உச்சநீதிமன்றத்தின் 51வது தலைமை நீதிபதியாக ‘சஞ்சீவ் கன்னா’ இன்று பதவியேற்பு..!
உச்சநீதிமன்றத்தின் 51வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா இன்று பதவியேற்றுக்கொண்டார்.
உச்சநீதிமன்றத்தின் 50-வது தலைமை நீதிபதியாக கடந்த 2022-ஆம் ஆண்டு நவம்பர் 9-ஆம் தேதி முதல் பதவிவகித்து வந்த டி.ஒய்.சந்திரசூட் நேற்றுடன் ( நவ – 10ம் தேதி) ஓய்வுபெற்றார். இதனைத் தொடர்ந்து, மிக மூத்த நீதிபதியான சஞ்சீவ் கன்னாவை அடுத்த தலைமை நீதிபதியாக நியமிக்க அவர் ஏற்கனவே பரிந்துரை செய்திருந்தார். அதை ஏற்று, புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னாவை கடந்த மாதம் 24-ந் தேதி மத்திய அரசு நியமித்தது.
இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் 51-வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா இன்று பதவியேற்றுக்கொண்டார். குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில், அவருக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்வில், குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், உச்சநீதிமன்ற நீதிபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அடுத்த ஆண்டு மே 13-ஆம் தேதியுடன் சஞ்சீவ் கன்னாவின் பதவிக் காலம் நிறைவடையவுள்ள நிலையில் 6 மாதங்கள் மட்டுமே அவர் தலைமை நீதிபதியாக பதவி வகிப்பார்.