கலைவாணர் எனும் மாகலைஞன் – 10 – சோழ. நாகராஜன்

 கலைவாணர் எனும் மாகலைஞன் – 10 – சோழ. நாகராஜன்
10 ) முதல் சினிமா வாய்ப்பிலேயே
முழங்கிய உரிமைக்குரலும்…

உலகமே வியக்க, உலகம் முழுதும் சினிமா பேசத்தொடங்கிய அந்த அதிசயப் பொழுதென்பது கலை உலக வரலாற்றில் அழுத்தமாகக் குறிக்கத்தக்கதாகவே இருந்தது. அதற்கு முன்னர் சினிமா பேசாமல், ஒலியேதும் எழுப்பாமல் மௌனப்படமாக மட்டுமே பெரும்பாலும் மக்கள் நன்கு அறிந்திருந்த புராணக் கதைகளையே எடுத்தார்கள். பேசாத சினிமாக்களை ரசிகர்கள் பார்த்துப் புரிந்துகொள்ள அவர்களுக்குத் தெரிந்த கதைகளைப் படமாக்குவது அன்றைய அவசியத் தேவையாக இருந்தது. அல்லது சண்டைகள் நிறைந்த மேற்கத்திய பாணி படங்களையும் ரசிகர்கள் வசனங்களின்றி ரசித்ததால் அப்படியான படங்களும் அன்றைக்கு உருவாக்கப்பட்டன. அவ்வாறு பேசாத சினிமாக்களாக தென்னிந்தியாவில் மட்டும் சுமார் 108 படங்கள் தயாரிக்கப்பட்டன.

மௌனப் படங்களின் காலத்தில் தமிழகத்தில் மிகவும் பெயர்பெற்ற உச்ச நட்சத்திரங்கள் யார் யார் தெரியுமா? இவர்கள் தான். பாட்லிங் மணி மற்றும் ஸ்டண்ட் ராஜூ ஆகியோர். இந்த இருவரின் படங்களென்றால் ரசிகர்களுக்கு ஏக மகிழ்ச்சி. ஆனால், பெண்கள்தான் நடிக்க முன்வரவேயில்லை. காமிரா லென்ஸ் முன் நின்று நடித்தால் அவர்களின் அழகும் உடல் நலனும் கெட்டுவிடும் என்று அந்நாளில் ஒரு நம்பிக்கை இருந்ததே இதற்குக் காரணம். இதனால் ஐரோப்பியப் பெண்கள், ஆங்கிலோ இந்தியப் பெண்கள் பலரும் நம்முடைய புராணப் பாத்திரங்களாகத் திரையில் தோன்றும்படி ஆனது.

1916 ல் தொடங்கி 1932 வரையில் தென்னிந்திய சினிமாவின் மௌனப் படங்களின் காலம் நிலவியது. நிலையான புகைப்படங்களையும் ஓவியங்களையும் கண்டு மகிழ்ந்து கொண்டிருந்த மக்களுக்கு அப்படங்கள் சலனப்பட்டது அதாவது அசைந்து அசைந்து இயங்கியதே பெரும் வியப்பைத் தந்தன. அசையும் படம்தான் அந்தப் பொருளில் மூவி ஆனது. மூவி (movie)  பேசத் தொடங்கியதும் டாக்கி (talkie) என்றானது. டாக்கி என்ற பேசும் படங்கள் தலைதூக்கத் தொடங்கியது
1931 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அர்தேஷிர் இரானி தயாரித்து வெளியிட்ட ஆலம் ஆரா படம்தான் இந்தியாவின் முதல் பேசும்படம். அது இந்தியில் பேசியது. அதனைத் தொடர்ந்து அதே ஆண்டு அக்டோபர் 31 ல் வெளியான காளிதாஸ் தமிழின் முதல் பேசும்படம். இதையும் உருவாக்கியதும்  இரானிதான்.
தமிழ்ப் படம் என்று சொல்லப்பட்டாலும் தெலுங்கிலும் பேசியது காளிதாஸ். படத்தின் கதாநாயகி டி.பி. ராஜலட்சுமி. நாயகி தமிழில் பேச, இதன் நாயகன் தெலுங்கில் பேசினார். சில துணை நடிகர்கள் இந்தியிலும் பேசினார்கள். மதுரகவி பாஸ்கரதாஸ் நாடகங்களுக்கு எழுதிய பாடல்கள் இந்தப் படத்தில் பயன்படுத்தப்பட்டன. இவ்வாறு உருவான பேசும் தமிழ்ப் படத்தைத் தொடர்ந்து பல படங்கள் உருவாக்கப்பட்டன.

அதுவரையில் மௌனப் படங்களையே பார்த்துவந்த ரசிகர்கள் சினிமா பேசத் தொடங்கியபோது பேரானந்தம் கொண்டார்கள். வியந்துபோனர்கள். திருவிழாபோல சினிமா அரங்கங்களில் குவியத் தொடங்கினார்கள். நாடகங்களை மவுசு இழக்கச் செய்தது பேசும் சினிமா. நொடித்துப்போன நாடகங்களின் கலைஞர்கள் சினிமாவில் பங்கேற்கப் போட்டிபோடத் தொடங்கினார்கள். இந்தச் சூழலில்தான் அப்போதுவரையில் பேசாத படங்களில் நடிப்பதை அத்தனை கௌரவமாகக் கருதாத நாடகக் கலைஞர்கள் சினிமா பேசத் தொடங்கியபோது இசையிலும் நடிப்பிலும் தேர்ச்சி பெற்றிருந்தவர்களாக பேசும்படத்தில் தங்கள் முகங்காட்டக் கிளம்பிவிட்டார்கள்.

அப்படிக் கிளம்பிய நாடகக் கலைஞர்களில் பி.பி.ரங்காச்சாரி, ஆர்.கிருஷ்ணமூர்த்தி, சி.எம்.துரை போன்ற நடிகர்களும், டி.பி.ராஜலட்சுமி, ஆர்.பி.லட்சுமிதேவி, ரத்னாபாய், சரஸ்வதிபாய், கே.டி.ருக்மணி, எம்.எஸ்.விஜயா போன்ற நடிகைகளும் பேசும் படங்களில் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வந்து பெரும் புகழ் பெற்றார்கள். பி.எஸ்.சீனிவாசராவ் என்பவர் அந்நாளில் பட்டதாரி நடிகர். எஸ்.ராஜம் படித்துக்கொண்டிருக்கும்போதே நடிக்க வந்தவர். இவ்வாறெல்லாமும் கவனமிருந்தது அன்றைய ரசிகர்கள் மத்தியில்.
அன்றைய துவக்க காலத்தில் பேசும் படங்களின் நகைச்சுவைக் கலைஞர்களாக புகழடைந்திருந்தவர்கள் எம்.எஸ்.முருகேசன், எம்.ஆர்.சுப்பிரமணிய முதலியார், கிளவுன் சுந்தரம், குண்டு குஞ்சிதபாதம் பிள்ளை, எம்.எஸ்.ராமச்சந்திரன்,ஜோக்கர் ராமுடு போன்றவர்கள். இக் காலகட்டத்தில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் இன்னமும் தன்னுடைய சினிமா பிரவேசத்தை நிகழ்த்தியிருக்கவில்லை. அதற்கான வேளை 1934 ல் எல்லிஸ் ஆர்,டங்கன் எனும் அமெரிக்க இயக்குநர் தமிழில் படமெடுக்க முன்வந்தபோதுதான் வந்தது.
ஆனந்த விகடன் இதழில் அதன் ஆசிரியரான எஸ்.எஸ்.வாசன் எழுதி வந்த தொடர்கதைதான் சதி லீலாவதி. பின்நாளில் அது புத்தகமாகவும் வந்தது. அந்தக் கதையைப் படமாக்க முடிவு செய்த மனோரமா பிலிம்ஸ் உரிமையாளர் மருதாசலம் செட்டியார் பணம் கொடுத்து அதனை வாசனிடமிருந்து விலைக்கு வாங்கினார்.
எம். கே.ராதா, டி.எஸ்.பாலையா, எம்.வி.மணி, எம்.ஜி.ராமச்சந்திரன் போன்றேரெல்லாம் அப்போதுவரையில் நாடக நடிகர்கள்தாம். இவர்களையெல்லாம் இந்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்தார்கள். படத்தின் பிரதான நகைச்சுவை நடிகராக எம்.எஸ்.முருகேசன் ஒப்பந்தம் செய்யப்பட்டார். நகைச்சுவை நடிகர்கள் கூட்டத்தில் ஒருவராக நடிக்க என்.எஸ்.கிருஷ்ணனும் அழைக்கப்பட்டிருந்தார்.
படத்தின் இயக்குநர் எல்லிஸ் ஆர்.டங்கன். அவர் ஒரு அமெரிக்கர். தமிழ் அறியாதவர். படத்தில் பங்குபெறும் கலைஞர்களை அழைத்து கதையின் காட்சிகள் பற்றி ஆலொசனை நடத்தினார் அவர். நகைச்சுவைக் காட்சி பற்றியும் பேச்சு வந்தது. அப்போது சினிமாவுக்குப் புதிதான கிருஷ்ணன் ஏதோ சொல்ல எழுந்தார். உடன் இருந்த மற்ற நடிகர்கள் அவரைத் தடுத்தார்கள்.
“நீ சும்மா இரு கிருஷ்ணா… நகைச்சுவைக் காட்சியைப் பற்றிய விவாதத்தில் தேவையான கருத்தைக் நம் சீனியர் காமெடியன் எம்.எஸ்.முருகேசன் சொல்லிடுவார். நீ உட்கார்…”
– என்று அவர் சட்டையைப் பிடித்திழுத்துச் சொன்னார்கள். கிருஷ்ணன் ஏதாவது ஏடாகூடமாகப் பேசி கிடைக்கப்போகும் சினிமா வாய்ப்பைக் கெடுத்துவிடுவாரோ என்ற அச்சம் சக கலைஞர்களுக்கு.
“நகைச்சுவைக் காட்சி பற்றி நடக்கும் இந்த விவாதத்தில் எனக்குப் பட்டதை நான் சொல்ல வேண்டும்…”
– கிருஷ்ணன் தீர்க்கமாகவும் அழுத்தமாகவும் அவர்களுக்குச் சொன்னார்.
ஆனாலும் மீண்டும் மீண்டும் அவரைப் பேச விடாமல் தடுத்தார்கள். இதைக் கவனித்த தமிழறியாத இயக்குநர் டங்கன் அங்கே என்ன தகறாறு என்று கேட்டார். அவருக்கு கிருஷ்ணனின் விழைவு என்னவென்று சொல்லப்பட்டது. அவரைப் பேச விடுங்கள் என்றார் டங்கன். கிருஷ்ணன் தன்னம்பிக்கை நிறைந்த கம்பீரத்தோடு சொன்னார்:
“நீங்கள் நகைச்சுவைக் காட்சியை எடுப்பதாக இருந்தால் அதனை நான் சொல்கிறபடிதான் எடுக்க வேண்டும். அதன் உள்ளடக்கம் என் முடிவின்படியே அமைய வேண்டும். அதனை நானே வடிவமைப்பேன்.”
வியந்துபோன டங்கன் யோசித்தார் சில கனம். இது முதல் பட வாய்ப்பு… எப்படியாவது சினிமாவில் முகங்காட்டிவிடவேண்டும் என்ற முனைப்போடு கலைஞர்களெல்லாம் வாய்ப்புக்காக வாய் மூடி உட்கார்ந்திருக்கும் நிலையில் தனக்கும் இது முதல் பட வாய்ப்பு என்ற யதார்த்த சூழலிலும்கூட இந்த இளைஞன் துணிந்து இந்தக் கருத்தைச் சொல்கிறான் என்றால் இவனுக்குள் ஏதோ ஒரு திறன் மறைந்துள்ளது என்று சிந்தித்தவராக எல்லிஸ் ஆர்.டங்கன் இப்படி பதில்  கூறினார்:
“இந்தப் படத்தில் இவர் நடிக்கும் நகைச்சுவைக் காட்சிகளை இவர் சொல்கிறபடியே எடுப்போம்.”
இப்படி முதல் பட வாய்ப்பின்போதே உரிமைக் குரல் எழுப்பிட இன்றுவரையில் வேறு எந்தக் கலைஞருக்குத் துணிவிருக்கும்?
அவர்தான் கலைவாணர்.
அவரது இந்தத் துணிச்சல்தான் இறுதிவரையில் சமூகச் சீர்திருத்தக் கருத்துக்கள் பொங்கிப் பிரவிகிக்கும்  அவரது நகைச்சுவைக் காட்சிகளுக்கு அடி நாதமாக இருந்தது. அதுவே  கலைவாணரென தமிழ் மக்கள் மகிழ்வோடு தலையில் தூக்கி வைத்துக்கொண்டு அவரைக் கொண்டாடும்படி செய்தது.
( கலைப் பயணம் தொடரும்)
பகுதி – 1 | பகுதி – 2 | பகுதி – 3 | பகுதி – 4 | பகுதி – 5 | பகுதி – 6 | பகுதி – 7 | பகுதி – 8 | பகுதி – 9 | பகுதி – 10 | பகுதி – 11 | பகுதி – 12 | பகுதி – 13 | பகுதி – 14 | பகுதி – 15 | பகுதி – 16 | பகுதி – 17 | பகுதி – 18 | பகுதி – 19 | பகுதி – 20 |

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...