“எனது உடல் நிலை சீராக உள்ளது” விண்வெளியில் இருந்து சுனிதா வில்லியம்ஸ்..!
சர்வதேச விண்வெளி மையத்தில் நீண்ட நாட்களாக உள்ளதால் உடல் எடை குறைந்துள்ளதாக வெளியான தகவலை மறுத்துள்ள விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், ‘ முன்பு இருந்ததை விட தற்போது நலமாக உள்ளேன்’,என விளக்கமளித்து உள்ளார். ஆய்வுக்காக சர்வதேச விண்வெளி மையத்திற்கு நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் போயிங் ஸ்டார் லைனர் விண்கலத்தில் சென்றனர். ஆனால், விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இருவரும் பல மாதங்களாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கி உள்ளனர். இதனால், இருவரும் 2025ம் ஆண்டு பிப்., மாதம் தான் பூமிக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் நீண்ட நாட்களாக விண்வெளி மையத்தில் இருக்கும் அவரின் உடல் எடை குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளதாகவும், மன அழுத்தத்தில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை நாசா மறுத்தது. இந்நிலையில், சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து மீடியா ஒன்றுக்கு சுனிதா வில்லியம்ஸ் அளித்த பேட்டியில் கூறியதாவது: உடல்நிலையில் எந்த பிரச்னையும் இல்லை. மைக்ரோ கிராவிட்டி காரணமாக உடலில் ஏற்படும் வழக்கமான மாற்றங்கள் காரணமாக எடை குறைந்தது போன்று காட்சியளிக்கிறது. சர்வதேச விண்வெளி மையத்திற்கு வந்த போது என்ன உடல் எடை இருந்ததோ அதே எடை தான் உள்ளது. எனது உடல் நிலை சீராக உள்ளது. இதனை பேணுவதற்காக தினமும் உடற்பயிற்சி செய்து வருகிறேன். பளூதூக்குதல் பயிற்சி என்னை மாற்றி உள்ளது. இதனால், எனது கால்கள் வலுவடைந்துள்ளன. முன்பு இருந்ததை விட தற்போது நலமாக உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.