டால்ஸ்டாய் நினைவு நாள்
ரஷ்ய இலக்கியத்தில் தவிர்க்க முடியாத பெயரான லியோ டால்ஸ்டாய் நினைவு நாளின்று காலம் கடந்தும் அனைவராலும் அவரது எழுத்துக்கள் வாசிக்கப்பட்டு வருகின்றன. நாவல்கள் உட்பட சிறுகதைகள், நாடகங்கள், கட்டுரைகள், சிறுவர்களுக்கான நீதிக்கதைகளும் எழுதியுள்ளார். இவருடைய அன்னா கரீனீனா, போரும் அமைதியும் போன்ற நாவல்கள் புகழ்பெற்றது. டால்ஸ்டாய் இறுதி வரை வன்முறைகளுக்கு எதிராகவே வாழ்ந்து வந்துள்ளார். அந்த நாட்களில் டால்ஸ்டாயின் தாக்கம் காந்தியிடம் இருந்துள்ளது. 1894-ம் ஆண்டு காந்தி தென் ஆப்பிரிக்காவில் இருந்த போது “கடவுளின் அரசாங்கம் உனக்குள் இருக்கிறது” (The Kingdom of God is Within You) என்ற புத்தகத்தை காந்தி படித்த பிறகு, அவர் மீது ஈர்க்கப்பட்டார்.
டால்ஸ்டாய் ஒருமுறை ஒரு ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். ஒரு பெண்மணி அவரின் மூட்டையை தூக்க யாரோ எளியவர் என்று எண்ணி இவரை அழைக்க இவரும் அப்பணியை செவ்வனே செய்தார். அதற்கு பின் விஷயம் தெரிந்து அப்பெண்மணி பதறி கொடுத்த பணத்தை திருப்பி கேட்க ,”நான் உழைத்த உழைப்புக்கான பணம் அதை. அதை ஏன் நான் திருப்பி தரவேண்டும் ?” என்று கேட்டார்.
எழுத்தில் எது நல்ல எழுத்து என்பதில் இங்கே பலரின் வாதங்கள் பல்வேறு வகையில் அமையலாம் . ஆனால் சில எழுத்துக்கள் வாசிப்பதற்கு சுகம் தராவிட்டாலும் அதன் நோக்கத்தால் காலங்களை கடந்து நிற்கிறது டால்ஸ்டாய் கிட்டத்தட்ட தீவிர எழுத்து வாழ்க்கையை விட்டு விலகி இருபது வருடங்களுக்கு பிறகு புத்துயிர்ப்பு எனும் நாவலை எழுதப்போவதாக அறிவித்தார் . அதற்கு யார் வேண்டுமானாலும் பணம் கட்டி விற்பனை உரிமையை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிப்பு வேறு செய்தார் .
பணத்திற்காக ஆசைப்படாத அவர் அப்படி சொன்னதன் நோக்கம் டுகொபார்ஸ் எனும் 47,000 மக்கள். டுகொபார்ஸ் இன மக்கள் அன்றைய மத வழிபாட்டு முறைகளை ஏற்காமல் வாழ்ந்தார்கள். முழுக்க சைவமாக இருந்த அவர்கள் வன்முறையை விரும்பாதவர்கள் ; அடித்தாலும் திருப்பி தாக்க மாட்டார்கள். கூட்டுறவு வாழ்க்கை வாழ்ந்தார்கள் ; ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற மாட்டார்கள். கட்டாய ராணுவ சேவை அமலில் இருந்தபடியால் அர அடிபணிய சொன்னது. மாட்டேன் என்று மவுனமாக சொன்னார்கள் இவர்கள். நாட்டை விட்டு கிளம்புங்கள் என்று அமைதியாக, ஆனால், அழுத்தமாக சொல்லிவிட்டது அரசு.
அவர்களை கனடா அரசு ஏற்றுக்கொள்வதாக அறிவித்தது .அதற்கான பயணச்செலவு மற்றும் அங்கு நிலம் வாங்க பணம் இல்லாமல் அந்த மக்கள் வாடியதால் அவர்களுக்கு உதவவே இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அந்த நாவல் பலமுறை திருத்தப்பட்டு ,பல்வேறு குளறுபடிகளோடு பல்வேறு இடங்களில் வெளிவந்தது ,டால்ஸ்டாய் அவர்களின் டச் இதில் இல்லை என்று வேறு எல்லாரும் புலம்பினார்கள். எழுபத்தி எட்டு வயதில் விழித்துக்கொண்டு இருந்த நேரமெல்லாம் இந்த நாவலையே எழுதி தள்ளினார் டால்ஸ்டாய். ஒருவருட காலத்தில் கிடைத்த ராயல்டி தொகை அம்மக்களை காப்பாற்றியது. டால்ஸ்டாய் அவர்களின் நோக்கம் ஆனால் நிறைவேறியது. அந்த மக்கள் வெற்றிகரமாக அங்கே குடியேறினார்கள். அவர்கள் இப்பொழுது தங்களை டால்ஸ்டாய் டுகொபார்ஸ் என்றே அழைத்து கொள்கிறார்கள்.
அவருக்கு எங்கெல்லாம் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் சிலை எழுப்பி அஞ்சலி செலுத்துகிறார்கள் டால்ஸ்டாய் தன்னுடைய எழுத்தை பணமீட்டும் மூலமாக பார்த்தது இல்லை. வீட்டுக்கு என்று பணம் எதையும் விட்டுவைக்க அவர் ஒப்பவில்லை. ராயல்டியை கேட்க வேண்டும் என்கிற மனைவியின் கட்டாயத்துக்கு மசியாமல் கோபம் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார். அடுத்த நாள் ஆனா கரீனினா இறப்பதாக எழுதப்பட்ட அதே அச்டபோவ் ரயில்வே நிலையத்தில் நிமோனியா தாக்கி இதே நவம்பர் 20 (1910)இல் இறந்தார்.
சர்வதேச குழந்தைகள் தினம்
இந்தியாவில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளை, குழந்தைகள் தினமாக கொண்டாடி வருகிறோம். சர்வதேச அளவில் யூனிசெப் எனப்படும் குழந்தைகள் நல அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் நவ.20ம் தேதி உலக குழந்தைகள் தினமாக அறிவித்து கொண்டாடி வருகிறது. குழந்தைகள்தான் வாழ்வின் முதல் படி. ஆகையால், அவர்களுக்கு கல்வியோடு அறிவுத்திறனை மேம்படுத்தும் போட்டிகளை நடத்த வேண்டும். விளையாட்டு அல்லது படிப்பில் வெற்றி, தோல்வி என்பது கிடையாது. எதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற பக்குவத்தை அவர்களுக்கு சொல்லித்தர வேண்டும். தந்தையோ, தாயோ கட்டாயம் குழந்தைகளை கண்காணிக்க வேண்டும். அவர்களிடம் தினமும் மனம் விட்டு பேச வேண்டும். எக்காரணமும் கொண்டு அவர்களின் மனம் புண்படும்படி பேசக்கூடாது. வாரம் ஒருநாள் அவர்களோடு வெளியிடங்களுக்கு செல்ல வேண்டும். அருகே உள்ள நூலகங்களுக்கு அழைத்து செல்லலாம். மேலும், அவர்கள் வாழ்க்கையை துணிவோடு எதிர்கொள்ள வீர வரலாற்று சம்பவங்கள், தன்னம்பிக்கை கதைகளை சொல்லி வளர்க்க வேண்டும். குழந்தைகளுக்கு முன் பெற்றோர் கடுமையாக சண்டையிடுவது கூடாது. இது அவர்களது மனதில் வன்முறை எண்ணத்தை வளர்க்கும். குடும்ப வாழ்வின் சிக்கல்கள், சிரமங்களை அவர்களிடம் பக்குவமாக தெரியப்படுத்த வேண்டும். மற்ற பிள்ளைகளுடன் எப்போதும் ஒப்பீடு செய்யவே கூடாது. இது அவர்களின் தன்னம்பிக்கையை குறைத்து விடும். அது மட்டுமல்ல… தான் வாழ்க்கையில் சாதிக்க நினைத்ததை பிள்ளைகளை செய்யச் சொல்லி கட்டாயப்படுத்தக்கூடாது. இது குழந்தைகளுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துவதோடு, அவர்களது சிந்தனையையும் கெடுத்து விடும். குழந்தைகள் பூ போன்றவர்கள். அவர்களை மெல்லிய மனதோடு அணுகுங்கள். அவர்களின் மழலை சிரிப்பில் நாம் மனக்கஷ்டங்களை மறக்கலாம். குழந்தைகளை நேசிப்போம்.
காமராஜர் அகில இந்திய காங்கிரசின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட நாள்
நவம்பர் 20, 1963 -காமராஜர் அகில இந்திய காங்கிரசின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட நாள் மூன்று முறை (1954–57, 1957–62, 1962–63) முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த காமராசர், பதவியை விடத் தேசப்பணியும் கட்சிப்பணியுமே முக்கியம் என்பதை மக்களுக்கும் குறிப்பாகக் கட்சித் தொண்டர்களுக்கும் காட்ட விரும்பிக் கொண்டு வந்த திட்டம் தான் K-PLAN எனப்படும் ‘காமராசர் திட்டம்’ ஆகும். அதன்படி கட்சியின் மூத்த தலைவர்கள் பதவிகளை இளையவர்களிடம் ஒப்படைத்து விட்டுக் கட்சிப்பணியாற்றச் செல்ல வேண்டும் என்று இவர் நேருவிடம் சொன்னதை அப்படியே ஏற்றுக் கொண்டார் நேரு. இந்தத் திட்டத்தை முன்மொழிந்த கையோடு தன் முதலமைச்சர் பதவியைப் பதவி விலகல் செய்து – 2. அக்டோபர் 1963 – பொறுப்பினை பக்தவத்சலத்திடம் ஒப்படைத்து விட்டு டெல்லி சென்றார் காமராசர். அக்டோபர். 20 அன்று அகில இந்தியக் காங்கிரசின் தலைவர் ஆனார்.
நாடின் கார்டிமர் பிறந்த தினம்
தென்னாப்பிரிக்காவின் கலாச்சாரம், மக்கள், தற்காலப் பிரச்சினைகள் ஆகியவற்றை சார்ந்து ஏராளமான நூல்களை எழுதியதன் மூலம் புக்கர், நோபல் பெற்ற நாடின் கார்டிமர் பிறந்த தினம் இன்று. தென்னாப்பிரிக்க பெண் எழுத்தாளரான இவர் ஸ்பிரிங்க்சு என்ற ஊரில் பிறந்தவர். பெற்றோர் யூத இனத்தைச் சேர்ந்தவர்கள். கத்தோலிக்க கன்னியர் மடப் பள்ளியில் பயின் றார். பின்னர், விர்வாட்டர்ஸ் ரான்ட் பல்கலைக்கழகத் தில் பட்டப் படிப்பில் சேர்ந் தார். ஆனால், படிப்பைத் தொடர முடியவில்லை. தாயார், கருப்பின மக்கள் கல்வி பெற முடியாத நிலை கண்டு வருந்தி அவர்களுக்காக மழலையர் பள்ளியைத் தொடங்கியவர். தாயைப் போலவே இவரும் கருப்பின மக்களின் துன்பங்களைக் கண்டு வருந்தினார். பள்ளிப் பருவத்தில் நாட்டியம், நீச்சல், விளையாட்டில் ஆர்வம் கொண்டிருந்தார். ஆனால் இவரது இதயம் பலவீனமாக இருப்பதாக எண்ணிய தாயார் இவரை எதிலும் கலந்துகொள்ள விடாமல் வீட்டிலேயே பாதுகாப்பாக வைத்திருந்தார்.
தனியாக வீட்டுக்குள் அடைபட்டுக்கிடந்த இவர் கதைகளை எழுதத் தொடங்கினார். இவரது முதல் கதை 15-ம் வயதில் வெளியானது. 15 புதினங்கள் உட்பட மொத்தம் 24 நூல்கள் எழுதியுள்ளார். இவற்றில் 3 நூல்கள் நிறவெறி அரசால் தடைசெய்யப்பட்டன.இவரது சிறுகதைகளில் பல தொகுக்கப்பட்டு, “நேருக்கு நேர்” (Face to Face) என்ற பெயரில் 1947ல் பிரசுரம் செய்யப்பட்டது. அந்நாட்டின் இனவெறி கொள்கைகள் குறித்து, ஏராளமான கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவரது படைப்புகள் 40 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 15-க்கும் மேற்பட்ட கவுரவ முனைவர் பட்டங்கள் இவருக்கு வழங்கப்பட்டன. இவரது எழுத்துகள் பெரும்பாலும், தென்னாப்பிரிக்காவின் கலாச்சாரம், மக்கள், தற்காலப் பிரச்சினைகள் ஆகியவற்றை சார்ந்தே அமைந்திருந்தன. எழுத்துரிமை, பத்திரிகை சுதந்திரம் ஆகியவற்றுக்காகவும் குரல் கொடுத்தார். எச்.ஐ.வி./எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வையும் மக்களிடையே பரப்பினார். 1980களில் இனவெறிக்கு எதிரான போராளிகளுக்கு ஆதரவாக எழுதினார். பல ஆண்டுகள் சிறையில் இருந்து விடுதலைப் பெற்ற நெல்சன் மண்டேலாவை நேரில் சந்தித்து வாழ்த்து கூறினார்.
இளம் வயதில் கருப்பர் இன மக்களுக்கு ஆதரவாக எழுதத் தொடங்கிய இவர் இறுதி வரை தொடர்ந்து செய்துவந்தார். இவரது படைப்புகள் மூலம் தென்னாப்பிரிக்க வெள்ளையின அரசின் இனவெறியை வெளி உலகுக்கு அம்பலப்படுத்தினார். நாடின் தன் மகனுடன் இணைந்து 2 ஆவணப் படங்களையும் தயாரித்துள்ளார். 1974-ல் புக்கர் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது. ஏராளமான கவுரவப் பட்டங்களையும் விருதுகளையும் இவர் வென்றுள்ளார். 1991-ல் 88-ஆவது வயதில் இலக்கியத்துக்கான நோபல் பரிசை வென்ற இவர் 90-ஆவது வயதில் காலமானார்.
விண்வெளியில் சர்வதேச ஆய்வு மையத்தை அமைத்த தினம்
அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய யூனியன், ஜப்பான் உள்ளிட்ட 11 நாடுகள் இணைந்து விண்வெளியில் சர்வதேச ஆய்வு மையத்தை அமைத்த தினம் இன்று (1998). இங்கு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள் தங்கியிருந்து ஆய்வு செய்து வருகின்றனர். 6 மாதங்களுக்கு ஒருமுறை வீரர்கள் சென்று திரும்புகின்றனர்.
நீதிக்கட்சி நிறுவப்பட்ட நாள்
நவம்பர் 20, 1917 -நீதிக்கட்சி நிறுவப்பட்ட நாள் நீதிக்கட்சி – (Justice Party, ஜஸ்டிஸ் கட்சி) என்று அறியப்பட்ட தென்னிந்திய நல உரிமைச் சங்கம்(South Indian Liberal Federation, சவுத் இந்தியன் லிபரல் ஃபெடரேசன்) சென்னை மாகாணத்தில் செயல்பட்ட ஒரு அரசியல் கட்சி – டாக்டர் டி. எம். நாயர், பனகல் அரசர், பொப்பிலி அரசர், பி. டி. ராஜன், ஈ. வே. ராமசாமி மற்றும் தியாகராய செட்டி ஆகியோரால் நிறுவப்பட்ட நாள் அரசியலிலும் சமுதாயத்திலும் பிராமணர்களின் ஆதிக்கமே மேலோங்கியிருந்தை கருதி அதற்கு மாற்றாக பிராமணரல்லாதோருக்காக ஒரு அரசியல் அமைப்பை உருவாக்க நடந்த பல முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்திருந்தன. நீதிக் கட்சியின் உருவாக்கம் இத்தேவையை நிறைவேற்றியது. 1944ம் ஆண்டு இக்கட்சி கலைக்கப் பட்டது..
செல்மா லோவிசா லேகர்லாவ் பிறந்த தினம்
இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற உலகின் முதல் பெண்மணி, செல்மா லோவிசா லேகர்லாவ் பிறந்த தினம்.(நவம்பர் 20, 1858 – மார்ச் 16, 1940) சுவிடனைச் சேர்ந்த ஆசிரியர். இவர் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற உலகின் முதல் பெண்மணி. இவரின் சிறந்த படைப்பான நீலின் அற்புத சாகசங்கள் (The Wonderful Adventures of Nils) என்ற புத்தகம் குழந்தைகளுக்கிடையே பெரும் வரவேற்பை பெற்றது. 1858ம் ஆண்டு நவம்பர் மாதம் 20ம் நாள் சுவீடன் உள்ள வார்ம்லாண்ட் நகரில் எரிக் லூயிசே தம்பதிக்கு ஐந்தவது குழந்தையாக பிறந்தார். இவர் பிறக்கும் போதே இடுப்பில் காயத்துடன் பிறந்தார். சிறுவயதில் இரு கால்களின் இயக்கமும் பாதிக்கப்பட்டு பின்னர் சரியானது சிறு வயதிலிருந்தே புத்தகம் படிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டார். 1884ல் அவர் தந்தை நோய்வாய்ப்பட்டு அவர்கள் வீடு விற்கப்பட்டதைத் தொடர்ந்து குடும்பம் வறுமையில் வாழ்ந்தது. செல்மா 1882 முதல் 1885 வரை ஸ்டாக்ஹோமிலுள்ள ஆசிரியர் கல்லூரியில் பட்டம் பெற்றார்.பின், 1885ல் லாண்ட்ஸ்குரோனாவில் பெண்கள் பள்ளியில் ஆசிரியையாகச் சேர்ந்தர். அதிகக் கல்வியறிவு இல்லாத போதும் சிறுவயதில் அவர் படித்த கதைப் புத்தகங்கள் அவருக்கு கைகொடுத்தது. அப்பள்ளியில் சிறந்த கதை சொல்லும் ஆசிரியையாக திகழ்ந்தார். அவர் தன் முதல் நாவலைப் பள்ளியில் பணியாற்றிய போது எழுதத் தொடங்கினர். அதனை வெளியிட பிரெட்ரிகா லிம்நெல் என்ற பதிப்பாளர் உதவினார்.அதை தொடர்ந்து அவர் எழுதிய முதல் நாவலான ‘கோஸ்டா பெர்லிங்க்ஸ் சாகா’ இலக்கிய வட்டாரத்தில் மிகவும் பேசப்பட்டது. 1895ல் ஆசிரியைப் பணியை துறந்து எழுத்துப்பணிக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்.
இத்தாலி நாட்டுக்குச் சென்றவர் அங்கு கிறித்துவர்களுக்கும், சமுக அமைப்பாளர்களுக்கும் இடையே இருந்த பிராச்சனைகளை மையமாக கொண்டு ‘கிருத்துவ எதிர்ப்பாளரின் அதிசியங்கள்’ என்ற புத்தகத்தை எழுதினார்.1897ல் பாலென் நகருக்குச் சென்றவர் அங்கு வால்போர்க் ஒலேன்டர் என்பவரைச் சந்தித்தார். பெண்களின் முன்னேற்றத்திற்காக உழைத்த அவரைத் தன் உதவியாளராக வைத்துக் கொண்டார். #விருதுகள் 904ம் ஆண்டு [சுவீடன்] இலக்கிய கழகத்தின் தங்கப் பதக்கம் பெற்றார். 1907ல் உப்சலா பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம். 1909ம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றார். சுவிடன் இலக்கிய கழகத்தில் உறுப்பினரானார். 1904ம் ஆண்டு மார்ச் மாதம் 16ம் நாள் மரணமடைந்தார். அவர் வாழ்ந்த வார்ம்லாண்ட் இல்லம், இன்று அவருடைய நினைவிடமாக உள்ளது.
திப்பு சுல்தான் பிறந்த தினம்
திப்பு சுல்தான் ‘மைசூரின் புலி” என அழைக்கப்படும் திப்பு சுல்தான் 1750ஆம் ஆண்டு இதே நவம்பர் 20ஆம் தேதி இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள தேவனஹள்ளி என்ற இடத்தில் பிறந்தார். இளம் வயதிலேயே திறமைப்பெற்ற போர்வீரனாக வளர்ந்த இவர், சிறந்த ஆட்சியாளராகவும், நிர்வாகியாகவும் மற்றும் சமூக சீர்திருத்தவாதியாகவும் விளங்கினார். அக்காலத்திலேயே கலப்பின விதைகள், உயர்ரக பயிர்கள், கப்பல் கட்டும் தளம் மற்றும் போரில் ராக்கெட் தாக்குதல்களை பயன்படுத்தினார். ‘உயிர் பிரியும் நேரம் கூட தங்களுக்கு அடங்கி நடக்க வேண்டும்” என்று ஆங்கிலேயர் கூறியபோது, முடியாது என மறுத்து, கர்ஜனையோடு ‘ஆடுகளைப்போல் வாழ்வதை விட, புலியைப் போல் வாழ்ந்து மடியலாம்” என முழங்கியபடியே மரணம் அடைந்தார். தன்னுடைய கடைசி மூச்சு நிற்கும் வரை ஆங்கிலேயர்களை எதிர்த்து உறுதியுடன் போராடிய மாவீரன் திப்பு சுல்தான் 1799ஆம் ஆண்டு மே 4ஆம் தேதி மறைந்தார்.
