3 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்..!
கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்களில் வரும் புதன்கிழமை மிக கனமழை பெய்யலாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, வடமேற்கு திசையில் நகர்ந்து, வரும் புதன்கிழமை அன்று இலங்கை – தமிழகம் கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் மிதமான மழை பெய்யலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கடலூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல் கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் நாளை மறுதினம் மிக கனமழையும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூரில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதேபோன்று, பெரம்பலூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டையிலும் நாளை மறுதினம் கனமழை பெய்யக்கூடும்.
செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மற்றும் புதுச்சேரியில் வரும் வியாழக்கிழமை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி உட்பட 13 மாவட்டங்களில் வியாழக்கிழமை கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.