பாஸ்மதி அரிசி குறைந்தபட்ச ஏற்றுமதி விலையில் மாற்றம் இல்லை… விவசாயிகள் கவலை! | தனுஜா ஜெயராமன்
சர்வதேச அளவில் அரிசி ஏற்றுமதி செய்யும் மிகப்பெரிய நாடாக இந்தியா விளங்குகிறது. பருவமழை தாமதத்தால் அரிசி உற்பத்தி குறையும் என்ற அச்சம் மற்றும் உள்நாட்டில் விலையை கட்டுக்குள் வைக்கும் நோக்கில், மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பாசுமதி அரிசி ஏற்றுமதிக்கு குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை நிர்ணயம் செய்தது.
பாசுமதி அரிசி ஏற்றுமதிக்கான குறைந்தபட்ச ஏற்றுமதி விலை ஒரு டன்னுக்கு 1,200 டாலர் என மத்திய அரசு நிர்ணயம் செய்தது.
புதிய பாசுமதி அரிசி வரவால் உள்நாட்டில் விலை குறையும் என்பதால் மத்திய அரசு பாசுமதி அரிசி ஏற்றுமதிக்கான குறைந்தபட்ச ஏற்றுமதி விலை (டன்னுக்கு) 1,200 டாலரிலிருந்து 950 டாலராக குறைக்கும் என்று எதிர்பார்த்தனர்.
அதாவது இந்த அடிப்படை விலைக்கு குறைவாக பாசுமதி அரிசியை ஏற்றுமதி செய்ய முடியாது. மத்திய அரசின் நடவடிக்கையால் உள்நாட்டு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக இத்துறையை சேர்ந்தவர்கள் கூறுகின்றனர்.
புதிதாக சாகுபடி செய்யப்பட்ட அரிசி சந்தைக்கு வந்தவுடன், குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை மத்திய அரசு குறைக்கும் என்று விவசாயிகள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் எதிர்பார்த்தனர்.
பின்னர் குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை தீவிரமாக பகுப்பாய்வு செய்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் பாசுமதி ஏற்றுமதிக்கான குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை மத்திய அரசு குறைக்கும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில் குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை குறைத்தால் விவசாயிகள் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கு உதவியாக இருக்கும் என்று வர்த்தக அமைப்புகள் தெரிவித்தன.
ஆனால் கடந்த 14ம் தேதியன்று அடுத்த அறிவிப்பு வரும் வரை குறைந்தபட்ச ஏற்றுமதி விலையில் மாற்றம் இருக்காது என்று அரசு தெரிவித்தது.