வலுவிழந்தது பெஞ்சல் புயல்..!
கரையைக் கடந்த பெஞ்சல் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்ததாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், வலுப்பெற்று புயலாக உருவானது. இதற்கு ‘ பெஞ்சல் ‘ என பெயர் சூட்டப்பட்டது. இது நேற்று இரவு மாமல்லபுரம் – காரைக்கால் இடையே புதுச்சேரியில் கரையை கடந்தது. இதனால், புதுச்சேரி, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கொட்டித் தீர்த்தது. இதனால், அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.
பெஞ்சல் புயல் கரையை கடந்தும் விழுப்புரம், கடலூர், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கரையை கடந்த பெஞ்சல் புயல், முற்பகல் 11:30 மணியளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. இது புதுச்சேரிக்கு அருகே 30 கி.மீ., தொலைவில் நிலை கொண்டு உள்ளது. நிலப்பரப்பில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுவிழந்து, அடுத்த 12 மணி நேரத்தில் மேற்கு திசையில் நகர வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.