பிரசவ வலி ஏற்பட்ட கர்ப்பிணியை 6 கி.மீ. சுமந்து சென்ற சிஆர்பிஎஃப் வீரர்கள்….
பிரசவ வலி ஏற்பட்ட கர்ப்பிணிப் பெண்ணை மருத்துவமனையில் அனுமதிக்க அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த சிஆர்பிஎஃப் வீரர்கள் சுமார் 6 கி.மீ தூரம் சுமந்து சென்றனர்.
சத்தீஸ்கர் மாநிலம் பிஜபூர் மாவட்டத்தை அடுத்த பின்தங்கிய படேடா கிராமத்தை ஒட்டியுள்ள வனப்பகுதியில் சிஆர்பிஎஃப் வீரர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த கிராமத்தில் இருந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
ஆனால், அங்கு மருத்துவமனை அல்லது போதிய மருத்துவ சேவைகள் இல்லை. இதனால் அப்பகுதி மக்கள் சிஆர்பிஎஃப் உதவியை நாடினர். இதையடுத்து அங்கு விரைந்த சிஆர்பிஎஃப் வீரர்கள், கர்ப்பிணிப் பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டிருப்பதை கண்டறிந்தனர்.
மேலும் அங்குள்ள இடர்பாடுகளை பெரிதுபடுத்தாமல், உடனடியாக முதலுதவி சிகிச்சை அளித்து, கர்ப்பிணியை 6 கி.மீ. தூரம் சுமந்து முக்கிய சாலைக்கு சென்றடைந்தனர். அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வாகனத்தில் கர்ப்பிணியை ஏற்றி பிஜபூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.