வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது ஜிசாட்-30

 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது ஜிசாட்-30

தகவல் தொடர்பு சேவைக்கான இஸ்ரோவின் ஜிசாட் – 30 செயற்கைக்கோள் பிரெஞ்ச் கயானாவில் இருந்து இன்று அதிகாலை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது

   இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவின் ஜிசாட்-30 செயற்கைக்கோள், பிரெஞ்சு கயானாவில் உள்ள கவ்ரவ் ஏவுதளத்தில் இருந்து திட்டமிட்டப்படி இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 2.35 மணியளவில் விண்ணில் ஏவப்பட்டு, புவிசுற்றுவட்டப் பாதையில், வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. 

   2020 ஆம் ஆண்டில் இஸ்ரோ தனது முதல் செயற்கைகோளான 3,357 கிலோ எடை கொண்ட ஜிசாட்30 செயற்கைக்கோள், இன்று அதிகாலை 2.35 மணியளவில் தென்அமெரிக்காவில் உள்ள பிரெஞ்சு கயானாவில் இருந்து, அதிக எடையை சுமந்து செல்லும் ஏரியான்-5 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது.

   திட்டமிட்டப்படி சரியான பாதையில் சென்ற ஏரியான்-5 ராக்கெட், புறப்பட்ட 38-வது நிமிடத்தில், புவிசுற்றுவட்டப் பாதையின், திட்டமிட்ட இலக்கில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. 

   ஒளிபரப்பு மற்றும் தொலைத்தொடர்பு சேவைகளுக்கு பயன்படும் வகையில், இன்சாட்4ஏ செயற்கைக்கோளுக்கு பதிலாக,  ஜிசாட்30 விண்ணில் ஏவப்பட்டுள்ளது. இது, 3,357 கிலோ எடை கொண்டது. தொலைதொடர்பு, டிடிஎச், விசாட் மற்றும் டிஜிட்டல் சேவைகளுக்கு உதவி புரியும். இதன், ‘கியூ பேண்டு’ டிரான்ஸ்பாண்டர் இந்திய நிலப்பரப்பு மற்றும் தீவுகளின் பாதுகாப்பையும், ‘சி பேண்டு’ டிரான்ஸ்பாண்டர், வளைகுடா நாடுகள், ஏராளமான ஆசிய நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியாவை உள்ளடக்கிய பகுதிகளுக்கு விரிவாக்கப்பட்ட பாதுகாப்பு சேவைகளுக்கு துணைபுரியும் என இஸ்ரோ கூறியுள்ளது. 

   மேலும், மேம்பட்ட தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டு, வெற்றிகரமாக புவிசுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ள ஜிசாட்-30 செயற்கைக்கோளின் ஆயிட்காலம் 15 ஆண்டுகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...