தெலுங்கானாவில் மூன்றாம் பாலினத்தவருக்கு போக்குவரத்து உதவியாளர் பணி..!

 தெலுங்கானாவில் மூன்றாம் பாலினத்தவருக்கு போக்குவரத்து உதவியாளர் பணி..!

தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தில், மூன்றாம் பாலினத்தவர் 44 பேர் போக்குவரத்து உதவியாளராக பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.

தெலுங்கானாவில் முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையில், காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. ஹைதராபாத் போக்குவரத்து காவல் துறையில் மூன்றாம் பாலினத்தவர் போக்குவரத்து உதவியாளர்களாக நியமிக்க முதல்வர் ரேவந்த் ரெட்டி உத்தரவிட்டார். ‘விண்ணப்பதாரர்களுக்கு 18 வயதுக்கு மேல், 40 வயதுக்குள் இருக்க வேண்டும். இந்திய குடிமக்களாக இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்’ என தகுதிகள் அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி கோஷாமஹால் போலீஸ் மைதானத்தில் ஆள்சேர்ப்பு நடத்தப்பட்டது. ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் போன்ற உடற்தகுதி போட்டிகளில் மூன்றாம் பாலினத்தவர் 58 பேர் கலந்து கொண்டனர். இதில், 44 பேர் போக்குவரத்து உதவியாளராக பணியமர்த்தப்பட்டு உள்ளனர். தேர்ந்தெடுக்கப்பட்ட 44 பேரில், 29 பேர் திருநங்கைகள், மீதமுள்ள 15 பேர் திருநம்பிகள்.

ஆள்சேர்ப்பு நிகழ்ச்சியில் ஹைதராபாத் போலீஸ் கமிஷனர் சி.வி.ஆனந்த் கலந்து கொண்டார். தேர்ந்தெடுக்கப்பட்டோர் தங்கள் சமூகத்திற்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும். காவல் துறைக்கு நல்ல பெயரை கொண்டு வர வேண்டும் என போலீஸ் கமிஷனர் சி.வி.ஆனந்த் தெரிவித்தார்.

இது குறித்து, போக்குவரத்து துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது: ஒரு வாரம் அல்லது 10 நாட்கள் பயிற்சி அளிக்கப்படும். இதன் மூலம் மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் சமூகத்தில் மரியாதை கிடைக்கும். ஹைதராபாத்தில் பரபரப்பான பகுதிகளில் போக்குவரத்தை நிர்வகிக்க அவர்கள் அனுப்பப்படுவார்கள். ஊர்க்காவல் படையினரைப் போல அவர்களது சேவையையும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும், என்றனர்.
அவர்களுக்கு ஊர்க்காவல் படையினரின் சம்பளத்துக்கு இணையான சம்பளத்தை நிர்ணயம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...