நைஜீரியாவின் “Gcon” விருதைப் பெற்றார் பிரதமர் நரேந்திர மோடி..!

 நைஜீரியாவின் “Gcon” விருதைப் பெற்றார் பிரதமர் நரேந்திர மோடி..!

பிரதமர் நரேந்திர மோடிக்கு நைஜீரியாவின் உயரிய விருதான ‘The Grand Commander of the Order of the Niger’ விருதை வழங்கி அந்நாட்டு அரசு கௌரவித்துள்ளது.

நைஜீரியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான “Gcon” விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கி அந்நாட்டு அரசு கௌரவித்துள்ளது. இந்த விருது கடந்த 1969 ஆம் ஆண்டு பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்துக்கு அளிக்கப்பட்டது. இதன்மூலம் ராணி எலிசபெத்துக்கு அடுத்தபடியாக இந்த விருதை பெறும் இரண்டாவது வெளிநாட்டு தலைவர் என்ற பெருமையை பிரதமர் நரேந்திர மோடி பெற்றுள்ளார்.

மேலும் பிரதமர் நரேந்திர மோடி பெறும் 17 ஆவது சர்வதேச விருதாக இந்த ‘The Grand Commander of the Order of the Niger’ விருது உள்ளது. பிரதமர் மோடி நைஜீரியா, பிரேசில் மற்றும் கயானா ஆகிய நாடுகளுக்கு ஐந்து நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நைஜீரியாவிற்கு சென்ற பிரதமர் மோடிக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து நாளை பிரேசில் செல்லும் பிரதமர் மோடி, “G20” மாநாட்டில் பங்கேற்கிறார். கடந்த ஆண்டு “G20” மாநாட்டை நடத்திய நாடு என்ற முறையில், இந்தியாவிற்கு “டிரோய்கா” உறுப்பினர் என்ற அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி, பல்வேறு நாடுகளுடனான உறவை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்படும் என்று பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

“G20” மாநாட்டை முடித்துவிட்டு, புதன்கிழமை கயானா செல்லும் பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் முகமது இர்ஃபான் அலியுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். கயானாவில் இந்தியா-கேரிகோம் மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் மோடி, கரீபியன் நாடுகளுடனான உறவை மேம்படுத்துவது மற்றும் புதுப்பிப்பது குறித்து ஆலோசனை நடத்த உள்ளார். அந்த மாநாட்டில், பிரதமர் மோடிக்கு கரீபியன் நாடுகளில் ஒன்றான டொமினிக்காவின் மிக உயரிய விருது வழங்கப்படவுள்ளது. கயானாவிற்கு செல்லும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை பெறும் பிரதமர் மோடி, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதுடன், இந்தியர்களுடனும் கலந்துரையாட உள்ளார்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...