தியான கல்லறையும்– பகல் கனவு படுக்கையும்…
தியான கல்லறையும்– பகல் கனவு படுக்கையும்…
“நான் செத்து தொலையிறேன்” என்று கோபத்தில் சொன்னால்கூட வாயிலேயே இரண்டு அடி அடித்து, “இது என்ன பேச்சு ?விளையாட்டுக்கு கூட இப்படி பேசி பழக கூடாது!! நல்ல நாளும் அதுவுமா இப்படியா பேசுறது?” என்பன போன்ற திட்டுக்களையும் வீட்டுப் பெரியவர்களிடம் இருந்து வாங்கி சுமக்க வேண்டும். இது நம்ம ஊரில். ஆனால் நெதர்லாந்தில் தேர்வு பயத்தை போக்குவதற்காக கல்லுரி ஒன்றே கல்லறை ஒன்றை உருவாக்கி இருக்கிறது என்றும் அந்த கல்லறை அனுபவத்தை பெற மாணவர்களும் வரிசையில் காத்திருக்கிறார்கள் என்று சொன்னால் நம்ப முடிகிறதா உங்களால்?
நெதர்லாந்து நாட்டில் நிஜ்மேகன் நகரில் உள்ள ராட்பவுட் பல்கலைக்கழகம் மாணவர்களின் தேர்வு குறித்த மன அழுத்தம், பயம் ஆகியவற்றிலிருந்து அவர்களை விடுவிக்கவும், அமைதியான மனநிலையோடு உகந்த வகையில் தேர்வுகளை,கல்வி முறையை எதிர் கொள்ளவும் அவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் ‘தியான கல்லறை’யை உருவாக்கியிருக்கிறது. அந்த பல்கலைக் கழக வளாகத்தில் உள்ள மாணவர்களுக்கான தேவாலயத்தின் பின்பகுதியில் இந்த திறந்த கல்லறை குழிகள் யோகா மற்றும் போர்வை விரிப்புகளுடன் தயார் செய்யப்பட்டு இருக்கின்றன. அவற்றில் ‘வித்தியாசமாக இருங்கள்’ அதாவது ‘STAY WEIRD’ என்ற வாசகங்களும் பொறிக்கப்பட்டிருக்கின்றன.
அந்த பல்கலைக்கழகத்திலேயே பணியாற்றக்கூடிய குறிப்பாக அந்த பல்கலைக்கழக வளாகத்தில் இருக்கின்ற மாணவர் தேவாலயத்தில் பணியாளராக இருக்கின்ற ஹாக்கிங் என்பவருடைய ஆலோசனைப்படியும் அவரது திட்டத்தின்படியும்தான் உருவாக்கப்பட்டிருக்கிறதுஇந்த தியான கல்லறைகள். இது குறித்து அவர், “ஒரு திறந்த கல்லறையில் தியானிப்பதன் வழியாக மாணவர்களுக்கு பூமியோடு இருக்கக்கூடிய நேரடி தொடர்பிற்கான காலநேரம் அதிகமாகிறது. காலப்போக்கில் அவர்கள் மரணத்தை பற்றியும் கூட பயமின்றி இருப்பார்கள். மனிதர்களுக்கு அதிக பயத்தை உருவாக்க கூடிய அந்த மரணத்தைக் கூட அவர்கள் துணிவாக எதிர்கொள்வார்கள்” என்று குறிப்பிடுகிறார்.
இந்த தியான கல்லறைக்கு‘memento mori’, ‘மெமன்டோ மோரி, என்கிற ஒரு லத்தீன் பெயரையும் அவர் கொடுத்திருக்கிறார். அதற்கு பொருள் ‘நினைவில் கொள்ளுங்கள்!! நீங்கள் இறந்து விடுவீர்கள்!!’ என்பதாகும். 30 நிமிடங்கள் முதல் மூன்று மணி நேரம் வரை இந்த திறந்த கல்லறைகளில் தியானம் செய்ய மாணவர்கள் முன் பதிவு செய்ய வேண்டும் என்பதும், அந்த முன் பதிவிற்காக மாணவர்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்கிறார்கள் என்பதும் கொஞ்சம் ஆச்சரியமானதாகத் தான் இருக்கிறது.
இந்த தியான கல்லறைகளோடு முடிந்து விடவில்லை அந்த பல்கலைக்கழகத்தின் ஆச்சரியங்கள் .இன்னுமொரு ஆர்வமூட்டும் ஆச்சரியமாக ‘பகல்கனவு படுக்கை’, ‘Daydream hammock’ என்ற ஒரு திட்டமும் நடைமுறையில் இருக்கிறது, அதாவது மாணவர்கள் அந்த பல்கலைக்கழக தோட்டத்தில் பசுமையான சூழலுக்கு மத்தியில் அமைக்கப்பட்டு இருக்கிற தொங்கும் படுக்கை போன்ற அமைப்புகளில் தளர்வாக படுத்துக்கொண்டு தங்களது மன அழுத்தத்தை குறைத்துக் கொள்ளலாம். அது ஒரு மனமகிழ்வு தளமாக பராமரிக்கப்படுகிறது.
பள்ளிக்கூடம், கல்லூரி, பல்கலைக்கழகம், என்றாலே புத்தகங்கள், படிப்பு, தேர்வு, பேராசிரியர்கள், சமீபத்தில் மன அழுத்தத்தால் வரக்கூடிய மரணங்கள் என்பது வரை மட்டுமே யோசிக்க முடிந்த நம் நாட்டின் கல்வி சூழலோடு ஒப்பிடும்போது உண்மையிலேயே இது முற்றிலும் மாறுபட்டதாக அதே சமயத்தில் இதுபற்றி அறிந்த மாணவர்களுக்கு ஏக்கத்தைக் தரக்கூடிய ஒரு திட்டமாகவே இருக்கிறது.
இது போன்ற விசித்திரமான திட்டங்களை தான் முன்னெடுக்க வேண்டும் என்பது அல்லாமல் மாணவர்களின் மன அழுத்தத்தை உண்டாக்கக்கூடிய வழிகள், அதிலிருந்து வெளிக்கொணர்வதற்கான வழிமுறைகள். ஆகியவற்றை பற்றி கல்வி நிறுவனங்கள் அவரவர்களின் சூழலுக்கேற்ப சில பயனுள்ள முறைகளை கையாண்டால் மாணவர்களின் ஆளுமை வளர்ச்சிக்கும் மனமகிழ்வுக்கும் பெரும் உதவியாக இருக்கும்.