வலுவிழந்தது காற்றழுத்த தாழ்வுப்பகுதி..!

 வலுவிழந்தது காற்றழுத்த தாழ்வுப்பகுதி..!

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, வட தமிழகத்தை ஒட்டிய கடலோர பகுதியில் நிலை கொண்டிருந்தது. இந்நிலையில் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதனால் சென்னை பெரும் மழையிலிருந்து தப்பியிருக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் தொடங்கி டிசம்பர் வரை வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகிறது. இது சில நேரங்களில் மட்டுமே புயலாக வலுப்பெறுகிறது. மற்ற நேரங்களில் வலுவிழந்துவிடுகிறது. கடந்த அக்டோபர் மாதம் கூட இதே போலத்தான் நடந்தது. அதாவது வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி கொஞ்சம் கொஞ்சமாக வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்தது. இது பின்னர் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும், காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெற்றது. பின்னர் இது சென்னை மற்றும் தெற்கு ஆந்திரா நோக்கி நகரும் என கணிக்கப்பட்டது.

எனவே சென்னைக்கு அதி கனமழை குறித்த ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது. ரயில்களும், விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. வேளச்சேரி மக்கள் தங்கள் கார்களை மேம்பாலத்தில் நிறுத்தி வைத்தனர். ஆனால் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தெற்கு ஆந்திராவை நோக்கி சென்றுவிட்டது. இப்படி இருக்கையில் தற்போது புதியதாக வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியிருந்தது. இது மெல்ல வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திராவை நோக்கி நகர்ந்தது.

இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. இக்காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுவடையுமோ? என்கிற அச்சம் எழுந்து வந்த நிலையில், தாழ்வு மையம் வலுவிழந்தவிட்டது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மழையின் தீவிரம் குறையும் என்றும் கூறியுள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கையில், “வடதமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல கேரள கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. எனவே, இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24* செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்” என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...