மறுபடியும் ஆட்சியை பிடிப்பாரா சந்திரசேகர் ராவ் ? தெலுங்கானா தேர்தல்! | தனுஜா ஜெயராமன்
தெலங்கானாவின் சட்டப்பேரவை தேர்தல் நவம்பர் 30ம் தேதியன்று ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. எதிர்வரும் தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில், முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் தலைமையிலான பாரத் ராஷ்டிர சமிதி ஆட்சியை மறுபடியும் தக்க வைக்குமா என தெரியவில்லை.
இம்முறை பாரத் ராஷ்டிர சமிதி , பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையே நிலவும் மும்முனை போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தெலங்கானா அரசின் கல்யாண லெட்சுமி திட்டத்தின்கீழ், பெண்ணின் திருமண செலவுக்காக மணமகளின் தாயின் வங்கி கணக்குக்கு ரூ.1,00,116 செலுத்தப்படும்.
பெண் வீட்டின் ஆண்டு குடும்ப வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருந்தால் மட்டுமே இந்த திட்டத்தின் பலனை பெற முடியும்.
ரைத்து பந்து திட்டத்தின்கீழ், பயிர்கள் நடவு நடக்கும் பருவமழையின்போது விவசாயிகளுக்கு உதவும் வகையில், ஒரு ஏக்கர் நிலத்துக்கு ரூ.5 ஆயிரம் அவர்களது வங்கி கணக்கில் மாநில அரசு செலுத்தும். இந்த திட்டத்தின்கீழ், 58 லட்சம் விவசாயிகள் பயன் பெறுகின்றனர். இத்திட்டங்கள் நல்ல பலன்களை தரவும் வாய்ப்புள்ளது.
அதே சமயம் வேலைவாய்ப்பின்மை விவகாரம் ராவுக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்றால், அசாதுதீன் ஓவைசி தலைமையிலான ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியும் முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தும் கூறப்படுகிறது.
தெலங்கானாவின் வேலையின்மை விகிதம் நாட்டின் சராசரி வேலையின்மை விகிதத்தை காட்டிலும் அதிகமாக உள்ளது. 2022-23 நிதியாண்டு கால தொழிலாளர் போர்ஸ் கணக்கெடுப்பு புள்ளிவிவரத்தின்படி, தெலங்கானாவின் வேலையின்மை விகிதம் 4.4 சதவீதமாக உள்ளது. அதேசமயம் நாட்டின் சராசரி வேலையின்மை விகிதம் 3.2 சதவீதம் மட்டுமே.
அரசின் கடன் அல்லாத வருவாய்க்கும், செலவுக்கும் இடையிலான வித்தியாசம் நிதிப் பற்றாக்குறையாகும். கடந்த சில ஆண்டுகளாக தெலங்கான அரசு நிதிப் பற்றாக்குறை தொடர்ந்து குறைத்து வருகிறது. இது நல்ல விஷயமாகும். 2021-22ம் நிதியாண்டில் தெலங்கானாவின் நிதிப் பற்றாக்குறை 4.06 சதவீதமாக இருந்தது. 2022-23ம் நிதியாண்டில் தெலங்கானாவின் நிதிப் பற்றாக்குறை 3.21 சதவீதமாக குறைந்தது. நடப்பு 2023-24ம் நிதியாண்டில் தெலங்கானாவின் நிதிப் பற்றாக்குறை 2.7 சதவீதமாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தல் நிலவரம் எப்படி இருக்கும் என்பதை பொறுத்தே வெற்றி வாய்ப்பு இருக்கும் என்கிறார்கள் அரசியல் ஆர்வலர்கள்.