ஊராட்சி தலைவரான துப்புரவு பணியாளர் சரஸ்வதி:
படிக்க வைக்க வசதி இல்லாத ஏழைப்பெற்றோரின் கடைசி மகள் சரஸ்வதி. கல்வித்தகுதி என்று எதுவும் இல்லை என்றாலும் ‘கு.சரசு’ என்று கையெழுத்திட மட்டுமே தெரியும்.பான்கார்டு இல்லை. வருமான வரிக்கணக்கை இதுவரை தாக்கல் செய்தது இல்லை. வருமான வரி கட்டும் அளவுக்கு வருமானம் இல்லை. மிகச் சமீப காலம் வரை துப்புரவுப் பணியாளராக இருந்தவர் சரஸ்வதி.சுமார் 20 ஆண்டுகள் தாம் துப்புரவுப் பணியாளராக இருந்த அதே ஊராட்சிக்கு, தற்போது தலைவர் ஆகியுள்ளார் 49 வயதாகும் சரஸ்வதி.விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட கான்சாபுரம் ஊராட்சியின் தலைவர் சரவாதியிடம் பேசியது
இந்தத் தேர்தலில் தலித் வேட்பாளர்களுக்கு கான்சாபுரம் ஊராட்சித் தலைவர் பதவி இட ஒதுக்கீடு செய்யப்பட்டது.போட்டியிட்ட எட்டு வேட்பாளர்களில் வெற்றி பெற்றவர் சரஸ்வதி. அவருடனான உரையாடலில் இருந்து.
தேர்தலில் போட்டியிட முடிவு செய்தது ஏன்?
2016-இல் உள்ளாட்சித் தேர்தலில் எங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டபோதே அதில் நான் போட்டியிட வேண்டும் என எங்கள் பகுதி மக்கள் கேட்டுக்கொண்டனர். அப்போதே துப்புரவுப் பணியில் இருந்து விலகிவிட்டேன்.