திருப்பதி பிரம்மோற்சவ விழா இன்றுடன் நிறைவு

 திருப்பதி பிரம்மோற்சவ விழா இன்றுடன் நிறைவு

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வெகுவிமரிசையாக நடைபெற்று வந்த பிரம்மோற்சவ விழா இன்றுடன் நிறைவுபெற உள்ளது.

திருமலை, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வெகுவிமரிசையாக நடைபெற்றுவருகிறது. கடந்த மாதம் 30-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது முதல் தினந்தோறும் காலையிலும், மாலையிலும் மலையப்பசாமி வீதி உலா நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கருடசேவை கடந்த 4-ம் தேதி நடைபெற்றது. அங்கு லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.விழாவின் எட்டாம் நாளான நேற்று காலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் வெள்ளத்தில் திருத்தேரோட்டம் நடைபெற்றது. திருத்தேரில் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்பசாமி பவனி வந்து மாடவீதியில் கூடியிருந்த பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். தேரோட்டத்தின்போது யானை, குதிரை போன்றவை அணிவகுத்துச் சென்றது.

தேரோட்டத்தை முன்னிட்டு மக்கள் வெள்ளம் போல் அலை அலையாய் திரண்டனர். இதனால், விஐபி சிறப்புத் தரிசனம் ரத்து செய்யப்பட்டது. பக்தர்கள் பொது தரிசனத்தில் காத்திருந்து தரிசனம் செய்தனர். 

தொடர்ந்து, இரவு 8 மணி அளவில் அலங்கரிக்கப்பட்ட குதிரை வாகனத்தில் கல்கி அலங்காரத்தில் மலையப்பசாமி எழுந்தருளி நான்கு மாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கலியுகத்தில் கல்கி அவதாரம் எடுக்க இருப்பதை உணர்த்தும் வகையில் நடைபெற்ற இந்த வீதி உலாவை ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தரிசித்தனர்.

பிரம்மோற்சவத்தின் கடைசி நாளான இன்று (8-ம் தேதி) திருமலை கோவிலுக்கு அருகே உள்ள புஷ்கரணியில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெறுகிறது.இதன் பின்னர் இரவு 7 மணிக்கு தங்க கொடி மரத்தில் ஏற்றப்பட்டிருந்த கருட கொடி  இறக்கப்படுவதுடன் நடப்பு ஆண்டுக்கான பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...