துவாரகாவில் ‘யஷோபூமி’ திறப்பு விழாவில் கலந்து கொள்கிறார் பிரதமர் மோடி! | தனுஜா ஜெயராமன்

 துவாரகாவில் ‘யஷோபூமி’ திறப்பு விழாவில் கலந்து கொள்கிறார் பிரதமர் மோடி! | தனுஜா ஜெயராமன்

பிரதமர் நரேந்திர மோடி அவரது பிறந்தநாளன்று செப்டம்பர் 17 ஆம் தேதி காலை 11 மணிக்கு டெல்லியில் உள்ள துவாரகாவில் ‘யஷோபூமி’ என்று அழைக்கப்படும் இந்திய சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையத்தின் (ஐ.ஐ.சி.சி) முதல் கட்டிடத்தை மக்களின் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கிறார்.

மொத்தம் 8.9 லட்சம் சதுர மீட்டருக்கும் அதிகமான பரப்பளவு மற்றும் 1.8 லட்சம் சதுர மீட்டருக்கும் அதிகமான மொத்த கட்டுமான பரப்பளவு கொண்ட ‘யஷோபூமி’ உலகின் மிகப்பெரிய எம்.ஐ.சி.இ (கூட்டங்கள், விழாக்கள், மாநாடுகள் மற்றும் கண்காட்சிகள்) மையமாக அமையும் என்கிறார்கள். சுமார் 5400 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட ‘யஷோபூமி’யில் அற்புதமான மாநாட்டு மையம், கண்காட்சி அரங்குகள் மற்றும் பிற வசதிகள் உள்ளன. 73 ஆயிரம் சதுர மீட்டருக்கும் அதிகமான பரப்பளவில் கட்டப்பட்ட மாநாட்டு மையம், பிரதான அரங்கம், பெரிய அளவிலான அரங்கு மற்றும் மொத்தம் 11,000 பேர் பங்கேற்கும் திறன் கொண்ட 13 கூட்ட அறைகள் உட்பட 15 மாநாட்டு அறைகளை இது கொண்டுள்ளது.

துவாரகாவில் ‘யஷோபூமி’ செயல்பாட்டுக்கு வருவதன் மூலம் நாட்டில் கூட்டங்கள், மாநாடுகள் மற்றும் கண்காட்சிகளை நடத்துவதற்கான உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பைக் கொண்டிருக்க வேண்டும் என்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வை வலுப்படுத்தப்படும்.

டெல்லி விமான நிலைய மெட்ரோ எக்ஸ்பிரஸ் பாதையை துவாரகா செக்டார் 21 முதல் புதிய மெட்ரோ நிலையம் ‘யஷோபூமி துவாரகா செக்டார் 25’ வரை நீட்டிப்பதற்கான பணிகளையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார்.

இந்த மாநாட்டு மையம் நாட்டின் மிகப்பெரிய எல்இடி மீடியா ஃபேகேட் (LED media façade) எனப்படும் ஒளிரும் முகப்பை கொண்டுள்ளது. மாநாட்டு மையத்தில் உள்ள மண்டபத்தில் சுமார் 6,000 விருந்தினர்கள் அமரும் வசதி உள்ளது.

இந்த அரங்கம் மிகவும் புதுமையான தானியங்கி இருக்கை அமைப்புகளை கொண்டுள்ளது. அரங்கில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்கள் இங்கு வருபவர்களுக்கு உலகத் தரம் வாய்ந்த அனுபவத்தை உறுதி செய்யும். எட்டு தளங்களில் அமைந்துள்ள 13 கூட்ட அரங்குகளில் பல்வேறு அளவிலான கூட்டங்களை நடத்த முடியும்.

தனுஜா ஜெயராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...