தொடரும் ஆம்னி கட்டண கொள்ளைகள்.. பயணிகள் சோகம்! | தனுஜா ஜெயராமன்
தீபாவளி, பொங்கல் என்றால் மக்கள் மொத்தமாக சொந்த ஊருக்கு கிளம்புவார்கள். அவ்வளவு பேருக்கு சென்னையில் இருந்து ஊருக்கு செல்ல பேருந்து வசதிகள், ரயில் வசதிகள் கொஞ்சம் கூட போதவில்லை என்பதே நிஜம். வெளியூர்களுக்கு செல்லும் மக்கள் ஆம்னி பேருந்துகளை தான்அதிகம் விரும்புகிறார்கள். ஆனால் வழக்கமான நாட்களை விடஅதிகப்படியான கட்டணத்தை தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட விடுமுறை நாட்களில் அதிகமாக இருக்கும். வழக்கமான விடுமுறை நாட்களைவிட மிகஅதிகமாக இருக்கும்.
தீபாவளி பண்டிகையை ஒட்டி போக்குவரத்து துறையின் கோரிக்கையை ஏற்று இந்தாண்டு 5% ஆம்னி பேருந்து கட்டணம் குறைக்கப்பட்டதாகவும், கடந்த ஆண்டு 25% குறைக்கப்பட்டுள்ளதாக, மொத்தம் 2 ஆண்டுகளில் 30% ஆம்னி பேருந்து கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.
சென்னை முதல் கோயம்புத்தூர் வரை செல்லக்கூடிய ஆம்னி பேருந்துகளின் குறைந்தபட்ச கட்டணம் ரூ.1,725 முதல் அதிகபட்ச கட்டணமாக ரூ.2,874 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னை முதல் சேலம் வரை செல்லக்கூடிய ஆம்னி பேருந்துகளின் குறைந்தபட்ச கட்டணம் ரூ.1,363 முதல் அதிகபட்சம் கட்டணமாக ரூ.1,895 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னை முதல் திருநெல்வேலி வரை செல்லக்கூடிய ஆம்னி பேருந்துகளின் குறைந்தபட்ச கட்டணம் ரூ.1,960 முதல் அதிகபட்ச கட்டணமாக ரூ.3,268 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இவர்களால் இவ்வளவு பணத்தை செலவு செய்து ஊருக்கு போய் வர முடியாது என்பதால் சென்னையில் இருந்து ஊருக்கு செல்வது மிகவும் கடினம் என்கிறார்கள். சென்னை இருந்து திருச்சிக்கு 290 ரூபாய் அரசு பேருந்தில் ஆனால் ஆம்னி பேருந்து கட்டணம் 1800 ரூபாய் என்பது மிகஅதிகம் என்று நெட்டிசன்கள் குமுறுகிறார்கள்.
இப்படியே போனால் தீபாவளிக்கு ஊருக்கு போவதும் எட்டாக்கனியாகிவிடும் என்கிறார்கள் வெளியூர்வாசிகள்.