சிறுவனின் இடது கண்ணுக்கு பதிலாக வலது கண்ணில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த யுதிஷ்டிர் என்ற 7 வயது சிறுவனின் இடது கண்ணில் அடிக்கடி நீர் வழிந்து வந்துள்ளது. இதனால், சிறுவனின் பெற்றொர் அவரை கிரேட்டர் நொய்டா பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிறுவனை சோதித்து பார்த்த மருத்துவர் ஆனந்த வர்மா, சிறுவனின் கண்னில் மெல்லிய பிளாஸ்டிக் போன்ற பொருள் இருப்பதாகவும், சிறிய அறுவை சிகிச்சை மூலம் அதனை அகற்றிவிடலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, பெற்றோரின் சம்மதத்துடன் சிறுவனின் கண்ணில் நேற்று முன்தினம் (நவ.12) அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிகிச்சை முடிந்து சிறுவனை வீட்டிற்கு அழைத்துச் சென்ற பெற்றோர் சிறுவனின் இடது கண்ணுக்கு பதிலாக தவறுதலாக வலது கண்ணில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதனையடுத்து, சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக சிறுவனின் பெற்றோர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரில், தவறுதலாக அறுவை சிகிச்சை செய்த மருத்துவரின் லைசென்ஸை ரத்து செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுவனின் பெற்றோர் அளித்த புகாரின் மூலம் இச்சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சிறுவனின் இடது கண்ணுக்கு பதிலாக வலது கண்ணில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
