அஞ்சலகத்தில் மூத்த குடிமக்களுக்கு இவ்வளவு அதிக வட்டி வீதமா..! | தனுஜா ஜெயராமன்
அஞ்சல் அலுவலகத் திட்டங்கள், அனைத்துமே, மக்களிடையே சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசால் தொடங்கப் பட்டது தான் இந்த சிறு சேமிப்பு திட்டங்கள் அல்லது தபால் அலுவலக சேமிப்பு திட்டங்கள்.
இந்த திட்டத்தின் கீழ், தபால் அலுவலக சேமிப்பு கணக்கு, பொது வருங்கால வைப்பு நிதி, தேசிய சேமிப்பு சான்றிதழ், சுகன்யா சம்ரித்தி யோஜனா, 5 ஆண்டு மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம், ஐந்து ஆண்டு தொடர் வைப்பு கணக்கு போன்ற 9 வகையான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த 9 வகையான திட்டங்களுக்குமே மக்களிடம் பெரும் வரவேற்பு உள்ளது. 9 வகையான திட்டங்களும், ஒவ்வொரு வகையில் பலன் தரத்தக்கது.. இவைகளில் இணைவதற்கு அந்த திட்டங்களுக்கேற்றவாறு, விதிமுறைகள் உள்ளன.இதில் முக்கியமானது 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத்திட்டம்.
அஞ்சலக சேமிப்புத் திட்டங்களிலேயே இந்தத் திட்டத்திற்குத்தான் அதிக வட்டிதரப்படுகிறது. இதன் வட்டி விகிதம் 8.2% ஆகும்.
ஒருவேளை ஓய்வு பெற்ற அரசு ஊழியராக இருந்தால் 55 வயதுக்குப் பிறகும், ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியாக இருந்தால் 50 வயதுக்குப் பிறகும் இந்தத் திட்டத்தில் இணையலாம்.
குறைந்தபட்சமாக ஆயிரம் ரூபாயும், அதிகபட்சமாக 30 லட்சம்வரையும் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம். வட்டித்தொகை ஒவ்வொரு காலாண்டிற்கும் ஒருமுறை, சேமிப்பு கணக்கில் வரவு வைக்கப்படும்.
5 ஆண்டுகள் கால அளவு கொண்ட இந்தத் திட்டத்தில் இருந்து முதல் ஆண்டிலேயே வெளியேற நினைத்தால் வட்டி வழங்கப்படாது.
ஒருவேளை முந்தைய காலாண்டிற்கான வட்டி, சேமிப்பு கணக்கில் வரவு வைக்கப்பட்டிருந்தால் முதலீட்டுத் தொகையில் அந்தப் பணம் பிடித்தம் செய்யப்படும். ஓராண்டிற்கு பின்னரோ, 2 ஆண்டுகளுக்கு முன்னரோ வெளியேற நினைத்தால் முதலீட்டு தொகையில் 1.5% பிடித்தம் செய்யப்படும். அதன் பிறகு கணக்கை முடித்தால் 1% பிடித்தம் செய்யப்படும்.
இந்தத் திட்டத்தில் ஒரு லட்சம் முதலீடு செய்தால் 5 ஆண்டுகளில் உங்கள் கையில் 1,41,000 ரூபாய் இருக்கும்.
அதுவே உச்சபட்ச முதலீடான 30 லட்சம் முதலீடு செய்தால் 5 ஆண்டுகளில் உங்கள் கையில் 42,30,000 ரூபாய் இருக்கும்.
உங்கள் முதலீட்டிற்கான வட்டித்தொகை ஒரு நிதியாண்டில் ரூ.50,000 அதிகமாக இருந்தால் வரிப்பிடித்தம் செய்யப்படும்.
ஒருவேளை வருமான வரி செலுத்த வேண்டியதைவிட குறைவான வருமானமே ஈட்டக்கூடியவராக நீங்கள் இருந்தால் 15G/15H படிவங்களை முன்கூட்டியே சமர்பித்து இந்த வரிப்பிடித்தத்தையும் தவிர்க்கலாம்.