திருவெம்பாவை 3
திருவெம்பாவை 3
முத்தன்ன வெண்ணகையாய் முன்வந்து எதிரெழுந்தென்
அத்தன் ஆனந்தன் அமுதன் என்று அள்ளூறித்
தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய்
பத்துடையீர் ஈசன் பழவடியீர் பாங்குடையீர்
புத்தடியோம் புன்மை தீர்த்து ஆட்கொண்டால் பொல்லாதோ
எத்தோ நின் அன்புடைமை எல்லோம் அறியோமோ
சித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை
இத்தனையும் வேண்டும் எமக்கு ஏல் ஓர் எம்பாவாய்
பொருள்
முத்து போன்ற வெண்பற்களை உடையவளே, நேற்று நீ என்ன பேசினாய் என்பது உனக்கு நினைவில் உள்ளாதா? நாங்கள் உன்னை எழுப்ப வருவதற்கு முன்னமே, தான் எழுந்திருந்து எங்களை எதிர்கொள்வேன் என்றும், சிவபெருமான் எனது தந்தை, எனக்கு இன்பம் அளிப்பவன், எனக்கு அமுதமாக இனிப்பவன் என்றெல்லாம் உனது வாயினில் எச்சில் ஊறுமாறு பேசினாயே, ஆனால் இன்று அத்தனையும் மறந்துவிட்டு உறங்கிக்கொண்டு இருக்கின்றாயே, சீக்கிரம் எழுந்து வந்து உனது வாயிற்கதவை திறப்பாயாக. இதனைக் கேட்டுக்கொண்டிருந்தவளுக்கு கோபம் வர, அவள் பின்வருமாறு கூறுகின்றாள். ஈசன் பால் மிகுந்த பற்று உடையவர்களே, பழ அடியார்களே, மேன்மை கொண்டவர்களே. என்னைப் போன்ற புது அடியார்கள், குற்றம் ஏதும் செய்தாலும், அதனை பொறுத்துக்கொண்டு என்னையும் ஏற்றுக்கொண்டால் உங்களுக்கு இழுக்கு ஏதேனும் நேர்ந்துவிடுமோ. இவ்வாறு உள்ளே இருந்த படியே தங்களது தோழி பேசியதைக் கேட்ட வெளியில் இருந்த பெண்கள், தங்களது தோழி மனம் வருந்தி பேசியதை உணருகின்றனர். அவளைத் தேற்றும் வண்ணம் பின்வருமாறு கூறுகின்றனர், தோழியே நீ புதியதாக வந்து சேர்ந்தவள் என்று எண்ணிக்கொள்ளாதே, நீ முன்னம் இறைவனைப் பற்றி பேசும்போது உனது வாயினில் எச்சில் ஊறியதைக் கண்ட நாங்கள், நீ இறைவன்பால் வைத்திருக்கும் அன்பு ஆழமானது என்பதை புரிந்துகொண்டோம். நமக்குள் பழைய அடியவர், புதிய அடியவர் என்ற பிரிவினை தேவையில்லை. நமது மனம் தூய்மையாக இருந்தால் போதும். மனம் தூய்மையாக இருக்கும் நாம் அனைவரும் செய்ய வேண்டிய செயல் ஒன்றே ஒன்றுதான், அது நமது இறைவனாகிய சிவபெருமானின் புகழினைப் பாடுவதுதான்.