இன்றைய முக்கிய நிகழ்வுகள் (11.12.2024)

 இன்றைய முக்கிய நிகழ்வுகள் (11.12.2024)

உலக மலைகள் தினம்

உயிரினங்களின் வாழ்க்கையில் மலைகள் முக்கிய பங்கைப் பெறுகின்றன. ‘சமவெளி பிரதேசங்களின் தண்ணீர் தொட்டி’ என்று மலைகள் வர்ணிக்கப் படுகின்றன. மலைகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் ‘மலைகள் தினம்’ கடைப்பிடிக்கப்படுகிறது. மலைகள், உலகத்திற்கு தேவையான தூய நீரினை அதிகபட்சமாக வழங்குவதுடன், மேலும் பல்வேறு வகையான தாவரங்களினதும், விலங்குகளினதும் பிரதான கேந்திர நிலையமாக விளங்குவதுடன், மனிதனின் வாழிடமாகவும் விளங்குகின்றன.காலநிலை மாற்றங்கள், சுற்றுச்சூழல் மாசடைதல், வெடிப்பு நடவடிக்கைகள், ஆயுத மோதல்கள் இன்ன பிற காரணங்களினால் மலைகள் பெரும் பாதிப்பினை எதிர்நோக்குகின்றன. இது தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்ச்சியினை ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 11ம் தேதி உலக மலைகள் தினமாகக் கொண்டாடப்படுகின்றது. ♪ உலக நிலப்பரப்பில் 27% பங்கிற்கு மலைகள் பரந்து வியாபித்துள்ள அதேவேளை உலக மக்களில் 12% பேர்களுக்கு தேவையான வாழ்க்கையை மலைகளே வழங்குகின்றன. ஆனால் உலகில் 50% -ற்கும் அதிகமானோர் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மலை வளங்களிலேயே தங்கியுள்ளனர். ♪ மலை வாழ் மக்களில் 80% ற்கும் அதிகமானோர் வறுமைக் கோட்டின் கீழேயே வாழ்கின்றனர். ♪ உலகில் 80% ற்கும் அதிகமான தூய நீரானது மலைகளிலிருந்தே கிடைக்கின்றது. நம் நாட்டில் இமயமலைக்கு அடுத்தபடியாக, மேற்கு தொடர்ச்சி மலை மிகவும் முக்கியமானவை. அதிலும் தொன்மை வாய்ந்த நீலகிரி, நம் பண்பாட்டோடு இணைந்த குறிஞ்சி நிலப்பகுதியாக காணப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் நீலகிரி மலைப்பகுதியில் பல்வேறு இயற்கைச் சீற்றங்களாலும், செயற்கைக் காரணங்களாலும் பாதிப்புக்கு ஆளாகி வருகிறது. உலகளவில் சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வுகளின்படி, உலகில் உள்ள மிகவும் பழமையான மலைகளின் உயரம் நாளுக்கு நாள் குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இலங்கையிலுள்ள பல மலைகளுக்கும் பொருந்தும். பண்டைய கால மக்கள், மலைகளை புனித இடமாகவும், உயிரினங்களின் வாழ்வாதாரமாகவும் நினைத்தனர். ஆனால், தற்போது இதனுடைய நிலை தலைகீழாக மாறி வருகிறது. அதாவது மலைப்பகுதிகளை மக்கள் தங்கள் வாழிடமாக மாற்றி வருகின்றனர். இதனால் வெப்பமயமாதல் காரணமாக காட்டுப்பகுதிகள் அழிவடைந்து வருகின்றன. இயற்கைச் சீற்றங்களில் இருந்து பாதுகாப்பு பெறுவதற்கும், அரியவகை மூலிகைகளை பாதுகாப்பதற்காகவும், சுத்தமான காற்றை பெறுவதற்காகவும் மலைகளின் உதவி முக்கியம் என்பது குறிப்பிடத்தக்கது.

நானி பல்கிவாலா காலமான தினமின்று

இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த பன்முக ஆளுமைகளில் ஒருவர், நானி பல்கிவாலா. பிரபல வழக்கறிஞர், இந்திய அரசமைப்புச் சட்ட நிபுணர், சர்வதேச சட்ட வல்லுநர், சிறந்த சட்டப் பேராசிரியர், கல்வியாளர் என்பதோடு அவர் ஒரு பொருளியல் அறிஞரும் நிதிநிலை ஆய்வாளரும்கூட. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, அரசமைப்புச் சட்டம் ஜனவரி 26, 1950 முதல் நடைமுறைக்கு வந்தது. அதைத் தொடர்ந்து வந்த ஆண்டுகளில், அரசமைப்புச் சட்டம் உறுதிசெய்துள்ள அடிப்படை உரிமைகளைப் பின்பற்றுவதோடு, அவற்றை அரசியல் களத்தில் கண்ணியமாகக் காப்பாற்றுவது என்பது மிகவும் கடினமாக இருந்தது என்பதுதான் வரலாறு. அந்நிலை இன்றும் தொடர்கிறது. அரசமைப்புச் சட்டம் குறித்த வரலாற்றுச் சிறப்பு மிக்க வழக்குகளில் நானி பல்கிவாலாவின் பங்களிப்பு அளப்பரியது. அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகளை ஆளும் அரசு, தன்னுடைய மனம்போன போக்கில் மாற்றங்கள் செய்ய முடியாத அளவுக்கு அவற்றை வழக்குகளின் வாயிலாக வலுப்படுத்தினார். நெருக்கடிநிலை அறிவிக்கப்பட்டபோது, பத்திரிகைகளின் சுதந்திரம் பறிக்கப்பட்டது, வங்கிகள் நாட்டுடமையாக்கப்பட்டது தொடர்பான வழக்குகளில் அவரின் அறிவார்ந்த வாதங்கள் பாராட்டப்பட்டன. அரசமைப்புத் திருத்தச் சட்டங்கள் குறித்த அவரது விமர்சனங்கள் வீரியம் மிக்கவை. நிதிநிலை அறிக்கையின் விமர்சகர் 1958 தொடங்கி பொது நிகழ்ச்சிகளில் சொற்பொழிவுகளை நிகழ்த்தத் தொடங்கினார் நானி பல்கிவாலா. மத்திய அரசின் ஆண்டு நிதிநிலை அறிக்கைகளைப் பற்றி ஆய்வுச் சொற்பொழிவுகள் அப்படித் தொடங்கியதுதான். 1958 தொடங்கி 1994 வரை தொடர்ந்து நிதிநிலை ஆய்வுச் சொற்பொழிவுகளை அவர் நிகழ்த்திவந்தார். முதன்முதலில் மும்பையில் ஒரு ஹோட்டலில் சிறிய அளவில் தொடங்கப்பட்ட அந்தச் சொற்பொழிவு, பொதுமக்களின் ஆதரவைப் பெற்று பல்வேறு நகரங்களில் கிரிக்கெட் மைதானங்களில் நடத்துகிற அளவுக்கு செல்வாக்குப் பெற்றது. இறுதி ஆண்டுகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்தச் சொற்பொழிவைக் கேட்கக் கூடினார்கள். ஒவ்வொரு ஆண்டும், மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையின் அனைத்து முக்கிய அம்சங்களையும், எல்லா மக்களும் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் புள்ளிவிவரங்களோடு சொற்பொழிவாற்றினார். நிதிநிலை அறிக்கை பற்றிய தனது எண்ணங்கள், விமர்சனங்கள் மட்டுமின்றி, அரசின் வருவாயைப் பெருக்குவது, செலவுகளை எப்படிக் குறைப்பது என்பது குறித்து ஆக்கபூர்வமான யோசனைகளையும் அளிப்பது அவரது வழக்கம். அவரின் நிதிநிலை அறிக்கை பற்றிய ஆய்வு நிதியமைச்சரின் அறிக்கைக்கு நிகராகப் பார்க்கப்பட்டது. ஒன்றரை மணி நேரம், துண்டுச் சீட்டுகூட இல்லாமல் சொற்பொழிவுகளை நிகழ்த்தினார் என்பது இன்னொரு ஆச்சரியம்! இந்தியப் பொருளாதாரம், நீதித் துறை, அரசமைப்பு, சமுதாய ஒற்றுமை, நிதிநிலை அறிக்கைகள் பற்றிய ஆய்வு முதலான அவரது சிறந்த சொற்பொழிவுகள் ‘மக்களாகிய நாம்’ (1984) , ‘நாடாகிய நாம்’ (1994) என்ற தலைப்புகளில் தொகுக்கப்பட்டிருக்கின்றன. இவ்விரண்டு நூல்களிலும் நாட்டின் பல்வேறு பிரச்சினைகளை ஆக்கபூர்வமாக ஆய்வுசெய்து, அறிமுக வாசகர்களுக்கும் எளிதில் புரியும்படி விளக்கியுள்ளார். ஆங்கில இலக்கியங்களில் ஆர்வம் கொண்டவர் பல்கிவாலா. அவரின் எழுத்துகள் அனைத்திலும் உலகப் புகழ்பெற்ற இலக்கியவாதிகளின் மேற்கோள்களைப் பார்க்க முடியும். அரசமைப்புச் சட்ட வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் 1973-ல் நடந்த கேசவானந்த பாரதி (எதிர்) கேரள அரசு என்ற முக்கியமான வழக்கில், அரசமைப்புச் சட்டத்தில் திருத்தங்கள் செய்ய மட்டுமே நாடாளுமன்றத்துக்கு அதிகாரம் இருக்கிறது, அதன் அடிப்படைகளை மாற்றுவதற்கு அதிகாரமில்லை என்று தெளிவுபடுத்தப்பட்டது. வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த வழக்கில், நானி பல்கிவாலாவுக்கு முக்கிய பங்குண்டு. உலகளாவிய நீதித் துறை சிந்தனைகளை எடுத்துக்காட்டி தனது வாதங்களை எடுத்துவைத்தார் பல்கிவாலா. சர்வதேச நீதிமன்றங்களிலும் இந்தியாவின் சார்பாகப் பல்வேறு முக்கிய வழக்குகளில் நானி பல்கிவாலா வாதிட்டார். பிற நாட்டுச் சட்ட அறிஞர்கள், தமது வாதுரைகளை எழுதிவைத்துக்கொண்டு பேசியபோது, பல்கிவாலா மட்டும் கைகளில் குறிப்புகள் எதுவும் இல்லாமல் வாதாடி ஆச்சரியப்படுத்தினார். 1971-ல் சுதந்திரா கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றுக்கொள்ளுமாறு நானி பல்கி வாலாவைக் கேட்டுக்கொண்டார் ராஜாஜி. ஆனால், அரசியல் சார்பற்றுத் தனித்துச் செயல்படவே தான் விரும்புவதாக வருத்தத்துடன் மறுத்துவிட்டார் பல்கிவாலா. டாடா குழுமத்தின் பல்வேறு நிறுவனங்களின் இயக்குநராகவும் தலைவராகவும் பணியாற்றியிருக்கிறார். 1968 முதல் 2000 வரை ‘ஃபோரம் ஆஃப் ஃப்ரீ எண்டர்பிரைசஸ்’ அமைப்பின் தலைவராக விளங்கினார். மும்பையை மையமாகக் கொண்டு இயங்கிய இந்த அமைப்பு, இந்திய அரசின் பொருளியல் கொள்கைகள் குறித்த விமர்சனங்களைப் புத்தகங்களாகத் தொடர்ந்து வெளியிட்டுவந்தது. 1977-ல் அமெரிக்காவுக்கான இந்தியத் தூதராக நானி பல்கிவாலாவை நியமித்தது மொரார்ஜி தேசாய் தலைமையிலான ஜனதா அரசு. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் அவர் அந்தப் பணியில் இருந்தார். ஆனால், அந்த வாய்ப்பையும்கூட அவர் அவ்வளவு எளிதில் ஏற்றுக்கொள்ளவில்லை. அவரின் சட்டத் துறை மற்றும் பொதுச் சேவைகளைப் பாராட்டி, 1998-ல் நாட்டின் இரண்டாவது உயரிய குடிமை விருதான ‘பத்மவிபூஷண்’ வழங்கப்பட்டது. தனது 82-ம் வயதில் 2002 இதே டிசம்பர் 11 அன்று மும்பையில் நானி பல்கிவாலா மரணமடைந்தார்.

‘பாரத ரத்னா’ பண்டிட் ரவிசங்கர் (Pandit Ravi Shankar) காலமான தினம்

உலகப் புகழ்பெற்ற சிதார் இசைக் கலைஞர் ‘பாரத ரத்னா’ பண்டிட் ரவிசங்கர் (Pandit Ravi Shankar) காலமான தினம் இன்று அவரைப் பற்றிய சில ஞாபகக் குறிப்புகள் வாரணாசியில் (1920) பிறந்தார். இயற்பெயர் ரவீந்திரோ சங்கர் சவுத்ரி. தந்தை, ராஜஸ்தானின் ஜாலாவார் சமஸ்தான திவானாக இருந்தவர். ரவிசங்கர் தனது 10 வயதில், பாரிஸில் அண்ணன் நடத்திய பாலே நடனக்குழுவில் சேர்ந்தார். தனக்கான துறை நடனம் இல்லை என்பதை சீக்கிரமே கண்டுகொண் டார். 1938-ல் இந்தியா திரும்பினார். வாரணாசி அருகே ஒரு குக்கிராமத்தில் ஏறக்குறைய அனைத்து வாத்தியங்களிலும் நிபுணத்துவம் பெற்ற உஸ்தாத் அலாவுதீனின் வீட்டில் தங்கி குருகுல முறையில் இசை பயின்றார். இவர் வாசிக்க விரும்பியது சரோட் வாத்தியம். ஆனால், குருதான் சிதார் பயிலச் சொன்னார். குருவின் வாரிசுகளுடன் சேர்ந்து இசை அரங்கேற்றம் இவரது 19-ம் வயதில் ஜுகல்பந்தியாக நடந்தது. பின்னர் தீவிர பயிற்சியால் சிதார் இசை நுணுக்கங்களை வசப் படுத்திக்கொண்டார். பல நடன நிகழ்ச்சிகளுக்கு இசை அமைத்தார். அகில இந்திய வானொலியில் 1949-ல் பணியாற்றினார். உருதுக் கவிஞர் முகமது இக்பாலின் ‘ஸாரே ஜஹான்சே அச்சா’ பாடலுக்கு இசை அமைத்தார். பதேர் பாஞ்சாலி, காபுலிவாலா என சில திரைப்படங்களுக்கும் இசை அமைத்துள்ளார். ஏராளமான தனிக் கச்சேரிகள், ஜுகல்பந்திகள் நடத்தியுள்ளார். உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பல இசை நிகழ்ச்சிகள் நடத்தினார். அமெரிக்க ராக் இசைக் கலைஞர் ஜார்ஜ் ஹாரிசன், வயலின் இசைக் கலைஞர் யெஹுதி மெனுஹின் ஆகியோருடன் இவருக்கு ஏற்பட்ட நட்பு இவரது இசைக் கனவுகளின் எல்லைகளை விரிவடையச் செய்தது. பாரம்பரிய மரபுக் கட்டுப்பாடு என்ற பெயரில் இசையை சிறை வைக்கக் கூடாது. இசைஞானம் இல்லாதவர்கள்கூட கேட்டு ரசிக்கும்படியாக இசை இருக்கவேண்டும் என்ற கருத்து கொண்டவர். யெஹுதி மெனுஹினுன் இணைந்து ‘வெஸ்ட் மீட்ஸ் ஈஸ்ட்’ என்ற இசை ஆல்பம் வெளியிட்டார். இது உலகம் முழுவதும் பிரபலமடைந்தது. இந்திய இசைக்கு உலக அங்கீகாரம் கிடைத்தது. இவருக்கு ‘பண்டிட்’ என்ற பெருமையும் கிடைத்தது. தன் இசையில் கேளிக்கை சாயல் அதிகம் இருப்பதையே தன் தனித்துவ பாணியாக ஆக்கிக்கொண்டார். உலகப் புகழ்பெற்ற பல கலைஞர்கள், அமைப்புகளுடன் இணைந்து பல இசை நிகழ்ச்சிகள் நடத்தியதோடு பல ஆல்பங்கள் வெளியிட்டுள்ளார். 1986-1992 வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். பத்பூஷண், பத்மவிபூஷண், மகசேசே, பாரத ரத்னா விருதுகளைப் பெற்றவர். கிராமி விருதை 3 முறை வென்றுள்ளார். உலக இசையின் ஞானத் தந்தை, இந்தியப் பாரம்பரிய இசையின் தூதர் என்று போற்றப்படுகிறார். மாஸ்ட்ரோ, பண்டிட் என்று பல்வேறு அடைமொழிகளால் குறிக்கப் படும் இசை மேதை ரவிசங்கர் 92 வயதில் இதே டிசம்பர் 11ல் (2012) மறைந்தார்.

ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (UNICEF) உருவாக்கப்பட்ட நாள்

டிசம்பர் 11 ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (United Nations Children’s Fund or UNICEF) 11 டிசம்பர் 1946 இல் ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையினால் இரண்டாம் உலகயுத்தத்தில் அழிவுற்ற நாடுகளில் உள்ள சிறார்களுக்கு உணவு மற்றும் சுகாதார வசதிகளை வழங்கும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டது. 1953இல் ஐக்கியநாடுகளின் நிதந்தர அமைப்பாகி இதன் முன்னைய பெயரான ஐக்கிய நாடுகளின் பன்னாட்டுச் சிறுவர்களிற்கான அவசரகால உதவி (United Nations International Children’s Emergency Fund) என்னும் பெயரானது ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் என மாற்றப்பட்டது. எவ்வாறெனினும் இன்றும் இதன் முன்னைய பெயரில் இருந்து சுருக்கி அறியப்பட்ட யுனிசெஃப் என்றே இன்னமும் அறியப்படுகின்றது. இதன் தலைமை அலுவலகமானது அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ளது. ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியமானது வளர்ந்து வரும் நாடுகளின் தாய் சேய் தொடர்பான வசதிவாய்ப்புக்களை பெருக்கும் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது. 1965ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு இவ்வமைப்பிற்கு வழங்கப்பட்டது[1]. ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியமானது தனது திட்டங்களுக்கான நிதி வசதிக்கு உதவி வழங்கும் நாடுகள் மற்றும் தனியார் நிறுவனங்களையே சார்ந்துள்ளது.

எம்.எஸ். சுப்புலட்சுமி நினைவு நாள் 

எம்.எஸ். சுப்புலட்சுமி ( 2004-ம் வருஷம்) இதே டிசம்பர் 11-ந்தேதி காலமானார். எம்.எஸ். சுப்புலட்சுமி (மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி) 1916-ம் ஆண்டு செப்டம்பர் 16-ந்தேதி பிறந்தார். இவர் ஒரு புகழ்பெற்ற கர்நாடக இசைப் பாடகி. 1998-ம் ஆண்டு இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, வங்காள மொழி, இந்தி, சமஸ்கிருதம், குஜராத்தி ஆகிய பல மொழிகளில் இவர் பாடியுள்ளார். இவர் உலகின் பல நாடுகளுக்கும் பண்பாட்டுத் தூதுவராகச் சென்று பல நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளார். மேலும் ஐக்கிய நாடுகள் அவையிலும் இவர் தன் அரங்கேற்றத்தை நிகழ்த்தியுள்ளார். இவர் 2004-ம் அண்டு டிசம்பர் 11-ந்தேதி காலமானார்.

கூன்வண்டுக்கு நினைவுச்சின்னம் அமைக்கப்பட்ட நாள்

1919 அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தின் எண்ட்டர்ப்ரைஸ் என்னும் நகரில், போல் வீவில் என்னும் கூன்வண்டுக்கு நினைவுச்சின்னம் அமைக்கப்பட்ட நாள் டிசம்பர் 11. உலகிலேயே இது மட்டும்தான், பயிர்களை அழிக்கும் ஒரு பூச்சிக்கு அமைக்கப்பட்டுள்ள நினைவுச்சின்னமாகும்! காஃபி கவுண்ட்டியை (மாவட்டம்) சேர்ந்த, இந்த ஊர் மக்கள் பருத்தி விவசாயத்தில் ஈடுபட்டிருந்தனர். மெக்சிகோவைச் சேர்ந்த இந்தக் கூன்வண்டு, டெக்சாஸ் வழியாக, அலபாமாவுக்குப் பரவியது. பருத்திக் காய்களுக்குள் முட்டையிடுவதுடன், செடியின் பல பகுதிகளையும் உணவாகக்கொண்டு அழிப்பதால், இது மெக்சிகோ பருத்திக்காய் கூன்வண்டு என்றும் அழைக்கப்படுகிறது. முட்டையிலிருந்து முழு வண்டாக வளர மூன்று வாரங்கள் மட்டுமே எடுத்துக்கொண்டு, ஒவ்வொன்றும் 200 முட்டைகளை இடும். பருத்திப்பயிர் ஒருமுறை வளர்வதற்குள் வண்டின் 8-10 தலைமுறைகள் வந்துவிடும் என்பதால், பூச்சிகொல்லிகளுக்கு எதிராக தகவமைத்துக்கொண்டு, அழிக்க முடியாததாக இருந்தது. இதனால், விவசாயத்துறையில் 20ஆம் நூற்றாண்டின் மிகவும் அஞ்சப்பட்ட பூச்சிகளில் ஒன்றாக இது கருதப்பட்டது. எண்ட்டர்ப்ரைசுக்குள் 1915இல் நுழைந்தவுடன், 60 சதவீதம் பருத்தியை அழித்த இது, அடுத்த ஆண்டுகளில் முழுவதுமாக அழித்தது. அதனால் கடனில் தவித்த விவசாயிகள் வேறு வழியின்றி நிலக்கடலை பயிரிட்டனர். 1800களின் இறுதியில் பர்னம் அண்டு பெய்லி சர்க்கசை உருவாக்கிய பி.டி.பர்னம், அங்கு பார்வையாளர்களுக்கு விற்கும்வரை, நிலக்கடலையை அமெரிக்கா பெரிய அளவுக்குக் கண்டுகொண்டதில்லை. எண்ட்டர்ப்ரைசுக்கு அருகிலுள்ள டோத்தன் – உலகின் நிலக்கடலைத் தலைநகரம் என்று தன்னைக் குறிப்பிட்டுக்கொள்ளுமளவுக்கு, ஏற்ற காலநிலை அப்பகுதியில் நிலவியதால், எண்ட்டர்ப்ரைஸ் விவசாயிகளுக்கும், கடன்களை அடைத்து மிச்சமிருக்கும் அளவுக்கு மிகப்பெரிய வருவாய் கிடைத்தது. அடுத்தடுத்த ஆண்டுகளில் பருத்தியையும், நிலக்கடலையையும் மாற்றிப் பயிர் செய்யவும் கற்றுக்கொண்டனர். இந்த வண்டு தாக்காவிட்டால், இந்த அதிக வருவாய் கிடைத்திருக்காது என்று இதற்கு நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டது. இதிலிருக்கும் வண்டின் சிலை அடிக்கடி திருட்டுப் போனதால், உண்மையான சிலை 1998இல் அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டு, நினைவுச்சின்னத்தில் உலோகமல்லாத ஒரு சிலை அமைக்கப்பட்டது.

தத்துவஞானி ஓஷோ பிறந்த நாள் இன்று

தத்துவஞானியாகவும் அறியப் படும் ஓஷோ பிறந்த நாள் இன்று! ஓஷோ எனப் பரவலாக அறியப்படும் ரஜ்னீஷ் இந்தியாவின் ஆன்மீகத் தலைவர்களுள் ஒருவர். மிகச் சிறந்த பேச்சாளரான இவர் ஆங்கிலத்திலும் இந்தியிலும் பெருமளவு உரையாற்றியிருகிறார்.இவரது பேச்சுக்கள் பெருமளவு நூல்களாக வெளிவந்துள்ளன. இவற்றில் பல தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன. அதிலிருந்து ஒரு சில சிறு கதைகள் … கதை : 1 சந்தோஷமாக வாழ ஓஷோ அவர்கள் ஒரு கதை சொல்கிறார். வயதான கிழவர் தன் நூறாவது பிறந்த நாளை மிகவும் சந்தோஷமாக கொண்டாடுகிறார். அவரை பார்த்து வியந்தவர்கள் “எப்படி சந்தோஷமாக வாழ்வதாக கேட்டபோது அவர், ” ஒவ்வொரு நாளும் நான் கண் விழிக்கிற போது சந்தோஷமாயிருப்பதா ? வேதனைப்படுவதா ? என்று கேட்டு விட்டு சந்தோஷத்தை தேர்வு செய்கிறேன்” என்றார். கதை : 2 குருட்ஜீஃப் பின் தன் சீடர்க்கள் முழுமையாக சரணடைதல் தேவைப்பட்டது. அவர் எதை சொன்னாலும் பின்பற்ற வேண்டும் என்று கட்டளையிட்டார். ஒரு குறிப்பிட்ட பயிற்சியை கூறுவார். அதை செய்து கொண்டிருக்கும் போது ‘நிறுத்து !’ என்பார். உடனே நிறுத்திவிட வேண்டும். ஒரு நாள் காலையில் கால்வாயில் இறங்கி நடக்கிற போது அவர் நிறுத்து என்று சொல்லிவிட்டு, தன் டென்ட்டிற்குப் போய்விட்டார். நான்கு சீடர்கள் கால்வாயில் நின்றிருந்தனர். யாரோ தண்ணீரைத் திறந்து விட, தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி வந்தது. குருட்ஜூஃப் உள்ளே போய்விட்டார். அவருக்கு தெரியாது. ஆனாலும் சீடர்கள் காத்திருந்தனர்.கழுத்துவரை தண்ணீர் வந்து விட்டது. ஒருவன் கரைக்கு ஓடி விட்டான். “இது ரொம்பவும் அதிகம். குருவுக்கு எப்படி தெரியும் ? ” என்றான். மற்ற இரண்டு சீடர்களும் மூக்குவரை தண்ணீர் வந்ததும் வெளியேறி விட்டனர். ஆனால், ஒரு சீடன் மட்டும் அப்படியே நின்றான். தண்ணீர் அவன் தலையைத் தொட்டு ஓடிக் கொண்டிருந்தது. அவன் மூழ்கிக் கொண்டிருந்தான்.அப்போது திடீரென தன் அறையை விட்டு பாய்ந்து வந்த குருட்ஜீஃப் தண்ணீரில் குதித்து அவனை காப்பாற்றிக் கொண்டு வந்தார்.மரணத்தில் இருந்து வந்த சீடர் கண்களை திறக்கும் போது புதிய மனிதனாக இருந்தான். அவனுக்குள் மாற்றம் நிகழ்ந்திருந்தது. அந்தப் பழைய மனிதன் இறந்து அவன் புதிதாகப் பிறப்பெடுத்திருந்தான்.அந்த சீடன் குருவை முழுமையாக ஏற்றுக் கொண்டான். தன் மனதையும், அதன் கணக்குகளையும் அவன் நிராகரித்தான். தன் வாழ்வின் மீதான பற்றை நிராகரித்து, உயிராசையைத் துறந்தான். அதனால் அதான் அவனை எதுவும் நகர்த்தி விடவில்லை என்பதை ஓஷோ இந்த கதையின் மூலம் சொல்லுகிறார். கதை : 3 ஒரு ஜென் குரு தன் சீடர்களிடம், ” நான் பாட்டிலில் ஒரு வாத்தை போட்டேன். இப்போது அந்த வாத்து வளர்ந்து விட்டது. பாட்டிலின் கழுத்தோ மிகச் சிறியது. எனவே வாத்து வெளியே வர முடியவில்லை. அது ஒரு சிக்கலாகி விட்டது. வெளியே வராவிட்டால் வாத்து செத்துவிடும். பாட்டிலை உடைத்து வாத்தை வெளியேற்றலாம். ஆனால், பாட்டிலை உடைக்க நான் விரும்பவில்லை. அது விலைமதிப்புள்ள ஒன்று. என்ன செய்வது என்று நீங்கள் சொல்லுங்கள்” என்றார். பாட்டில் தலையில் உள்ளது அதன் கழுத்தோ குறுகியது. தலையை உடைக்கலாம். ஆனால் அது விலைமதிப்புள்ளது. அல்லது வாத்தை சாகவிடலாம். ஆனால், அதையும் அனுமதிக்க முடியாது. ஏனென்றால் நீங்கள் தான் அந்த வாத்து. அந்த ஜென் குரு தொடர்ந்து சீடர்களைக் கேட்டார். அவர்களை அடித்தார். சீக்கிரம் வழி கண்டுபிடியுங்கள் என்றார். ஒரே ஒரு பதிலை தான் அவர் ஏற்றுக் கொண்டார். ஒரு சீடன் கூறினான், ” வாத்து வெளியில் தான் இருக்கிறது !” ஆம்.. நீங்கள் வெளியே இருக்கிறீர்கள். எப்போதும் நீங்கள் உள்ளே இருந்ததில்லை. உள்ளிருப்பதாக எண்ணுவது தவறான கருத்து. எனவே, நிஜமான பிரச்சனை என்பது எதுவும் இல்லை என்பதை விளக்க இந்த கதையை ஓஷோ சொல்லுகிறார்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...