தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..!
தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதேபோல், தெற்கு ஆந்திராவை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக, 2 நாட்களுக்கு தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் இன்று (நவ.1) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, தென்காசி, தூத்துக்குடி, நீலகிரி, கோயம்புத்தூா், திருப்பூா், ஈரோடு, கரூர், திருச்சி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.