ. வீட்டுக்கு எதிரிலேயே ஜெ.வீட்டை விட பிரமாண்டமாக வீடு.. ஸாரி மாளிகை கட்டி குடி புகுந்து இப்போதும் அரசியல் பேசுகிறார் என்பது வரலாறு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *