“பிங்க் ஆட்டோ திட்டம்” – கடைசி தேதி நீட்டிப்பு..!
தமிழகத்தில் திமுக அரசு ஆட்சி பொறுப்புக்கு வந்ததும், தேர்தல் வாக்குறுதிகளான மகளிர்உரிமைத்தொகை, மகளிர் விடியல் பேருந்து என பெண்களுக்கான சலுகைகள் நிறைவேற்றப்பட்டது..இந்நிலையில், தற்போதைய சூழலில் சுயதொழில் தொடங்க பெண்களிடம் ஆர்வமும், ஈடுபாடும் அதிகமாவே காணப்படுகிறது. அதன் அடிப்படையில் பெண்கள் சுயதொழில் தொடங்க அரசின் சார்பில் பல திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டங்கள் மூலமாக பயனடைந்த பெண்களுமே அதிகம் என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் சொந்த தொழில் செய்ய விரும்புவோருக்கு தமிழ்நாடு அரசே முதலீடு அளிக்கும் வகையில் தகுந்த பயனாளி பெண்களுக்கு மானியம் வழங்கவிருக்கிறது. இந்த மானியம் பெறும் வழிமுறைகள் குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
“இளம் சிவப்பு நிற ஆட்டோ” அதாவது பிங்க் ஆட்டோ என்ற பெயரில் சென்னையில் வசித்து வரும் பெண்களுக்காக CNG/ Hybrid GPS கருவி பொருத்திய ஆட்டோக்கள் வாங்க ரூபாய் ஒரு லட்சம் மானியமாக வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறுவோரின் தகுதிகளாக தமிழ்நாடு அரசு வெளியீட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தில், பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கவேண்டும், சென்னையை சேர்ந்தவராக இருக்க வேண்டும், 25 முதல் 45 வயது வரை இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலே குறிப்பிட்ட விஷயங்களுக்கு தகுதியானவர் என்றால், சென்னை மாவட்ட சமூக நல அலுவலர், 8-வது தளம், சிங்காரவேலர் மாளிகை, சென்னை – 600 001.என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்பி வைக்கலாம் என செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே வெளியிட்ட செய்தி குறிப்பில், கடந்த நவம்பர் 23 தான் கடைசி தேதி என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது வெளியிடப்பட்டிருக்கும் செய்தி குறிப்பில் டிசம்பர் 10ம் தேதி கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி பத்தாம் வகுப்பு தேர்ச்சி என்ற நிர்ணயத்தையும் நீக்கி தேர்ச்சி பெறாதவர்களும் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள புதிய செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.