பிஎஸ்எல்வி-சி59 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது..!
ஸ்ரீஹரிகோட்டாவில் சூரியனை ஆராய்ச்சி செய்வதற்கான செயற்கைக்கோள், பிஎஸ்எல்வி-சி59 ராக்கெட் மூலம் இன்று விண்ணில் செலுத்தப்பட்டது.
ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஎஸ்ஏ சூரியனின் ஒளிவட்டப் பாதையை ஆய்வு செய்வதற்காக ப்ரோபா 3 மிஷனை தொடங்கியுள்ளது. இதற்காக சூரியனின் வளிமண்டலம் மற்றும் கரோனா பகுதியை ஆய்வு செய்வதற்காக இரண்டு செயற்கைக்கோள்களை ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த செயற்கைக்கோள்கள் கடந்த மாதம் இந்தியா கொண்டு வரப்பட்ட நிலையில், டிசம்பர் 4ஆம் தேதியான நேற்று விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால் கடைசி நேரத்தில் ப்ரோபா 3 செயற்கைக்கோள்களில் கண்டறியப்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நேற்று பிஎஸ்எல்வி ராக்கெட்டை விண்ணில் ஏவும் பணி திடீரென ரத்து செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று மாலை 4 .12 மணிக்கு இந்த செயற்கைக் கோள்களை அனுப்ப இஸ்ரோ முடிவு செய்தது. இந்த நிலையில் இன்று வெற்றிக்கரமாக பிஎஸ்எல்வி-சி59 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. ஸ்ரீஹரிகோட்டாவில் சூரியனை ஆராய்ச்சி செய்வதற்கான செயற்கைக்கோள், பிஎஸ்எல்வி-சி59 ராக்கெட் மூலம் இன்று விண்ணில் செலுத்தப்பட்டது.