2018ல் விவசாயிகள் தற்கொலையில் 2வது இடம் பிடித்த தமிழகம்!
புது தில்லி: 2018ம் ஆண்டில் இந்திய அளவில் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரம் முதல் இடத்திலும், தமிழகம் 2வது இடத்திலும் உள்ளன.
தேசிய குற்ற ஆவண காப்பகம் (என்சிஆா்பி) மிகத் தாமதமாக வெளியிட்ட புள்ளி விவரத்தில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில் விவசாயிகளின் தற்கொலை குறைந்திருப்பதாகவும், 6 மாநிலங்கள், 5 யூனியன் பிரதேசங்களில் ஒரு விவசாயி தற்கொலைக் கூட பதிவு செய்யப்பட வில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக என்சிஆா்பி சமீபத்தில் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: வேளாண் தொழிலில் ஈடுபட்டு வந்தவர்களில் 10,349 பேர் கடந்த 2018ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது கடந்த 2017ல் 10,655 ஆகவும், 2016ல் 11,379 ஆகவும் இருந்துள்ளது. அதே சமயம், 2017ம் ஆண்டிலும் 7 மாநிலங்கள், 5 யூனியன் பிரதேசங்களில் ஒரு விவசாயியின் தற்கொலையும் பதிவு செய்யப்படவில்லை.
நாடு முழுவதும் 2018ம் ஆண்டில் மட்டும் 1,34,516 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதில் 17,972 விவசாயிகளின் தற்கொலையுடன் மகாராஷ்டிரம் முதல் இடத்திலும், 13,896 விவசாயிகளின் தற்கொலையுடன் தமிழகம் இரண்டாவது இடத்திலும் உள்ளன.