ஆந்திரத்தில் வெளிச்சத்துக்கு வந்திருக்கும் இஎஸ்ஐ மருத்துவமனை முறைகேடு:
விஜயவாடா: மருந்துகள் வாங்குவது, மருத்துவ உபகரணங்கள், அறுவை சிகிச்சை உபகரணங்கள், பரிசோதனைக் கூடக் கருவிகள் போன்றவை வாங்கியதில் ரூ.404 கோடி அளவுக்கு முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
லஞ்ச ஒழிப்புத் துறை நடத்திய விசாரணையில், ஆதாயம் பெரும் நோக்கத்தோடு, இயக்குநர்கள் இந்த முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து, ஆந்திர மாநிலத்தில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனைகளுக்கு மருந்து உள்ளிட்டவை வாங்குவதற்கான கொள்கைகள் மற்றும் விதிமுறைகள் சரியாகப் பின்பற்றப்படாதது குறித்து மருத்துவக் காப்பீட்டுச் சேவையின் மூன்று இயக்குநர்களிடம் நடத்தப்பட்ட விசாரணை முடிவுக்கு வந்துள்ளது.
டாக்டர் பி. ரவி குமார், டாக்டர் சி.கே. ரமேஷ் குமார், டாக்டர் ஜி. விஜய குமார் ஆகியோரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் முடிவில், அவர்கள் முறைகேடுகளில் ஈடுபட்டதற்கான முகாந்திரம் இருப்பதாகவும், நடவடிக்கை எடுக்கும்படியும் லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவித்துள்ளது.
டெண்டர்கள் விடாமல் சரியான கொள்கைகளைப் பின்பற்றாமல், மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள் வாங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் இயக்குநர்கள் ஆதாயம் அடைந்துள்ளனர்.
நிர்ணயிக்கப்பட்ட விலையை விடக் கூடுதலாக ஒவ்வொரு மருத்துவ உபகரணங்களும் வாங்கப்பட்டிருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.