சுங்கச் சாவடி கட்டண உயர்வை கண்டித்து போராட்டங்கள்!| தனுஜா ஜெயராமன்
தமிழ்நாடு முழுவதும் சுங்கச் சாவடி கட்டண உயர்வை கண்டித்து பல்வேறு அமைப்பினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் மொத்தமுள்ள 54 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு இரண்டு பிரிவாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. திண்டுக்கல், திருச்சி, சேலம் , மேட்டுப்பட்டி, உளுந்தூர்பேட்டை, மதுரை, தூத்துக்குடி உட்பட 20 சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டது. ஏப்ரல் மாதம் குறிப்பிட்ட சுங்கச்சாவடிகளுக்கும், செப்டம்பர் மாதம் மீதமுள்ள சுங்கச் சாவடிகளுக்கும் ஆண்டுதோறும் கட்டணம் உயர்த்திக்கொள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
சுங்கச் சாவடிக் கட்டண உயர்வு எதிரொலியாக தமிழ்நாட்டின் பல இடங்களில் சுங்கச் சாவடியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். சுங்கச் சாவடியில் கட்டண உயர்வைக் கண்டித்து சுங்கச்சாவடியை முற்றுகையிட முயன்ற இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட பலரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் விக்கிரவாண்டி சுங்கச் சாவடியையும் முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது.