இன்றைய முக்கிய நிகழ்வுகள் (26.12.2024)

 இன்றைய முக்கிய நிகழ்வுகள் (26.12.2024)

சுனாமி ஆழிப் பேரலை தாக்கிய தினம்!

2004 டிசம்பர் 26 உலகமே உரைந்து போன நாள். இந்தோனேசியா சுமத்ரா தீவு அருகே ஆழ்கடலில் ஏற்பட்ட நில அதிர்வு காரணமாக எழுந்த பேரலைகள் தாய்லாந்து, இந்தோனேசியா, மலேசியா, இந்தியா இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் பேரழிவை ஏற்படுத்தின. சுனாமி என அழைக்கப்படும் ஆழி பேரலை தாக்குதலில் 2,26,000 பேர் உயிரிழந்தனர். 20,00,00 குடும்பங்கள் வீடுகளை இழந்தன. 20 ஆண்டு கடந்த நிலையில் சுனாமியின் சீற்றம் ஏற்படுத்திய சோக வடுக்களை உலகமே திரும்பிப் பார்க்கும் நினைவு தினம் இன்று. தாய்லாந்தில் 7,000 பேர், இந்தோனேசியாவில் 1,60,000 பேர், இலங்கையில் 35,000 பேர், அந்தமானில் 10,000 பேர், தமிழ்நாட்டில் 8,000 பேர் என தெற்காசியாவையே உலுக்கி எடுத்தது அந்த ஆழிப்பேரலை. அன்று ஒலித்த அழுகுரல்களை 20 ஆண்டுகள் அல்ல எத்தனை ஆண்டுகள் ஆனாலும் யாரால்தான் மறக்க முடியும்?

இதே – டிசம்பர் 26 .1925 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி துவக்கப்பட்ட நாள் இன்று

இந்தியப் பொதுவுடமைக் கட்சி அல்லது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (Communist Party of India) ஓர் இந்திய அரசியல் கட்சியாகும். இக்கட்சி எப்பொழுது தொடங்கப்பட்டது என்பது குறித்து இந்தியக் கம்யூனிச இயக்கத்தில் இரு வேறு கருத்துகள் உள்ளன. டிசம்பர்26, 1925-ஐ தன் நிறுவன நாளாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி குறிப்பிடுகிறது. எனினும், இக்கட்சியிலிருந்து பிரிந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), இக்கட்சி 1920 அக்டோபர் 17 அன்று தாஷ்கண்ட் நகரில் முதல் கம்யூனிஸ்ட் கிளை நிறுவப்பட்டதாக சொல்கிறது. உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் என்று உழைக்கும் மக்களுக்காக களத்தில் நிற்கிற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சுதந்திர இந்தியாவின் நாடாளுமன்றத்தில் முதல் மூன்று மக்களவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முதன்மை எதிர்க்கட்சி என்ற அளவுக்கு உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் கொண்டிருந்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் பெரும்பாலும் உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த எளிய மக்களே அதன் தொண்டர்கள்.. அதனுடைய கம்யூனிஸ சித்தாந்தத்தின் அடிப்படையில், இன்றும்கூட பல பிரச்னைகளில் அடித்தட்டு மக்களுக்காக களத்தில் நிற்பது கம்யூனிஸ்ட் கட்சிதான் என்று சொல்லிக் கொள்வர்.

இந்தியத் தொழிற்சங்க இயக்க முன்னோடிகளில் ஒருவரான கே. டி. கே. தங்கமணி நினைவு நாள்

இவர் பிளவுபடாத இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியின் தமிழகத் தலைவராக இருந்தார். லண்டனில் பார் அட் லா படித்து, படித்து பட்டம் பெற்றவர் இந்திரா காந்தி இவருடைய கல்லூரி தோழர் தொழிலாளர்களுக்கு ஆதரவாக 1947 மற்றும் 1948 ஆண்டுகள் (மதுரை டி.வி.எஸ் நிறுவனம் மற்றும் ஹார்வே மில்) போராடிச் சிறை சென்றுள்ளார். மேலும்1957ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் மதுரை தொகுதியில் வெற்றியும் பெற்றார். தனது போராட்டங்கள் மற்றும் தலைமைப் பண்புகளின் மூலம், அகில இந்திய பொதுவுடைமைக் கட்சியின் தமிழகத் தலைவராகவும் பதவி வகித்தார். கோடீஸ்வரரின் மகனாக பிறந்தார் சிங்கப்பூரில் நான்கு கோடீஸ்வரர்களில் ஒருவர் வீட்டில் கே.டி.கே. திருமணம் முடித்தார். என்றாலும் கட்சி அலுவலகத்திலேயே இறுதி காலம் வரை வாழ்ந்து ஏழைகளுக்காக உழைத்து தன் 88ஆவது வயதில் 2001 இதே டிசம்பர் 26 அன்று மரணமடைந்தார். இவரது நினைவாக, மதுரை அண்ணாநகா் மற்றும் அச்சம்பத்திலுள்ள ஒரு தெருவிற்கும் மற்றும் திருமங்கலத்திலுள்ள ஒரு தெருவுக்கும் இவரது பெயர் சூட்டப்பட்டது. இவர் கோவையில் வாழ்ந்த வீடு, நினைவு இல்லமாக மாற்றப்பட்டது.

“டயேன் ஃபாசி” நினைவஞ்சலி

கொரில்லாவுக்காக வாழ்க்கையை அர்ப்பணித்த “டயேன் ஃபாசி” நினைவஞ்சலி கலிபோர்னியாவில் சான்பிரான்சிஸ்கோ என்னும் இடத்தில் 1932ம் ஆண்டு ஜனவரி மாதம் 16ம் தேதி பிறந்த இவருக்கு 6 வயதாக இருக்கும் போது பேரண்ட்ஸ் பிரிஞ்சிட்டாங்க, அத்தோட இவரோட தாய் ரிச்சர்டு என்பவரை மறுமணம் செய்து கொண்டார். அந்த புது நயினா டயேனே-வைக் கண்டாலே வெறுத்து ஒதுக்கினார், அத்துடன் அவருடைய கட்டுப்பாடுகளால் மனம் நொந்து போன டயேன் விலங்குகள் மீது அன்பு செலுத்த தொடங்கினார். இவரது பாசத்தை பெற்ற முதல் உயிரினம் மீன் தான். இதன் பின் விலங்குகள் என்றாலே அளவு கடந்த பாசத்தை கொட்டினார். படிப்பில் வெறித்தனமா ஆர்வம் கொண்ட இவர் தொடந்து 1954ம் ஆண்டில் கேம்பிரிட்ஜ் பல்கழைகழகத்தில் இளநிலை பட்டமும், பின்னர் 1974ம் ஆண்டு உயிரின அறிவியலில்(Zoology) முனைவர்(Ph.D.) பட்டமும் பெற்றார். அப்போ அழிந்து வரும் விலங்கினமான கொரில்லாவை பற்றி ஆராய்ச்சி செய்வதில் ஈடுபாடு கொண்டவர், ஆராய்ச்சிக்கு தேவையான பணத்தை சேகரித்து 1963ம் ஆண்டு ஆப்ரிக்காவுக்கு சென்றார்.அங்கு முனைவர் லீக்கி அவர்களையும் சந்தித்தார், காட்டு விலங்காகிய கொரில்லாக்களிடம் எப்படியோ போதிய நம்பிக்கையைப் பெற்று அவைகளோடு நெருங்கி பழகினார்.ருவாண்டாவில் உள்ள ருஃகெங்கேரி என்னும் மாநிலத்தில், விருங்கா மலைப்பகுதிகளில் கரிசோக் ஆய்வு நிறுவனத்தை தொடங்கினார். கிட்டத்தட்ட 18 வருடங்களாக கொரில்லாகளோடு இணைந்து வாழ்ந்து வந்தவர், மிக நுணுக்கமாக ஆராய்ச்சி செய்து குறிப்புகள் எடுத்துக் கொண்டார். பின்னர் 1983ம் ஆண்டு GORILLAS IN THE MINT என்ற புத்தகத்தை வெளியிட்டார். இதற்கிடையே இதே டிசம்பர் 26, 1985ம் ஆண்டில் மர்மமான முறையில் கொடூரமாக கொல்லப்பட்டார். இவருடைய ஆய்வுகளால் தம்முடைய தொழில் கெடுவதாக நினைத்த சில கொள்ளைக்காரர்களோ, மற்றவர்களோ இக்கொலையை செய்ததாக கருதப்படுகிறது. பின்னர் உலக மக்கள் மத்தியில் மிக பிரபலமடைந்த டயேனின் நாவல், அதே பெயரில் ஹாலிவுட் படமாக 1988ம் ஆண்டு வெளிவந்தது. இப்படத்தில் நடித்த பிரபல ஹாலிவுட் நடிகை SIGOURNEY WEAVER ஆஸ்கர் விருதை தட்டிச் சென்றார் என்பது நோட்டபிள் திங்கிங்.

மா சே துங் பிறந்த நாள் இன்று

சீன மார்க்சியக் கொள்கையாளர், போர் வீரர், கவிஞர், சிறந்த ராஜதந்திரி மா சே துங் பிறந்த நாள் இன்று (டிசம்பர் 26, 1893). இவருக்கு 18 வயது இருக்கும்போது, சீனா குடியரசாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அங்கு நிலையான, ஒற்றுமையான அரசு அப்போது ஏற்படவில்லை. இந்நிலையில் இடதுசாரி அரசியல் கொள்கைகள் இவரைக் கவர்ந்தன. 1920-ல் கொள்கைப் பற்றுமிக்க பொதுவுடைமையாளர் ஆனார். விரைவில் பொதுவுடைமைக் கட்சியின் உயர் அதிகாரக் குழு உறுப்பினர் ஆனார். ஆட்சியைப் பிடிப்பதில் சீனப் பொதுவுடைமைக் கட்சி படிப்படியாக முன்னேறியது. அந்த காலகட்டத்தில் ஆட்சியை எதிர்த்து தனது ஆதரவாளர்களுடன் நீண்ட நடைபயணம் மேற்கொண்ட இவர், 8 ஆயிரம் மைல் தூரத்தைக் கடந்தார். 1935-ல் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். அதன் பிறகு பொதுவுடைமைக் கட்சி மிகுந்த வளர்ச்சி பெற்றது. அரசை எதிர்த்து நீண்ட நெடிய போர் புரிந்தார். கட்சி வெற்றி பெற்றது. 1949-ல் சீனா குடியரசு நாடானது. மக்கள் சீனக் குடியரசின் முதல் அதிபராக மா சே துங் பதவி ஏற்றார். இதை அடுத்தே சீன குடியரசு நாடு நவீனமயமானது. பல நூற்றாண்டு கால அந்நிய ஆக்கிரமிப்புக்குப் பிறகு, 20-ம் நூற்றாண்டில் சீனா மகத்தான வளர்ச்சி கண்டது. சீனாவில் பெரும் தொழிற்புரட்சியும், வேளாண் புரட்சியும் நிகழ்த்திய மா சே துங் ஒரு புரட்சிகரத் தலைவர் மட்டுமின்றி, தற்போதைய சீன வல்லரசின் சிற்பியாகவும் போற்றப்படுகிறார். இவரது கொள்கைகள் மாசோயிசம் என்று புகழ்பெற்றன. 83-வது வயதில் காலமானார். உலக கம்யுனிச வரலாற்றில் மார்க்ஸ்-எங்க்லஸ் -லெனின் இவர்களுடன் மா சே துங் பெயரும் உள்ளது.

அன்னை மீனாம்பாள் பிறந்ததினம் இன்று

ஈ.வெ.ரா-வுக்கு `பெரியார்’ பட்டம் வழங்கிய பெண் போராளி அன்னை மீனாம்பாள் பிறந்ததினம் இன்று! சென்னை மாநகராட்சியின் முதல் பட்டியலினப் பெண் துணை மேயராகப் பொறுப்பு வகித்தவர் மீனாம்பாள், சென்னை மாகாண கௌரவ நீதிபதி (16 ஆண்டுகள்), திரைப்பட தணிக்கை குழு உறுப்பினர் (6 ஆண்டுகள்) சென்னை பல்கலைக்கழக செனட் உறுப்பினர் (13 ஆண்டுகள்), சென்னை அரசு மருத்துவமனைகளின் ஆலோசனைக் குழு உறுப்பினர், லேடி வெலிங்டன் கல்லூரி தேர்வுக்குழு தலைவர் என எண்ணற்ற பதவிகளை வகித்துவந்தார். சுயமரியாதை இயக்கத் தலைவர் ஈ.வெ.ராமசாமிக்கு, 1938 -ம் ஆண்டு நவம்பர் 13-ம் தேதி, பெண்கள் மாநாட்டில் ’பெரியார்’ என்ற பட்டத்தை அளித்தவர்தான் அன்னை மீனாம்பாள். மேலும் மீனாம்பாள் பொறுப்புகளும் பணிகளும் சென்னை மாகாண ஆலோசணைக் குழு உறுப்பினர் (9 ஆண்டுகள்) தொழிலாளர் ட்ரிப்யூனல் உறுப்பினர் சென்னை நகர ரேஷன் ஆலோசனைக் குழு உறுப்பினர் சென்னை பல்கலைக் கழக செனட் உறுப்பினர் (13 ஆண்டுகள்) போருக்குப்பின் புனரமைப்புக்குழு உறுப்பினர் S.P.C.A உறுப்பினர் நெல்லிக்குப்பம் பாரி கம்பெனி தொழிலாளர் தலைவர் தாழ்த்தப்பட்டோர் கூட்டுறவு வங்கி இயக்குனர் அண்ணாமலை பல்கலைக்கழக செனட் உறுப்பினர் (6 ஆண்டுகள்) சென்னை கூட்டுறவு வீட்டு வசதி சங்க இயக்குனர் விடுதலை அடைந்த கைதிகள் நலச்சங்க உறுப்பினர் காந்தி நகர் மகளிர் சங்கத் தலைவர் மகளிர் தொழிற் கூட்டுறவு குழுத்தலைவர் (6 ஆண்டுகள்) சென்னை அரசு மருத்துவ மனைகளின் ஆலோசனைக் குழு உறுப்பினர் அடையார் மதுரை மீனாட்சி மகளிர் விடுதி நடத்துனர் லேடி வெலிங்டன் கல்லூரி தேர்வுக்குழு தலைவர்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...