மனிதர்களின் கலவையான உணர்வு

எனக்கு ‘காதலுக்கு மரியாதை ‘படம் பிடிக்காது. விஜய் மற்றும் ஷாலினியின் தோற்றம்& இளையராஜாவின் இசை இவை மட்டுமே பிடிக்கும். இயல்பான நடிப்பில் கலக்கிக் கொண்டிருந்த மணிவண்ணனை அவ்வளவு செயற்கையாக நடிக்க வைத்ததற்காக ஃபாசிலுக்கு ஒரு முட்டை ஓதி வைக்கலாமா ? என்று கூட யோசித்திருக்கிறேன். கனவில் இளையராஜா வந்து தடுத்து விட்டார்;ஆனால் அந்தப் படத்தின் இறுதிக் காட்சியை இன்றோடு 25 வது தடவையாகப் பார்த்து விட்டேன். இன்னும் சலிக்கவில்லை;அதிகாலை வானத்திலிருந்து நம் ஜன்னல் நோக்கிப் பறந்து வரும் ஒற்றைப் பறவையைப் போல அது இன்னும் அதே அழகோடு அப்படியே இருக்கிறது.

பலருக்கும் அந்த இறுதிக்காட்சி பிடித்ததாக அறிந்திருக்கிறேன். ஏன் என்று யோசித்துப் பார்த்தேன்.

1.வன்முறையோடு மோதிக் கொண்டவர்கள் சூழலுக்குக் கட்டுப்பட்டு அசடு வழிய உட்கார்ந்திருப்பது நம்மை ஈர்க்கிறது.விஜய் ஷாலினியைப் பார்க்கிறானா? என்று கவனித்துக் கொண்டே போலியான அமைதியோடு அமர்ந்திருக்கும் அண்ணன்மார்களும்,ஒரு புத்தனைப் போல் பவ்யத்தோடு அமர்ந்திருக்கும் விஜய்யும் நமக்குச் சிரிப்பூட்டுகிறார்கள்.விதிகள் மாறிப் போன காய்களை சதுரங்கத்தில் பார்க்கிற சந்தோஷம் அது.

2.லௌகீகத்தின் விதிகளைக் கொண்டு அவ்வளவு பொறுப்போடு நாம் கட்டி முடிக்கிற மணல் வீடுகளை குழந்தைகள் தங்கள் எளிய விரல்களால் சர்வசாதாரணமாகச் சிதறடித்து விடுகிறார்கள்.

(நீங்கதான் எங்க ஆண்டிய கட்டிக்கப் போற மாப்ளயா?)

3.இரண்டு பேரும் தன்னைத் தானே ஏமாற்றிக் கொண்டு மற்றவர்களையும் நம்ப வைக்கிறார்கள்.ஆதித் தீ அதே வேகத்தோடு உள்ளுக்குள் எரிந்து கொண்டிருக்கிறது;இன்னும் அதிகமான உக்கிரத்தோடு.அது தழல்கள் ஒன்றையொன்று சந்தித்துக் கொள்ளும் நிமிடம் .இன்னும் சில நொடிகளோ,எதிர்பாராத காற்றோ போதும்;இரண்டாயிருக்கும் அந்தத் தீ ஒன்றாகி விடலாம். ஷாலினி பழச்சாறு எடுத்து வந்து மற்றவர்களுக்கு இயல்பாகக் கொடுப்பார். கடைசியாக விஜய்; அந்த இடத்தில் சற்றுத் தயங்குவார்; அந்தத் தயக்கம்தான் காதல்.மற்றவர்கள் சூழ்ந்திருக்கும் போது யார் முன்னால் நம்மால் இயல்பாக இருக்க முடியவில்லையோ அவர்களைக் அப்படி காதலிக்கிறோம் என்று அர்த்தம். காதலின் நெருப்பு அந்தக் காட்சியில் உக்கிரமாக ஆனால் அவ்வளவு அமைதியாக எரிந்து கொண்டிருக்கும்.

4.அந்தக் காட்சியின் நிஜமான நாயகிகள் அம்மாமார்கள்தான்.அதுவும் ஸ்ரீவித்யா…அடேயப்பா!கண்களால் ஒரு நாவலே எழுதியிருப்பார்.ஷாலினியை அவர் பார்க்கிற பார்வை. அந்தப் படம் முழுவதிலும் விஜய் கூட ஷாலினியை அப்படிப் பார்த்ததில்லை.அழகான நுட்பம் அந்தக் காட்சியில் உண்டு. இருவருமே தங்கள் அம்மாக்களின் மீது அளவு கடந்த பிரேமை கொண்டவர்கள். காதலையே உதறிவிட்டு பிள்ளைகள் தம்மை நோக்கி வந்ததில் நெகிழ்ந்திருப்பவர்கள் அந்த அம்மாக்கள்.ஆனால் விஜய் மற்றும் ஷாலினியைப் பார்த்ததும் இருவரும் அதிர்ச்சியடைந்து விடுவார்கள். ஏனென்றால் அவர்கள் மனத்தில் இதுவரை இருந்தது மற்றவர்கள் ஏற்படுத்தி வைத்திருந்த பிம்பம்; ஆனால் நிஜம் வேறு. அது அவர்களின் அகத்தை அறைவதை தாங்க முடியாமல் இருவரும் அமர்ந்திருப்பார்கள். அவர்கள் இருவருக்கும் உள்ளூரத் தெரியும். தன் மீதான பேரன்பின் நிழல்தான் ஷாலினியாகவும்,விஜயாகவும் அங்கே நின்றிருக்கிற விஷயம். தங்கள் பிள்ளைகள் காதலித்தது அடுத்தவரை அல்ல;தங்களின் பிம்பங்களை என்கிற இரகசியம்.(குறிப்பாக ஸ்ரீவித்யாவிற்கு)அவளை நிராகரிப்பது தன்னையே தன் மகனை நிராகரிக்கச் சொல்வதற்குச் சமம் என்று உணர்கிற இடத்தில்தான் ஸ்ரீவித்யா கண்கலங்கி நெகிழ்ந்து தியேட்டரையே கை தட்ட வைத்த அந்த வசனத்தைப் பேசுவார்.

5.விஜய் வீட்டார் உள்ளிருக்கும் அந்த நிமிடங்களில் ஷாலினியின் தவிப்பு ரொம்ப அற்புதமானது. குடும்பங்களால் தேவதைகளாக்கப்பட்டு தன் சுயத்தை தொலைத்த பிறகு அழவும் கூட முடியாத கடந்த தலைமுறையின் பதின் பருவ யுவதிகளின் தவிப்பு அது. அப்போதைக்கு அவள் வேண்டுவது அமிர்தம் அல்ல;சாகும் வரை நீடிக்கப் போகும் காயத்திற்கான தற்காலிக மருந்து.அவன் அம்மா அவளை அங்கீகரிப்பது அவளைப் பொறுத்தவரை அவனது ஆயிரம் தழுவல்களுக்குச் சமம்.அந்த மருந்தும் கிடைக்காமல் போனதால் உருவான மற்றொரு காயத்தை ஷாலினி தன் கண்களில் காட்டியிருப்பார்.பெற்ற தாயைக் கையெடுத்துக் கும்பிடும் அந்தக் காட்சி எப்போதும் என்னைச் சிலிர்க்க வைக்கும். அது சொல்லில் அடங்காத பேருணர்வு.

6.எல்லாவற்றுக்கும் மேல் ஒன்று உண்டு.. இளையராஜா. அவரைப் பாராட்டி, பாராட்டி அலுத்து விட்டது. நெருப்பு என்றால் சுடும்; பனிக்கட்டி குளிரும். இதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. இளையராஜாவும் அப்படித்தான். அவர் என்ன செய்தாலும் நமக்கு உயிர் உருகும்; ஆம்;அவரது இசை உலக உண்மையாகி ரொம்ப நாளாகி விட்டது. இப்படிச் சொல்லலாம்.அங்கிருக்கும் அனைவரின் உணர்வுகளையும் உள்வாங்கிக் கொண்ட ஒருவன் யாரோடும் சம்பந்தப்படாமல் விலகி நின்று இசையமைப்பது போல… இப்படியும் சொல்லலாம்….மனிதர்களின் கலவையான உணர்வுகளுக்கு கடவுளே கண்ணீரோடு இசையமைப்பதைப் போல….

25 வது தடவையாகவும் என்னை அழ வைத்து விட்ட அத்தனை பேரும் நன்றாயிருங்கள்.

Maanaseegan  (மானசீகன் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *