விபத்தில் சிக்கிய அஜீத்..!
துபாயில் கார் ரேஸிங்கிற்கான பயிற்சியின் போது நடிகர் அஜித் குமாரின் கார் தடுப்பில் மோதி விபத்தில் சிக்கியது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித்குமார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியாகிய ‘துணிவு’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் கைவசம் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய இரண்டு திரைப்படங்கள் உள்ளன. இதில் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக த்ரிஷா நடித்து வருகிறார்.
அதேபோல் குட் பேட் அக்லி படத்தின் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. நடிகர் அஜித் கார் பைக் ரேஸ் ஓட்டுவதில் அதிகம் ஆர்வம் காட்டுபவர் என்பது நம் அனைவருக்கும் தெரியும். நேரம் கிடைக்கும் போதெல்லாம் நடிகர் அஜித்குமார் பைக் அல்லது கார் ரைடு சென்று விடுவார். சமீபத்தில் ‘அஜித்குமார் ரேஸிங்’ என்ற பெயரில் புதிய கார் ரேஸ் அணியை உருவாக்கி அஜித், தற்போது அதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
அதன்படி கார் ரேஸிங்கில் கலந்துகொள்வதற்காக அஜித்குமார் நேற்று துபாய் சென்றார். இந்த கார் ரேஸ் வருகிற 11 மற்றும் 12-ம் தேதிகளில் நடைபெற உள்ளது. 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் கார் ரேஸிங்கில் அஜித் களமிறங்க உள்ளது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், கார் ரேஸிங்கிற்கான பயிற்சியின் போது, அவர் ஓட்டிக் கொண்டிருந்த கார் ஓரமாக வைக்கப்பட்டிருந்த தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரின் முன்பக்கம் பலத்த சேதமடைந்தது. விபத்தில் நடிகர் அஜித் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார்.