இன்றைய முக்கிய நிகழ்வுகள் (பிப்ரவரி 12)

காதலர் வாரத்தின் ஆறாவது நாள்,

அதாவது பிப்ரவரி 12 ஆம் தேதி ஹக் டே கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் மக்கள் தங்கள் வாழ்க்கை துணையை அல்லது தனக்கு பிரியமான எந்தவொரு நபரையும் அரவணைப்பார்கள். கட்டிப்பிடிப்பது என்பது உடல் ரீதியான தொடர்பு என்பதை விட, பரஸ்பர அன்பை அதிகரிக்கிறது மற்றும் ஒருவரை நிம்மதியாக உணர வைக்கிறது என்றே சொல்லலாம் அனைத்து காதலர்களுக்கும், திருமணமான தம்பதிகளுக்கும் ஹக் டே மிகவும் சிறப்பு வாய்ந்தது. நாம் ஒருவரை கட்டிப்பிடிக்கும்போது, ​​நம் உடலில் இருந்து பல ஹார்மோன்கள் வெளியாகின்றன, அவை நமது ஆரோக்கியத்திற்கு நன்மை அளிக்கிறது. இது தவிர நாம் விரும்பும் நமது துணையின் மீதான அன்பும், நம்பிக்கையும் பன்மடங்கு அதிகரிக்கிறது. வார்த்தைகள் மற்றும் எமோஜிகளுக்கு அப்பாற்பட்ட உடல் ரீதியான தொடுதலின் முக்கியத்துவத்தை ஹக் டே நமக்கு நினைவூட்டுகிறது. மேலும், அரவணைப்பானது ஒருவர் மீதான அனுதாபம், இரக்கம் மற்றும் அன்பை வெளிப்படுத்துகிறது. அறிவியலின் படி, நாம் கட்டிப்பிடிக்கும்போது, ​​​​நம் உடல்கள் ஆக்ஸிடாஸினை வெளியிடுகின்றன – இது “காதல் ஹார்மோன்” என்று அழைக்கப்படுகிறது. இது நம்பிக்கை மற்றும் உணர்ச்சி ரீதியான பிணைப்பை வளர்க்கிறது. மேலும், கட்டிப்பிடிப்பது இயற்கையான மன அழுத்த நிவாரணியாகக் கருதப்படுகிறது, ஏனெனில் இது கார்டிசோலின் அளவைக் குறைக்கிறது, பதட்டத்தைக் குறைக்கிறது மற்றும் அமைதியான உணர்வைத் தருகிறது. மேலும், கட்டிப்பிடிப்பது உடல் மற்றும் உணர்ச்சி ரீதியான காயங்களை ஆற்றும் என்றும் நம்பப்படுகிறது, அதாவது உடைந்த இதயங்களைச் சரி செய்கிறது, ஆன்மாக்களை அமைதிப்படுத்துகின்றன, மேலும் நாம் தனிமையாக இல்லை என்பதை நமக்கு நினைவூட்டுகின்றன.

செங்கை நாளின்று

செங்கை நாள் அல்லது சிவப்புக் கை நாள் என்பது ஆண்டுதோறும் பிப்ரவரி 12 ஆம் தேதி அனுட்டிக்கப்படும் நாள் ஆகும். இந்நாள் சிறுவர்களை இராணுவத்தில் அல்லது போர்களில் அரசியல் தலைமைகள் தமக்கு சாதகமாகப் பயன்படுத்துவதற்கு எதிரான நாள் ஆகும். போர்வீரச்சிறுவர் பயன்பாட்டிற்கு எதிரான பன்னாட்டு நாள் எனவும் இது அறியப்படுகின்றது. இந்நாளின் முக்க்கிய நோக்கம், போர்ச்சிறுவர்களுக்கு ஆதரவு அளித்து, அவர்களை பாதுகாப்பதே ஆகும். அண்மைய வருடங்களில் காங்கோ மக்களாட்சிக் குடியரசு, ருவாண்டா, உகாண்டா, சூடான், கோட் டிவார், மியான்மர், பிலிப்பீன்சு, கொலம்பியா, பலஸ்தீன் ஆகிய நாடுகளில் சிறுவர்கள் போர்வீரர்களாகப் பயன்படுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறான நடவடிக்கைக்கு எதிராக, 2002 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபைப் பொதுக்கூட்டத்தில் செங்கைநாளை பிரகடனம் செய்வது என முடிவு செய்யப்பட்டது.

ஜி.யு.போப் காலமான தினமின்று

தமிழை தாய்மொழியாக கொண்ட அறிஞர்களுக்கு இணையாக அயல் நாட்டு தமிழ் அறிஞர்களும் தமிழ் மொழியை பொறுத்தளவில் அதன் வளர்ச்சியை உலகறிய செய்ததில் உழைத்துள்ளனர். அந்த வகையில் முக்கியமான ஒருவர் ஜி.யூ.போப். இவர் கனடாவில் 1820 ஏப்ரல் 24-ல்பிறந்தார். ஒரு கிறிஸ்துவ மதபோதகராக 1839-ல் தமிழ்நாட்டுக்கு வந்தார்.தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம் உட்பட பல மொழிகளையும் கற்றார். தமிழ் மொழி மீது மிகுந்த பற்று கொண்ட போப், தமிழுக்காக சுமார் 40 ஆண்டு காலம் சேவை செய்துள்ளார். பல சிறப்புகள் உள்ள தமிழை உலகறியச் செய்யும் விதமாக மொழிபெயர்க்க நினைத்தார். அப்படியாக திருக்குறள், திருவாசகம் உட்பட பல நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். கனடாவில் பிறந்து கிறிஸ்தவ சமய போதகராக தமிழ் நாட்டிற்கு வந்து 40 ஆண்டு காலம் தமிழுக்கு சேவை செய்தவர்.கனடாவின் பிரின்ஸ் எட்வெர்ட் தீவில் (இளவரசர் எட்வர்ட் தீவு) என்னுமிடத்தில் ஜான் போப், காதரீன் யூக்ளோ போப் ஆகியோருக்கு பிறந்தார். குழந்தைப் பருவத்திலேயே இங்கிலாந்துக்கு குடும்பத்துடன் குடிபெயர்ந்தார். 19 வயது வரை ஹாக்ஸ்டன் கல்லூரியில் கல்வி பயின்றார். விவிலிய நூற்கழகத்தைச் சேர்ந்து சமயப்பணி புரிவதற்காக 1839-ல் தமிழ் நாட்டிற்கு வந்தார். கப்பலில் பயணம் செய்த எட்டு மாதங்களிலேயே தமிழை நன்கு கற்றார். தூத்துக்குடிக்கு அருகே உள்ள சாயர்புரத்தில் தங்கியிருந்த அவர் ஆரியங்காவுப் பிள்ளை, இராமானுசக் கவிராயரிடத்திலும் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றார். அருகில் உள்ள செந்தியம்பலம் கிராமத்தை சேர்ந்த நம்மாழ்வார் என்பவர் போப் உடன் நட்பாகி ஞான சிகாமணி என்று தன் பெயரை மாற்றிக் கொண்டார். அதனால் ஒரு துவக்க பள்ளிக்கு அவர் பெயரை சூடினார் போப். தமிழ் தவிர தெலுங்கு, மற்றும் சமஸ்கிருதம் ஆகிய மொழிகளையும் கற்றுத் தேர்ந்தார். 1850-ம் ஆண்டு இங்கிலாந்து சென்ற போப் அங்கு என்ற பெண்ணை திருமணம் செய்தார். தம் மனைவியுடன் தமிழகம் திரும்பினார். எட்டு ஆண்டுகள் தஞ்சாவூரில் சமயப்பணியை தொடர்ந்தார். இந்த கால கட்டத்தில் புறநானுறு, நன்னூல், திருவாசகம், நாலடியார் போன்ற நூல்களை கற்றார். சில ஆங்கில மொழி இதழ்களில் தமிழ் குறித்த ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதிய இவர் தன் மதத்தைப் பரப்பவே இத்தனை மெனக்கெடல் செய்தார் என்றும் குற்றம் சாட்டுவோருமுண்டு போப் 1908 பிப்ரவரி 12 அன்று இங்கிலாந்தில் காலமானார்.

டார்வின் நாள்

டார்வின் நாள் (Darwin Day) என்பது ஒவ்வோர் ஆண்டும் இதே பிப்ரவரி 12ம் நாளன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளிலேயே (1809ம் ஆண்டில்) பரிமாணத் தத்துவத்தை உலகுக்கு அளித்த சார்ல்ஸ் டார்வின் பிறந்தார். அறிவியலையும் அறிவியலை மேம்படுத்தவும் உதவிய டார்வினின் பணிகளை இந்நாளில் நினைவு கூறுகிறார்கள். இந்த சூழ்நிலையில் நாமும் டார்வின் பற்றி கொஞ்சம் நினைவுப்படுத்திக் கொள்வோமா? கோழியில் இருந்து முட்டை வந்ததா? முட்டையில் இருந்து கோழி வந்ததா? இந்தக் கேள்விக்கான பதில் கொஞ்சம் சிக்கலானதுதான், இல்லையா? இதே கேள்வி அந்தக் கால விஞ்ஞானிகள் பலருக்கும் வந்துச்சு. அதாவது மனுஷன் எப்படித் தோன்றியிருப்பான் அப்படீங்கிற கேள்வி பல விஞ்ஞானிகளுக்கு வந்தது இயல்புதானே. 19-ம் நூற்றாண்டு வரைக்கும் பலருக்கும் இதுக்குத் துல்லியமான பதில் கிடைக்கல. 19-ம் நூற்றாண்டுல பிரிட்டன்ல உள்ள ஷ்ரூஸ்பரிங்கிற இடத்தைச் சேர்ந்த சார்லஸ் டார்வின்தான் இதுக்குத் திட்டவட்டமான பதிலைக் கண்டுபிடிச்சார். அதாவது மனிதர்கள், குரங்கு இனத்தின் வாரிசுகள். வாலில்லா குரங்குக்கும் நமக்கும் நிறைய ஒற்றுமை இருக்கிறது என்று அவர் கூறினார். இதை எப்படி அவர் கண்டுபிடிச்சார்? அது ஒரு சுவாரசியமான கதை. அதிலும் குறிப்பா அவர் இளைஞனா இருந்தப்போ, பீகிள்கிற கப்பல்ல ஐந்து வருஷம் உலகத்தைச் சுத்தினார். அப்போ கிடைச்ச அனுபவ அறிவு, அறிவியல் அறிவுதான் அவருடைய கண்டுபிடிப்புகளுக்கு ஆதாரம். தொடங்கியது பயணம் ஆரம்பத்துல டார்வினோட அப்பா, டார்வினை டாக்டருக்குப் படிக்க அனுப்பினார். ஆனால், டார்வினுக்கு அது பிடிக்கலை, இயற்கையை ஆராய்ச்சி பண்றதுலதான் அவருக்கு ஆர்வம் இருந்தது. அதனால, டாக்டருக்குப் படிப்பை விட்டுட்டு வந்துட்டார்.டார்வின் மேல அக்கறையா இருந்த கேம்ப்ரிட்ஜ் தாவரவியல் பேராசிரியர் ஹென்ல்ஸோ, 1831-ல் டார்வினுக்கு ஒரு கடிதம் அனுப்பினார்.அதுல ‘பீகிள்கிற கப்பல்ல, இயற்கை ஆராய்ச்சியாளரா போறதுக்குத் தயாரா’ன்னு அவர் கேட்டிருந்தார். ஆனா, அந்தக் கப்பல்ல போறதுக்கு எந்தச் சம்பளமும் கிடையாது. டார்வினோட அப்பா, கப்பல்ல போக ஒத்துக்கல. டார்வினோட மாமா ஜோசியா வெட்ஜ்வுட்தான், பீகிள் கப்பல்ல போறதுக்கு டார்வினோட அப்பாவ சம்மதிக்க வச்சார். இந்தப் பயணத்தில் தனக்குக் கிடைத்த அனைத்து உயிரினங்களையும் டார்வின் ஆராய்ந்தார். அவற்றைப் பற்றிய வர்ணனையை எழுதியும் வைத்தார். ஆரம்பத்தில் பறவைகளையும் உயிரினங்களையும் சுட்டுப் பிடிப்பதில் ஆர்வம் காட்டிய டார்வின், பின்னர் ஒவ்வொரு பகுதியையும் உற்றுநோக்குவதிலும் அப்பகுதி ஏன் அப்படி இருக்கிறது என்பதற்கான காரண, காரியத்தைத் தேடுவதிலும் செலவிட்டார்.இது அவருடைய அறிவை வளர்த்தது. கப்பல், குதிரை, நடை என்று ஒவ்வொரு பகுதியிலும் வாய்ப்பு கிடைத்த வழிகளில் எல்லாம் பயணம் செய்து இயற்கையை உற்று நோக்கினார். வாசிப்பும் எழுத்தும் இயற்கை அறிவியல் தொடர்பாக நிறைய வாசிச்சார். அது மட்டுமில்லாமல், அவர் செஞ்ச இன்னொரு முக்கியமான விஷயம் தினசரி தனது டைரியை எழுதியதுதான். பார்த்த அனைத்து விஷயங்களையும் விட்டுவிடாமலும், விரிவாகவும் எழுதி வைத்தார்.அவருடைய எழுத்தும் வாசிப்பும் புதிய புரிதல்களை ஏற்படுத்தின. லயல் என்பவரின் புவியியல் பற்றிய எழுதிய புத்தகம், மால்தூஸின் மக்கள்தொகை கொள்கை போன்றவற்றைப் படித்ததால்தான், பரிணாமவியல் கொள்கையை டார்வினால் உருவாக்க முடிந்தது. காலபகஸ் தீவுகளில் உள்ள உயிரினங்களின் வெவ்வேறு வகைகள், குறிப்பாக உண்ணும் உணவுக்கு ஏற்ப தினைக் கருவிகளின் அலகில் ஏற்பட்டுள்ள மாற்றம் ஆகியவற்றின் அடிப்படையிலேயே இயற்கைத் தேர்வு (Natural selection), உயிரினங்களின் தகவமைப்பு (Adaptation), பரிணாமவியல் கொள்கை (Evolution theory) ஆகியவற்றை டார்வின் உருவாக்கினார். முன்னணி அறிவியலாளர் கப்பலில் இருந்தபோதே பேராசிரியர் ஹென்ஸ்லோவுக்கு அவர் எழுதிய கடிதங்கள், கேம்பிரிட்ஜ் தத்துவச் சிந்தனையாளர்கள் பேரவையில் விநியோகிக்கப்பட்டன. டார்வினுடைய கட்டுரை, டார்வின் சேகரித்த எலும்புகள் மீது பண்டையவியல் ஆராய்ச்சி யாளர்கள் காட்டிய ஆர்வம் ஆகியவற்றின் காரணமா முன்னணி அறிவியலாளர்கள் மத்தியில் டார்வினுக்கான இடம் உறுதி செய்யப்பட்டது. ஐந்து ஆண்டு பீகிள் கடற்பயணத்தை முடித்துக்கொண்டு டார்வின் நாடு திரும்பினப்ப, தீவிர கள ஆராய்ச்சிக் குறிப்புகளைக் கொண்ட ஒரு விஞ்ஞானியா அவர் மாறியிருந்தார். தன்னுடைய கடற்பயணம் குறித்து அவர் எழுதிய ‘பீகிள் கடற்பயணம்’ என்ற அவருடைய முதல் புத்தகம் உலகப் புகழ்பெற்றது. பரிணாமவியலின் தந்தை இளைஞரா இருந்தாலும் அறிவியலாளர்கள் மத்தியில், தான் மதிக்கப்பட வேண்டும் என்று டார்வின் நினைத்தார். தான் எடுத்துக்கொண்ட காரியத்தில் ஆர்வத்துடன் தீவிரமாக உழைத்து, தன் உடலை வருத்திக்கிட்டு வேலை பார்த்தார். தனது கண்டறிதல், கொள்கைகளை ஆதாரப்பூர்வமா முன்வைச்சார். ‘பரிணாமவியலின் தந்தை’ என்று இன்றைக்கு அவர் போற்றப்படுகிறார். ஆனால், பரிணாமவியல் கொள்கையை முதன்முதலா அவர் சொன்னப்ப, எப்படியெல்லாம் அவருக்கு எதிர்ப்பு வந்துச்சு தெரியுமா? அவர் சொன்னதை விஞ்ஞானிகள் சிலர் ஏத்துக்கிட்டாங்க. ஆனா, பழமையில் ஊறிய பல மத நம்பிக்கையாளர்கள் டார்வினை எதிரியா பார்த்தாங்க. அவரைத் தூற்றினாங்க. அவரைக் குரங்காவே வரைஞ்சு, அவமானப்படுத்த நெனைச்சாங்க.ஆனா, டார்வின் இதைப் பத்தியெல்லாம் கவலைப்படல. தன்னுடைய கொள்கைக்கு ஆதாரம் இருக்குங்கிறபோது, இதையெல்லாம் கண்டு உணர்ச்சிவசப்பட்டுக் கருத்து சொல்லக் கூடாதுன்னு பேசாம விட்டுட்டார். அன்றிலிருந்து இன்றுவரை டார்வினோடப் பரிணாமவியல் கொள்கையைத்தான் உலகம் முழுவதும் உள்ள குழந்தைங்க, ஆராய்ச்சியாளர்கள் படிக்கிறாங்க.அன்றைக்கு எதிர்ப்பைப் பார்த்து அவர் பேசாம ஒதுங்கியிருந்தா, அவருக்குப் பின்னாடி இன்னைக்கு உலகம் கண்டுபிடிச்சிருக்கிற பல அரிய விஷயங்கள் நமக்குக் கிடைக்காமலே போயிருக்கும், இல்லையா? இன்னிக்கு ஒரு செக்னட் கண்ணை மூடி அவருக்கு மனசாலே ஒரு சல்யூட் அடிக்கலாமே!

காந்தியடிகள் அஸ்தி கரைப்பு தினம் (Gandhiji Ash Day)

மகாத்மா காந்தி ஜனவரி 30, 1948 ஆம் ஆண்டில் சுட்டுக் கொல்லப்பட்டார் .அவரது உடல் தகனம் செய்யப்பட்டபின் ,அவரது அஸ்தி பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு கலசங்களில் சேகரித்து நாட்டில் உள்ள புனித நதிகள் , கடல், காடு , மலை போன்றவற்றில் தூவவும் கரைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டன .

அந்த வகையில் மகாத்மா காந்தியின் அஸ்தி இதே பிப்ரவரி 12, 1948 இல் கன்னியாகுமரியில் கரைக்கப்பட்டது . இத்தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது . குறிப்பாக இத்தினத்தில் சர்வோதய சங்கத்தினர் காந்தியின் உருவப்படத்திற்கு மலர் தூவி , சர்வ சமயப் பிரார்த்தனை செய்கின்றனர் . இது தவிர மகாத்மா காந்தியின் நெருங்கிய நண்பர்களுக்கும் , உறவினர்கள் சிலருக்கும் அஸ்தி கலசங்கள் அளிக்கப்பட்டன . இவற்றில் சில இன்னும் கரைக்கப்படாமல் காந்தியின் நினைவாக பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

ஜெர்மனியை சேர்ந்த பிரபல சிந்தனையாளர், தத்துவமேதை இமானுவேல் கன்ட் (Immanuel Kant) மறைந்த தினம் – இன்று.

பிரஷ்யாவின் கோனிக்ஸ்பர்க் (தற்போது ரஷ்யாவில் உள்ளது) நகரில் (1724) பிறந்தார். தந்தை கைவினைக் கலைஞர். தீவிர மதப்பற்று கொண்டிருந்த குடும்பம் அது. லத்தீன் மொழிக் கும் சமயக் கல்விக்குமே அதிக முக்கியத்துவம் கொடுக்கப் பட்டது. ஹீப்ரு மொழியைக் கற்ற பிறகு எம்மானுவேல் என்ற தன் பெயரை இமானுவேல் என்று மாற்றிக்கொண்டார்.பள்ளிக் கல்வியை முடித்த பிறகு 1740-ல் கோனிக்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அங்கிருந்த பகுத்தறிவாளரான ஆசிரியர் மார்ட்டின் நட்சென் என்பவரின் தாக்கம் இவருக்குள் ஆழமாக வேரூன்றியது. அங்கு தத்துவமும் கணிதமும் பயின்றார். தந்தை 1746-ல் இறந்ததால் இவரது கல்வி தடைபட்டது. மாணவர்களுக்கு டியூஷன் எடுத்ததோடு, பல ஆய்வுகளையும் மேற்கொண்டார். ஒரு நண்பர் உதவியுடன் 1755-ல் மீண்டும் படிப்பைத் தொடர்ந்து, 1756-ல் முனைவர் பட்டம் பெற்றார்.அதே பல்கலைக்கழகத்தில் ஆசிரியராக 15 ஆண்டுகள் பணியாற்றினார். பல தத்துவங்களையும் கற்றுத் தேர்ந்தார். ‘உண்மையான சிந்தனாவாதி’ என்று போற்றப்பட்டார். அதன் பிறகு 1770-ல் தொடங்கி 27 ஆண்டுகளுக்கு தர்க்கம் மற்றும் மெய்ஞானவியல் பேராசிரியராக பணியாற்றினார். தனது பகுத்தறிவுக் கொள்கைகளால் மாணவர்களை பெரிதும் கவர்ந்தார். ஆனால், மத நம்பிக்கைகளுக்கு எதிரான கருத்துகளை போதித்ததால் ஆசிரியராகப் பணியாற்றவும், எழுதவும் அவருக்கு தடை விதிக்கப்பட்டது. இவரது முதல் தத்துவ நூலான ‘தாட்ஸ் ஆன் த ட்ரூ எஸ்டிமேஷன் ஆஃப் லிவிங் ஃபோர்ஸஸ்’ 1749-ல் வெளிவந்தது. இதைத் தொடர்ந்து பல நூல்களை வெளியிட்டார். அறிவியல் நூல்களை ஓரளவு எழுதினாலும், தத்துவ விஷயங்களிலேயே அதிக கவனம் செலுத்தினார். அறிவு, அழகியல் குறித்தும் ஆராய்ந்தார். அழகியல் அணுகுமுறைக் கோட்பாட்டின் முன்னோடியாகத் திகழ்ந்தார். ‘ரொமான்டிசிஸத்தின் (மிகையுணர்ச்சிக் கோட்பாடு) தந்தை’ என்று அறியப்படுகிறார். உணர்தல், கற்பனை, அனுபவம், ஏக்கம் ஆகியவை இதன் அடிப்படைகளாகும். சுய அனுபவம் மூலம் அறியப்படும் அறிவு, உண்மையான அறிவு என்பது இவரது கொள்கை. நவீன தத்துவத்தின் முக்கியத் தூணாக இவர் கருதப்படுகிறார். தத்துவவியல், ஒழுக்கவியல், அரசியல் தத்துவம், அழகியல் களங்களில் இவரது சிந்தனைகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. பகுத்தறியும் தன்மை – மனித அனுபவம் ஆகிய இரண்டுக்குமான தொடர்பை விளக்க முற்பட்டார். தத்துவத் துறையில் தொடர்ந்து பல முக்கியமான ஆய்வுகளை மேற்கொண்டார். ஏராளமான புத்தகங்கள், கட்டுரைகளை வெளியிட்டார். பெர்லின் அகாடமி பரிசு உட்பட பல பரிசுகள், விருதுகளைப் பெற்றுள்ளார். பல கல்வி நிறுவனங்களுக்கு இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. இவரது சிந்தனைகள் அடங்கிய ‘கன்ட்டியன் தத்துவம்’ (Kantian philosophy), பல பல்கலைக்கழகங்களில் பாடமாக கற்பிக்கப்படுகிறது. நவீன ஐரோப்பாவின் செல்வாக்கு படைத்த சிந்தனையாளராக விளங்கிய இமானுவேல் கன்ட் 80 வயதில் இதே பிப் 12(1804) மறைந்தார்.

சமூக சேவகர், காந்தியவாதி மற்றும் இந்திய விடுதலைப்போராட்ட வீரர் சங்கரலிங்கம் ஜெகந்நாதன் மறைந்த தினம் -இன்று.

தமிழகத்தில் உள்ள பரமக்குடியிலிருந்து முதுகுளத்தூருக்கு செல்லும் சாலையில் உள்ள செங்கற்பட்டை சிற்றூரில் பிறந்தார்.பள்ளிப்படிப்பை இராமநாதபுரம் ஸ்வார்ட்ஸ் பள்ளியில் முடித்து, கல்லூரிப் படிப்பை மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படித்தார். கல்லூரிப் படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு காந்தியடிகளின் ஆசிரமத்தில் சேரவிரும்பினார். அனுமதி மறுக்கப்படவே, திருப்பத்தூரில் உள்ள ஒரு கிருத்தவ ஆசிரமத்துக்குச் சென்று மக்களுக்குச் சேவை செய்யத் தொடங்கினார். பெங்களூரில் உள்ள சேரிப் பகுதிகளுக்குச் சென்று சேவை செய்தார். இச்சேரியில் 120 மாணவர்களைத் தங்கச் செய்து சேவை செய்யச் செய்தார். இளம் வயதில் சமூக சேவைகளில் முழு ஈடுபாட்டுடன் இருந்த போது 1950 இல் கிருஷ்ணம்மாள் எனும் சமூக ஆர்வலரை திருமணம் செய்துகொண்டார்.மகாத்மா காந்தியின் கொள்கைகளில் தீவிர பற்று கொண்டு, காந்திய வழியில் ஏழை கிராம மக்களுக்கு சேவை செய்வதை தன்னை முழுவதும் ஈடுபடுத்திக்கொண்டார். வினோபா பாவேயின் பூமிதான இயக்கதின் போது நிலங்களை தானமாக பெற்று ஏழைகளுக்கு தானமாக வழங்கினார். ‘வெள்ளயனே வெளியேறு’ இயக்கத்தின்போது தடையை மீறி ஊர்வலம் சென்றதற்காக 15 மாதச் சிறைத்தண்டனை பெற்றார். விடுதலையாகி வெளியே வந்தவுடன் அடுத்த போராட்டத்தில் குதித்தார். 1944இல் ஆங்கிலேய போலீசாரின் கடுமையான கண்காணிப்பையும் மீறி 500 பேருடன் சென்று, மெரினா கடற்கரையில் தேசியக் கொடியை ஏற்றினார். இதற்காகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்தியா விடுதலை அடைந்தபோது, அவர் மகிழ்ச்சியடையவில்லை. நிலமற்ற விவசாயிகள் அனைவருக்கும் நிலம் கிடைக்கும்போதுதான் உண்மையான விடுதலை கிடைத்ததாகப் பொருள் எனக் கருதினார். எனவே நிலப்பிரச்சனைகளில் கவனம் செலுத்தத் தொடங்கினார். மதுரை அலங்காநல்லூர் அருகேயுள்ள கள்ளஞ்சேரி என்ற இடத்தில் விவசாயம் செய்துவந்தவர்களைப் பணக்காரர்கள் சிலர் விரட்டியடித்தனர். இதையறிந்த ஜெகந்நாதன், அங்குச் சென்று போராடி நிலத்தை இழந்தவர்களுக்கு அதை மீட்டுக் கொடுத்தார். இதுவே அவரது முதல் நில மீட்பு போராட்டம். 1952ஆம் ஆண்டு காந்தி பிறந்த நாளன்று, பூதான இயக்கத்தைத் தொடங்கினார். அறப்போராட்டங்களின் மூலம் நிலங்களைத் தானம் பெற்று அவற்றை ஏழை விவசாய மகளிருக்கு அளிதாதார். அவ்வகையில் கீழத் தஞ்சைப் பகுதியில் 10 ஆயிரம் ஏக்கர் நிலத்தைத் தானமாகப் பெற்று 10 ஆயிரம் ஏழை பெண்களுக்கு அளித்தார். நாகப்பட்டினம் கடற்கரைப் பகுதியில் உருவெடுத்த இறால் பண்ணைகளை எதிர்த்து அறப்போராட்டங்களை நடத்தி ஓரளவிற்கு வெற்றிபெற்றார். கீழவெண்மணி கிராமத்தில் நடந்த கீழ்வெண்மணிப் படுகொலைகள் துயர நிகழ்ச்சிக்குப்பின் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடியிருப்பு கிடைக்க உண்ணாநிலைப் போராட்டம் நடத்தி வெற்றி கண்டார். திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராமத்தில் உள்ள சேவாஸ்ரமத்தில் தங்கி இருந்த இவர் இதே பிப்ரவரி 12 2013 அன்று காலமானார்.

இந்தியாவுக்கான தனது இரண்டாவது கடற்பயணத்தை வாஸ்கோடகாமா, லிஸ்பனில் இருந்து ஆரம்பித்த தினம் இன்று(1502).

1947 – இரண்டாம் உலகப்போர்க் காலத்தில், பாரிஸ் இழந்திருந்த, ஃபேஷன் உலகின் தலைநகரம் என்ற பெருமையை மீட்டெடுக்க உதவிய, ஆடையலங்கார அணிவகுப்பை(ஃபேஷன் ஷோ), கிறிஸ்டியன் டியோர் நிறுவனம் நடத்திய நாள் உண்மையில் கரோல், விட்(ஹூய்ட்) என்ற பெயர்களில் இந்நிறுவனம் அறிமுகப்படுத்திய பெண்களின் ‘பார் சூட்’ உடைகளை, ‘என்ன ஒரு புதிய தோற்றம்(நியூ லுக்)!’ என்று ஓர் இதழாசிரியர் குறிப்பிட்டதையடுத்து, இந்த அணிவகுப்பே ‘நியூ லுக்’ என்றுதான் குறிப்பிடப்படுகிறது. மேற்கத்திய நாடுகள் முழுவதும் பெரும்புகழ்பெற்ற இந்த ஆடைகள், 1946இல்தான் தொடங்கப்பட்டிருந்த டியோர் நிறுவனத்திற்கும் மிகப்பெரிய வளர்ச்சியை ஈட்டித்தந்தன. 1800களின் தொடக்கத்திலேயே, ஆடையலங்கார அணிவகுப்புகள் பாரிசில் நடத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் இருந்தாலும், ஃபேஷன் ஷோ என்பது உண்மையில், அதற்கும் முன்னரே தொடங்கியிருக்கும் என்று நம்பப்படுகிறது. ஃபேஷன் ஷோ பற்றிய வரலாறு தெளிவாக இல்லாவிட்டாலும், ஐரோப்பிய மறுமலர்ச்சிக் காலமான 15,16ஆம் நூற்றாண்டுகளில், ஒவ்வொரு காலகட்டத்திலும் புதிய ஆடை வடிவங்களை உருவாக்கி, ஃபேஷன் தலைநகரமாக ரோம், வெனிஸ், ஜெனோவா, நேப்பிள்ஸ், மிலன், ஃப்ளாரன்ஸ் போன்ற நகரங்கள் இருந்துள்ளன. பதினான்காம் லூயி காலத்தில் இவ்விடத்தை பாரிஸ் பெற்றாலும், அந்தந்தக் காலத்தில் ஆதிக்கம் செலுத்திய நாடுகளின் நகரங்களான லண்டன், பெர்லின் உள்ளிட்டவையும் இப்பெருமையைப் பெற்றன. 1900களின் தொடக்கத்தில், நியூயார்க்குக்கு ஃபேஷன் ஷோ அறிமுகமாக, இரண்டாம் உலகப்போர்க்காலத்தில், ஃபேஷன் தலைநகரமாக அது மாறியது. தற்காலத்தில் பாரிஸ், லண்டன், நியூயார்க், மிலன், டோக்யோ ஆகிய 5 நகரங்கள் ஃபேஷன் உலகில் கோலோச்சுகின்றன. உருவாக்குவது என்ற பொருளுடைய ஃபேசியர் என்ற லத்தீன் சொல்லிலிருந்து ஃபேஷன் என்ற சொல் உருவானது. கேட்வாக் என்பது உண்மையில், ஆடையலங்கார அணிவகுப்பு நடைபெறும் சிறிய பாதையைக் குறிக்கிறது. குறுகலான அப்பாதையில் விழுந்துவிடாமலும், எதிரில் வருபவர்மீது மோதிவிடாமலும் கவனமாக நடப்பது, பூனை (இயல்பாக!)நடப்பதைப் போலிருப்பதால் அப்பெயர் சூட்டப்பட்டது. ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படும் பாரிஸ், நியூயார்க் ஃபேஷன் வாரங்களுடன், லண்டன் உள்ளிட்ட நகரங்களும் இவற்றை நடத்துகின்றன. ஃபேஷன் என்பது ஆடம்பரமாக இருந்த நிலையிலிருந்து, அனைவருக்குமானதாக மாற்றப்பட்டுவிட்ட தற்போதைய நிலையில், உலக ஃபேஷன் சந்தையின் ஆண்டு வணிகம் சுமார் ரூ.2.87 கோடி கோடியாம்!

ஆபிரகாம் லிங்கன் பர்த் டே டுடே

ஒரு மனிதர் தன்னுடைய 21 வயதில் வியாபாரத்தில் படுதோல்வி அடைந்தார். தனது 22வது வயதில் மக்களவைத் தேர்தலில் தோல்வியைத் தழுவினர். தனது 24 வது வயதில் வியாபாரத்தில் மீண்டும் தோல்வி அடைந்தார். தனது 26 வது வயதில் இளம் மனைவியை இழந்து துன்பத்தில் மூழ்கினார். தனது 27 வயதில் நரம்புத் தளர்ச்சியால் பெரிதும் பாதிக்கப்பட்டார். தனது 34வது வயதில் கட்சிப்பதவிக்கான தேர்தலில் தோல்வியடைந்தார். தனது 45வது வயதில் செனட்டர் பதவிக்கான தேர்தலில் தோற்றார். தனது 47 வது வயதில் உதவி ஜனாதிபதிக்கான தேர்தலில் தோற்றார். மீண்டும் தனது 49வது வயதில் செனட்டர் பதவிக்கான தேர்தலில் தோல்வி. இவ்வாறாக தொடர்ச்சியான தோல்விகளைச் சந்தித்த பிறகு தனது 52வது வயதில் அமெரிக்காவின் ஜனாதிபதியாக வெற்றி பெறுகின்றார். அவர்தான் ஆபிரகாம் லிங்கன், ஆம்! எந்தத் தோல்வியும் அவருடைய முயற்சிகளை முடக்கிவிடவில்லை. முயற்சிகள் தொடர்ந்தால் தோல்விகள் எப்பொழுதும் நிலையானது அல்ல என்பதைத்தான் அவருடைய வாழ்க்கை நமக்குக் கற்றுத்தரும் பாடம். எக்ஸ்ட்ரா ஒரு இண்டரஸ்டிங் ரிப்போர்ட்: ஆப்ரகாம்லிங்கன் தனது 15-ஆம் வயதில் கல்வி கற்க துவங்கினார். அவர் வாழ்ந்த காலத்தின் தொடக்கத்தில் அமெரிக்காவில் காகிதம் பயன்பாட்டிற்கு வராத காலம். இதனை சற்றும் பொருட்படுத்தாத அவர், ஒரு மரப்பெட்டியின் மீது கரித்துண்டால் எழுதி எழுதி பழகினார். மேலும் அவர் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்ததால் குடும்பச்சூழல் காரணமாக புத்தகங்களை அவரால் விலை கொடுத்து வாங்கி படிக்க முடியவில்லை. அதனால் தனக்கு தெரிந்த நபர்களிடம் புத்தகங்களை இரவல் வாங்கி படித்தார். அப்படி ஒரு சமயம் இரவலாக வாங்கி வந்த புத்தகம் மழையில் நனைந்து கிழிந்து விட்டது. அந்நூலின் சொந்தக்காரருக்கு புதிய நூலை வாங்கித் தர அவரால் முடியவில்லை. அதற்கு பதிலாக அப்புத்தகத்தின் உரிமையாளரின் நிலத்தில் மூன்று நாட்கள் விவசாய வேலை செய்து அதை ஈடுகட்டினார். வாழ்வில் முன்னேறத் துடிப்பவர்களுக்கு சோதனை வருவது சாதனைக்காகத்தான் என்ற கருத்து ஆப்ரகாம் லிங்கன் வாழ்க்கை வரலாறு நமக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகும்.

தயானந்த சரசுவதி பிறந்த நாள்

தயானந்த சரசுவதி சுவாமிகள் (12 பெப்ரவரி 1824 – 30 அக்டோபர் 1883) தத்துவவாதியாகவும், இந்து சமயத்தின் தீவிரச் சிந்தனையாளராகவும் இருந்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியவர். 19 ஆம் நூற்றாண்டில் தோன்றிய சமய சீர்திருத்த இயக்கங்களில் முக்கியமான ஆரிய சமாஜ இயக்கத்தினை நிறுவியவர்.இவர் காலத்தில் நிகழ்ந்து வந்த சிறுவயதுத் திருமண முறைகளுக்கு (குழந்தை திருமணம்) கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். அதே சமயம் விதவைகள் மறுமணம் செய்து கொள்வதை ஆதரித்துப் பேசியும் எழுதியும் வந்தார். ஆங்கிலவழிக் கல்வியை நாடு முழுவதும் பரப்பப் பாடுபட்ட இவர் எழுதிய “சத்யார்த் பிரகாஷ் அண்ட் பிரதிமா பூஜன் விச்சார்” எனும் புத்தகம் மிகவும் புகழ் பெற்றது. இவர் சமையல்காரர் விசம் கலந்த பாலைப் பருகக் கொடுத்ததை அறிந்து அவனை மன்னித்து அவன் சொந்த ஊருக்குச் செல்ல பயணப்பணமும் அளித்து உதவினார். இவரது 59 வது வயதில் 30-10-1883 அன்று மரணமடைந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *