இலங்கை சட்டத் திருத்தம் சிறுபான்மையினர் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் முயற்சியா?

இலங்கையின் அரசியலமைப்பில் 21ஆவது திருத்தத்தை மேற்கொள்வதற்கான தனிநபர் சட்டமூலமொன்று நாடாளுமன்றுக்குக் கொண்டு வரப்படவுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ஷ இந்த சட்டமூலத்தை சமர்ப்பிக்கவுள்ளார்.இதற்குரிய வர்த்தமானி அறிக்கை கடந்த டிசம்பர் மாதம் 30ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல் மாவட்டமொன்றில் நடைபெறும் தேர்தலொன்றில், உறுப்பினர் ஒருவரை பெறுவதற்கான தகுதியாக, குறித்த மாவட்டத்தில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 5 சதவீதத்தினை, கட்சி அல்லது சுயேட்சை குழுவொன்று பெறவேண்டும் எனும் தற்போதைய சட்டத்தை, 12.5 சதவீதம் பெற வேண்டும் என மாற்றுவதற்காகவே 21ஆவது திருத்தம் கொண்டு வரப்படவுள்ளது.

இந்த நிலையில் மேற்படி திருத்தம் மேற்கொள்ளப்பட்டால், சிறுகட்சிகளும், சிறுபான்மை சமூகங்களும் நாடளுமன்ற உறுப்பினர்களை பெறுவதில் பாரிய தடை எதிர்கொள்ள நேரிடும் என அஞ்சப்படுகிறது.
குறிப்பாக இந்த திருத்தத்தினால் தமிழர் மற்றும் முஸ்லிம்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவ எண்ணிக்கை பாரிய அளவில் குறையும் என்றும், அவ்வாறானதொரு நிலையை ஏற்படுத்தும் உள்நோக்கத் துடனேயே இந்தத் திருத்தம் கொண்டுவரப்படுவதாகவும் சிறுபான்மை சமூகத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.எவ்வாறாயினும் தேர்தலின்போது மாவட்டமொன்றில் நாடாளுமன்ற உறுப்பினரொருவரைப் பெறுவதற்கான வெட்டுப் புள்ளி 12.5 சதவீதமாகவே இருத்தல் வேண்டும் என்று, 1978ம் ஆண்டின் அரசியலமைப்பு உருவாக்கப்பட்டபோது அதன் 99ஆவது உறுப்புரையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதாவது 1978ஆம் ஆண்டின் அரசியலமைப்பின் 99(5)(அ) உறுப்புரை பின்வருமாறு குறிப்பிடப்படுகிறது: “ஏதேனும் தேர்தல் மாவட்டத்தில் நடைபெறும் ஏதேனும் தேர்தலில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் எட்டிலொன்றுக்குக் குறைவான வாக்குகளைப் பெறும் ஒவ்வோர் அங்கீகரிக்கப்பட்ட அரசியற் கட்சியும், சுயேட்சைக் குழுவும் அந்தத் தேர்தல் மாவட்டத்துக்கு அதனது வேட்பாளர் எவரையும் தேர்ந்தனுப்பத் தகைமையிழத்தல் வேண்டும்”.

அதாவது அந்த மாவட்டத்தில் அளிக்கப்பட்ட வாக்குகளில் 12.5 வீதத்துக்ம் அதிகமான வாக்குகளைப் பெறும் தரப்பினரே, உறுப்பினர்களைப் பெறுவதற்கான தகைமையைப் பெறுவர் என்று, அரசியலமைப்பின் மேற்படி உறுப்புரை கூறுகின்றது.
ஆனால் 1988ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக, அரசியலமைப்பில் மேற்கொள்ளப்பட்ட 15வது திருத்தத்தின் மூலமாக, தேர்தல் மாவட்டமொன்றில் நாடாளுமன்ற உறுப்பினரொருவரைத் தெரிவு செய்வதற்கான மேற்படி வெட்டுப் புள்ளி 12.5 எனும் வீதத்திலிருந்து 5 வீதமாகக் குறைக்கப்பட்டது. 1988ம் அண்டு ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிட்ட அப்போதைய பிரதம மந்திரி ரணசிங்க பிரேமதாஸவின் முயற்சியினால் இந்த திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

ஜனாதிபதி தேர்தலில் தனக்கு ஆதரவு வழங்குமாறு ரணசிங்க பிரேமதாஸ, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அப்போதைய தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் இடம் கேட்டபோது, அதற்குப் பகரமாக சில கோரிக்கைகளை நிறைவேற்றித்தர வேண்டும் என, அஷ்ரப் கூறினார். 
அதில் ஒன்றுதான்; தேர்தல் மாவட்டமொன்றில் நடைபெறும் தேர்தலொன்றில் உறுப்பினரொருவரைத் தெரிவு செய்வதற்கான வெட்டுப் புள்ளியை 5 வீதமாகக் குறைக்க வேண்டும் என்பதாகும். அந்தக் கோரிக்கையை ரணசிங்க பிரேமதாஸ நிறைவேற்றிக் கொடுத்ததை அடுத்து, 1988ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், அவருக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவளித்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தப் பின்னணியிலேயே, தற்போது – நாடாளுமன்ற உறுப்பினரொருவரைத் தெரிவு செய்வதற்கான வெட்டுப் புள்ளியை மீண்டும் 12.5 வீதமாக அதிகரிப்பதற்கான தனிநபர் திருத்தச் சட்டமூலம் கொண்டுவரப்படவுள்ளது.
குறித்த சட்டத்திருத்தம் அமலாக்கப்பட்டால் எல்லா சமூகங்களினதும், சிறு குழுக்களினதும் – பிரதிநிதித்துவத்துக்கும் பங்குபற்றுதலுக்குமான உரிமை (Right to representation and participation) பாதிக்கப்படும் என்கிறார் சிரேஷ்ட சட்டத்தரணி எம்.எம். பஹீஜ். 

நாடாளுமன்றில் தனியொரு கட்சி பெரும்பான்மை பெறமுடியாத நிலை இருப்பதற்கான காரணம், நாடாளுமன்ற உறுப்பினரொருவரைத் தேர்தலொன்றில் தெரிவு செய்வதற்கான வாக்குகளின் வெட்டுப்புள்ளி 5 வீதமாக இருப்பதுதான் காரணமாகும்.
5 வீதம் எனும் வெட்டுப்புள்ளி 12.5 வீதமாக்கப்பட்டால் சிறிய கட்சிகள் நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெற முடியாது போகும். அப்போது பெரிய கட்சிகள் நாடாளுமன்றில் பெரும்பான்மையை இலகுவாகப் பெற்றுக் கொள்ள முடியும் என்பதால்தான் இந்த திருத்தம் கொண்டுவரப்படுவதாக நம்புகிறேன்.இன்னுமொரு வகையில் சொன்னால் நாடாளுமன்றத்தில் ஆட்சியமைப்பதற்கு சிறிய மற்றும் சிறுபான்மை இனத்தவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளை, பெரிய கட்சிகள் நம்பியிருக்கும் நிலையை இல்லாமல் செய்வதே இந்தத் திருத்தத்தின் நோக்கமாகும்.

இலங்கையென்பது தனி பௌத்த ராஜியம் என்கிற கோட்டைக் கொண்டவர்கள், தாங்கள் ஆட்சியமைக்கும் போது சிறுபான்மையினரின் உதவியில் தங்கியிருக்கக் கூடாது என்று நினைக்கிறார்கள். அந்த நிலையை ஏற்படுத்தும் ஒரு முயற்சியாகவும் இந்த சட்டத் திருத்தத்தைப் பார்க்க முடிகிறது” என்றும் சட்டத்தரணி பஹீஜ் விவரித்தார்.
“இந்ந சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு நாடாளுமன்றத்தின் மூன்றில் இரண்டு ஆதரவு தேவை. ஆனாலும் பெரிய கட்சிகள் அனைத்தும் இந்த சட்டமூலத்தை ஆதரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஐக்கிய தேசியக் கட்சியும் இதனை ஆதரிக்கும் என்றே நம்புகிறேன். 12.5 எனும் வெட்டுப் புள்ளியை அரசியலமைப்பினூடாக அறிமுகப்படுத்தியவர்களே ஐக்கிய தேசியக் கட்சியினர்தான். மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ள சிறிய கட்சிகள் முன்வைக்கும் கோரிக்கைகளினால் ஐக்கிய தேகியக் கட்சிதான் அண்மைக் காலங்களில் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் தனியார் திருமண சட்டத்தை நீக்குவதற்கான சட்டமூலமொன்றினை நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் முன்வைக்கவுள்ளார். அதேபோன்று திருமணத்துக்கான ஆகக்குறைந்த வயதை 18ஆக மாற்றுவதற்கான சட்டமூலமொன்றினை நாடாளுமன்ற உறுப்பினர் துஷித விஜேமன்ன கொண்டுவரவுள்ளார். இதன் தொடர்சியாகவே, தேர்தலொன்றில் நாடாளுமன்ற உறுப்பினரொருவரைத் தெரிவு செய்வதற்கான வெட்டுப் புள்ளியை 12.5 ஆக அதிகரிப்பதற்கான சட்டமூலத்தினையும் பார்க்க வேண்டியுள்ளது. இவை அனைத்தும் முஸ்லிம் சமூகத்துக்கு எதிரானவையாகவே உள்ளன.தேர்தலொன்றில் உறுப்பினரொருவரைத் தெரிவு செய்வதற்கான வெட்டுப் புள்ளி 12.5 வீதமாக அதிகரிக்கப்பட்டால், தமிழர்களை விடவும் முஸ்லிம்களே அதிகம் பாதிக்கப்படுவர். அதனால்தான், 12.5 வீதமாக இருந்த வெட்டுப் புள்ளியை 5 வீதமாகக் குறைக்குமாறு முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் அஷ்ரப் கோரிக்கையினை முன்வைத்து, பிரேமதாஸவிடம் அதனை வென்றெடுத்தார்” என்றார் அவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!